வச்சுக்கலாமுன்னும், வச்சிருக்கவங்களை எடுக்காண்டாமுன்னும் ரெண்டு வரி இருந்துதே... எட்வர்ட் சாருக்கு அதைப் படிக்கும்போது கண்ணு குருடாயிட்டா? இந்தப் பொண்ணு சம்பளம் வாங்கப் போறேன்னு சொன்னாளே, அப்ப மட்டும் காது செவிடாயிட்டா?"
எட்வர்ட் கண்களை வெட்டுக்கிளி போல் துள்ளவிட்ட போது, டெப்டி டைரக்டர் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் கேட்டார் :
"பெர்மிஷன் கேட்டு நீ ஒரு டிராப்ட் வச்சிருக்கலாமே எட்வர்ட்? நான் கையெழுத்துப் போட மாட்டேன்னா சொல்லுவேன்?”
"ஏற்கனவே ரெண்டு மூணு பேரு பெர்மிஷன் கேட்டு எழுதுனதுக்கு முடியாதுன்னு வந்துடுத்து."
"பத்து நாளைக்கு முன்னால் வேலைல சேர்ந்த ஹரிஹரனுக்கு கரெக்டா பணம் வந்துதே... அவரு சுந்தரேசன் சாருக்கு சொந்தக்காரன் என்கிறதுனாலயா?”
மோகன், இப்போதும் இருந்த இடத்தில் இருந்தபடியே தன்பாட்டுக்குப் பேசுவது போல் பேசினான். சரோசா ஏடி அருணாசலம் முன்னால் போய் நின்று பொறிந்து தள்ளினாள்:
"சார்! நீயும் நன்னாத்தான் நடிக்கே... எல்லா பில்லுக்கும் கையெழுத்துப் போட்டியே, என் பில்லு ஏன் வரலைன்னு கேட்டியா? ஒண்ணுந்தெரியாத பாப்பா மாதிரி பேசுறியே, ஒரு ஆபீஸ்ல எப்பேர்ப்பட்டவனுவ இருக்கானுவ... என்னென்ன சமாச்சாரம் நடக்குதுன்னு உன்னால பார்க்க முடியாட்டி நீயெல்லாம் என்ன ஸார் ஆபீசரு?"
எல்லோரும் கசாமுசாவாய் பேசிக் கொண்டிருந்தார்கள். இதுவரை குனிந்த தலையோடு - சொல்லப் பொறுக்காத ஏவல் செய்யும் தோரணையில் நடுங்கியபடியே பதிலளித்த சரோசா, இப்போது, அனைவரையும் நடுங்க வைத்ததில், அந்த அலுவலகப் பிரிவு அதிர்ந்தது. இந்த அனுபவம் அவர்களுக்குப் புதிது. இப்படிப்பட்ட கேஷுவல்களிடமும் அவர்கள் 'வாங்கி’ப் பழகியவர்கள்தான். ஆனால் இப்படியல்ல. இந்தச் சமயத்தில் சரோசா சாத்தப்பட்ட கதவுக்கு நீண்ட நெடிய தாழ்ப்பாள் போல் அதன் மேல் தன்னைச் சாய்த்துக் கொண்டாள். அப்போது வெளியே ஒரு ‘டொக்கு டொக்கு' சத்தம், "சரோசா... கதவைத் திற... எனக்காகத் திற."