எதுவும் பேசவில்லை. அதையே மவுன அனுமதியாக எடுத்துக் கொண்ட சரோசா, உடம்பு குலுங்க ஓடினாள். இடையிலே படியிறங்கி வந்த முனியம்மாவை வழிமறித்தாள். அவள் இவளைப் பார்த்து பயந்தது போல் கையில் இருந்த கவரை ஜாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டாள். இவளை விட ஐந்து வயது பெரியவள். இன்னும் கேஷ்வல்தான். ஆனால் அடுத்தமாதம் பெர்மனன்ட் ஆகிவிடுவாளாம். அடேங்கப்பா... நானும் இரண்டு வருஷம் பெர்மனன்ட் ஆகாம பேஜாருல இருக்கணும் போலிருக்கே.
"ஏய், முனிம்மாக்கா! எங்கே சம்பளம் கொடுக்காங்கோ? எனிக்கி 800 ரூபாய்க்கி மேல வரப் போகுது. நீயும் என்னோட வா. நான் பணம் கொடுக்குற இடத்த தேடிக் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னால போயிடப் போறாங்க. அப்பாடி, எட்டு நூறு ரூபா நோட்ட கையில பிடிக்கப்போறத நினைச்சி எம்மாம் சந்தோஷமா இருக்கு தெரியுமா முனிக்கா."
"முதல்ல ஒன்னோட 800 கிடக்கட்டும், மொதல்ல இருபது பைசா வச்சிருக்கியா?"
"இஸ்டாம்புக்கு. இருபது பைசா கொடுக்காட்டி அந்தக் கொள்ளிக்கட்ட முந்திரி கண்ணன் சம்பளம் தரமாட்டான்! அப்புறம் எனிக்கிக் கொஞ்சம் தாயேன். அடுத்த வாரம் கொடுத்துடறேன்.”
சரோசா, அவளைக் கண்டிப்புடன் பார்த்தாள். அப்படிப் பார்க்கப் பார்க்க அவளது தொய்வு விழுந்த முகமும், நெஞ்செலும்புக் கூடம் அவளை வருத்தின. பாவம் பிள்ளைகுட்டிக்காரி. 'ஆனாலும் தனக்குப் போகத்தான் தானம்.' "எக்கா, ஒரு நூறு ரூபா வேணும்னா தாறேன். ஆனால் அடுத்த வாரம் கொடுத்துடணும்.”
முனியம்மா, சரோசாவின் கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். இப்போது அவளே இவளை இழுத்துக் கொண்டு படியேறினாள். முதல் மாடியில் மூச்சிரைக்க நின்றார்கள். பிறகு மேல்மாடிக்கு ஏறி இரண்டாவது மாடிக்கு வந்தார்கள். ஒரு மூலை அறை, பாதிச்சுவருக்கு மேல் பாங்கில் இருப்பது மாதிரி வலை பின்னிய கதவு... அரைவட்ட வழி. உள்ளே மேஜைடிராவுக்குள் கத்தை கத்தையாய் நோட்டுக்கள். மேஜைமேல் ஸ்டாம்புகள் ஒட்டப்பட்ட ஒரு பெரிய ரிஜிஸ்டர். காஷியர், முனியம்மா சொன்னது மாதிரியே ஒரு முந்திரிக் கண்ணன். கண்ணில் கருவிழியையும் வெண்மைப் பகுதியையும் கண்டுபிடிக்க முடியாத கண்ணன். ஆனால், படுசுட்டி. ஒருத்தருக்கு ஒரு கத்தை நோட்டை எடுத்து முதலாவது நோட்டின் நம்பரையும், இறுதி நோட்டின் நம்பரையும் பார்த்துவிட்டுக் கொடுத்தான்.