அவரையே, கண் வாங்காமல் பார்த்தான். அந்த ஆசாமி அதை பைக்குள் வைக்கப்போன போது "எண்ணிப் பாருங்கள்" என்றான். அவர் "சரியாய்த்தான் இருக்கும்” என்று சொன்னபோது, அந்தக் கத்தை நோட்டை அவரிடமிருந்து கைப்பற்றி அவனே எண்ணிக் காட்டினான். இந்தச் சமயத்தில் வளையல் போட்ட கரம் ஒன்று, அந்தத் திரைவழிக்கு அடிக்கோலாய் ஆனபோது, அவன் எரிந்து விழுந்தான். “இந்தாம்மா, கொஞ்சம் எட்டி நில்லு. இன்னும்... இன்னும்... ஒனக்கு எதுக்கு பழிபாவம்."
சரோசா சற்று விலகி நின்றாள். முனியம்மா அவளை முன்னால் பிடித்துப் பிடித்துத் தள்ளினாள். ஆனாலும் எங்கிருந்தோ வந்த நான்கைந்து பேர் போவதற்காக அவள் காத்திருந்தாள். எல்லோருடைய கணக்கும் முடிக்கப்பட்டு, காஷியர் அந்தப் பிறைவடிவை மேலே இருக்கும் ஒரு பலகையை இழுத்து மூடிவிட்டு அந்தக் கம்பிவலைக் கண்கள் வழியாக சரோசாவைப் பார்த்துக் கேட்டார்:
“என்னம்மா... விஷயம்?"
"எனிக்கும் இன்னிக்கு சம்பள நாள் தானே சாரே? 810 ரூபா தேறும். ஏன் கொடுக்க மாட்டேங்கே?"
“ஒனக்கா, ஒனக்கு ஏது சம்பளம்? ஒன் செக்ஷனிலிருந்து பில்லே வரலியே. நானே எட்வர்கிட்ட வலியக் கேட்டேன். எனக்குத் தெரியுமுன்னு முகத்துல அடிச்சாப்புல சொன்னாரே. அதுக்கு மேல நான் கேட்டிருந்தா என்னை 'சம்திங்கா' பார்த்திருப்பார். சரி... சரி... இடத்த காலி பண்ணு!"
"நல்லா பார்த்துச் சொல்லு சாரே... அவரு நல்லவரு சாரே..."
“அப்ப நான் என்ன கெட்டவனா? ஒனக்கு வந்த சம்பளத்த கொடுக்காம இருக்கிறதுல எனக்கு என்னம்மா லாபம்? போயி அவருக்கிட்டயே கேளு... பில்லே வரல."
சரோசாவுக்கு தலை கீழே விழுவது போல் இருந்தது. தான் நின்ற கட்டிடமே அற்றுப் போய், வெட்ட வெளியில் நிற்பது போலிருந்தது. இருதயம் இப்படி அடித்துக் கொண்டதை அவள் எப்போதுமே உணர்ந்ததில்லை. காலில் வெட்டுப் பட்டால் முதலில் ரத்தக்கசிவு இல்லாமலும், வலி ஏற்படாமலும், பிறகு அவை படிப்படியாக ஏறுவது போல், அவள், படிப்படியாய் அதிர்ந்து