"எனக்கு ஏம்பா சம்பளம் போடலை? ஒன்னத்தாம்பா, செக்ஷன் வஸ்தாது! எனக்கு ஏன் பில் போடல?”
தொலைபேசிக் கருவிக்குள் கிட்டத்தட்ட வாயைச் செருகிக் கொண்டு பேசிய எட்வர்ட்டுக்கு, சரோசா கத்துவது கேட்டதே தவிர அதன் கருத்து கேட்கவில்லை. அவளைச் சட்டை செய்யாமல் தொடர்ந்து பேசினார். உடனே சரோசா அவர் பேசிய டெலிபோன் குமிழை பிடித்திழுத்து, “ஏம்பா ஒன்னத்தான்! என்னோட சம்பளம் என்னாச்சு?” என்று கேட்டபோது எதிர்முனையில் இருந்தவர் "ஹலோ அங்கே என்னப்பா நடக்குது?” என்று கேட்பது ஒலித்தது. சரோசா, அந்தக் குமிழை பலவந்தமாகப் பறித்து கீழே வைத்தாள். எல்லோரும் அந்தப் பூனைப் புலியை ஆச்சரியமாகவும் அதிர்ந்தும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, பின்னர் அவள் பக்கமாக வந்தார்கள். அப்துல்லாவுக்கு மட்டும் சந்தோஷம். இந்த ரகளையில் பெரிதாக்கும் வகையில் கத்தினான் : "இந்தாம்மா சாரோ! இது ஆபீஸ், நீ இருக்கிற சேரி இல்ல. எது பேசினாலும் முறையாப் பேசு. இல்லாட்டி..."
“இல்லாட்டி என்னடா செய்வே பிராண்டிப் பையா?"
அப்துல்லா, கடந்த கால ஏவலை மனதில் நினைத்துக் கொண்டு அதிர்ந்து போய் நின்றபோது, துணி வியாபாரி, அதுதான் சாக்கு என்று அவன் பக்கமாய் நகர்ந்தார்.
வனஜா, அப் துல்லா சொன்னதைச் செயல்படுத்தும் வகையில் பதறிப் பதறிப் பேசினாள் :
"செக்யூரிட்டி கார்டு கிட்ட இவளை ஒப்படையுங்க. செக்யூரிட்டி ஆபீஸரையும் வரச் சொல்லுங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில என்ன செய்யப் போறாளோ?"
தலைமைக் கிளார்க்கை முறைத்துக் கொண்டு நின்ற சரோசா, வனஜா பக்கம் முகம் திரும்பினாள். அவளைக் கடித்துக் குதறப் போகிறவள்போல் பற்களைக் குவித்தபடியே சவாலிட்டாள்:
"நீயே செக்யூரிட்டி கார்டை வரச் சொல்லுமே. ஆளுக்கு ஆள் பேப்பர் வெயிட்டுங்களையும், எழுதாத ரிஜிஸ்டரையும், பால் பாயிண்ட் பேனாக்களையும், பிளாஸ்க்குங்களையும் கொண்டு