பகலிலும் விழிப்பிலும் துயிலிலும், அவர்களால் வணங்கப்படும் கடவுள் பணமே. அவர்கள் மனிதரிடத்தில் சிறிதும் பிரியம் வைக்க மாட்டார்களே! அவர்கள் ஓயாமல் தூர தேசத்திற்குப் போவதிலும் கடைகளைக் கட்டியழுது கொண்டிருப்பதிலும் தம் ஆயுட் காலத்தைக் கழிப்பவர்கள் அல்லவோ. ஸ்திரீகளின் மனது குளிர அவர்கள் வாயில் இருந்து ஒரு அன்பான மொழியும் வராதே. ஆகையால் வைசியர் பேரில் எந்த ஸ்திரீ ஆசை வைப்பாள்!
மல்லி : அப்படியானால் உங்கள் காதலர் பிராம்மணரும் அல்ல, க்ஷத்திரியருமல்ல, வைசியருமல்ல, வேறு யார்?
வஸ: அடி மல்லிகா நீ ஒன்றையும் அறியாதவளைப் போல மிகவும் அவசரமாகக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகிறாயே! நாம் இரண்டொரு மாசத்திற்கு முன் ஸ்வாமி கோவிலுக்குப் போயிருந்த போது அங்கு வந்திருந்த ஒருவரைப் பார்த்து அவர் யாரென்று நான் உன்னைக் கேட்டதை மறந்து விட்டாயா?
மல்லி: ஓகோ அப்படியா? அறிந்து கொண்டேன்! அறிந்து கொண்டேன்! நேற்றிரவு நீங்கள் ஒளிந்து கொண்டதாகச் சொன்னீர்களே. அது அவருடைய மாளிகை அல்லவோ? ஆனால் அவர் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாய் ஜனங்கள் சொல்லிக் கொள்கிறார்களே! அவர் பேரிலா இச்சை கொண்டீர்கள்?
வஸ: (’எந்துகுவாடலகிநாடு' என்ற பாட்டின் வர்ண மெட்டு)
தோடி - ரூபகம்
ப. ஸுந்தரனால் எனதுமேனி சோர்ந்ததேவாடி
அ. இந்து வதனங் கினிமை காண
எந்தமாது மாசைமீற வந்து பாதம் போற்றிடுவாள் (ஸு)
ச. எந்த நாளும் நிறையில்மீறா நீர்மையும் நலமும்