Flexi Classics தொடர்கதை - வஸந்த கோகிலம் - 03 - வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
இடம் : மாதவராயருடைய மாளிகை.
காலம்: மறு நாள் இரவு.
குணசீலன் : (தனக்குள்) ஏழையாய் இருந்த போதிலும் யோக்கியதையும் நற்குணமுடைய எஜமானரிடத்தில் சேவகம் செய்வதே வேலைக்காரர்களுக்குப் பரம சந்தோஷம். அகங்காரமும் கடுகடுப்பும் உள்ளவனும், பணத்தைத் தவிர மற்ற எவ்விதமான யோக்கியதையும் இல்லாதவனுமான தலைவனிடத்தில் வேலை செய்வதைக் காட்டிலும் ஓயாத் துன்பம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை. எதை மாற்றினாலும் மாற்றலாம். பிறவிக் குணத்தை எப்படி மாற்ற முடியும்? நாம் எவ்வளவுதான் முயன்றாலும் பட்டி மாடு வயலில் நுழைந்து பயிரைத் தின்பதையும், பிறனுடைய மனைவியின் பேரில் மனத்தை வைப்பவன், குடிப்பவன் முதலியோரின் குணத்தை மாற்ற யாரால் முடியும்? இப்பொழுது நேரம் எவ்வளவு இருக்கலாம், நடு இரவாய் விட்டதே! இன்னும் எஜமானர் திரும்பி வரவில்லையே! பாட்டுக் கச்சேரி இன்னும் முடியவில்லையோ? எனக்கோ நித்திரை வருகிறது; அவர் வருமுன் தூங்குவதும் தவறு. அதோ கதவு தட்டுகிற சப்தம் கேட்கிறது. வந்து விட்டார்கள்.
(மாதவராயரும் ஸோமேசனும் சம்பாஷித்த வண்ணம் வருகிறார்கள்.)
மாத : ஸோமேசா! திலோத்தமா எவ்வளவு மாதுரியமாய்ப் பாடினாள் வீணையைப் போன்ற வாத்தியம் வேறு என்ன இருக்கிறது! ஆப்த நண்பர்களைப் போல, அது விசனத்தினால் வருந்தும் மனதிற்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது! அதைத் தேவர்களின் வாத்தியம் என்பதற்குத் தடையேயில்லை.
ஸோம : சங்கீதத்தின் இன்பத்தில் பொழுது போனதே தெரியவில்லை! ஆஹா எவ்வளவு நேரமாய் விட்டது! சந்திரன் அஸ்தமனமாகப் போகிறதே! நாய்கள் கூடக் குலைக்காமல் நித்திரை செய்கின்றனவே! நீங்கள் இனிமேலும் தாமதிக்காமல் சயனித்துக் கொள்ளுங்கள் அதிகம் கண் விழித்தால் உங்கள் தேகத்திற்குக் கெடுதலாய் முடியும்.
மாத : ஐயோ பாவம் நமக்காகக் குணசீலனும் நெடு நேரமாய் நித்திரை இல்லாமல் இருக்கிறான். (அன்போடு) அடே குணசீலா! நேரமாகிறது; நீ போய்ப் படுத்துக் கொள். கதவுகளை