(தூங்குகிறான்)
சசி : (தனக்குள்) பிராம்மணோத்தமரே! தூங்கும்! இப்படியே நூறு வருஷம் எழுந்திருக்காமல் நன்றாய்த்துங்கும். சரி! எனக்கு நேரமாகிறது. இந்த மூட்டையை வஸந்தஸேனையின் வீட்டிற்குக் கொண்டு போய் மல்லிகாவின் கிரயத்தைக் கொடுத்து அவளுடைய அடிமைத் தன்மையை நீக்கி அவளை மீட்டுக் கொண்டு போகிறேன். (திடுக்கிட்டு) இதென்ன காலடியோசை கேட்கிறதே! யார் வருகிறார்கள்? அதோ யாரோ ஒருவன் வருகிறான். அவன் கூச்சலிடுமுன் அவனைக் குத்திக் கொன்று விடுகிறேன். (கோமளா வருகிறாள்)
கோமளா : (தனக்குள்) இதென்ன ஓசை இது திருடனாய் இருக்குமோ! எங்கும் இருளாய் இருக்கிறதே விளக்கை ஏற்றுகிறேன். (விளக்கை ஏற்றுகிறாள்)
சசி : (தனக்குள்) இவள் யாரோ ஒரு ஸ்திரீயல்லவோ சே! இவளைக் குத்தக் கூடாது! என் வேலை முடிந்து விட்டது. மெதுவாகப் போய் விடுகிறேன். (மறைந்து விடுகிறான்)
கோமளா : கூ! கூ! திருடன்! திருடன்! வாருங்கள் திருடன்! திருடன்! ஒடுகிறான்! ஒடுகிறான்!
ஸோமே : (திடுக்கிட்டு எழுந்து) என்ன அது! என்ன அது! கோமளா! ஏன் அப்படிக் கூச்சலிடுகிறாய்?
கோமளா : திருடன்! திருடன்! வாரும்! வாரும்!
ஸோமே : திருடனாவது இங்கு வருவதாவது! என்ன கனவோ?
கோமளா: இல்லையில்லை! இதோ பாரும் வாசற்கதவு திறந்திருக்கிறது!
மாதவ : ஸோமேசா! இதென்ன இங்கே இவ்வளவு கூச்சல்!
ஸோமே : திருடன் வந்துவிட்டுப் போயிருக்கிறான்!
மாத: எப்படி உள்ளே வந்தான்?