இவர்கள் நன்றாய் நித்திரை செய்கிறார்கள் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. எல்லாம் சரியாய் இருக்கிறது! இதென்ன தம்புரு, வீணை, புஸ்தகங்கள் முதலியவை இருக்கின்றனவே! இது தாசியின் வீடோ அல்லது பாடகன் வீடோ தெரியவில்லை. இதை ஒரு பிரபுவின் வீடென்று நினைத்தல்லவோ மதிமோசம் போய் இதற்குள் நுழைந்து விட்டேன். இல்லாவிட்டால் வேறு எங்கேயாயினும் போயிருப்பேனே! விடியா மூதேவிக்கு வேலை அகப்பட்டாலும் கூலி அகப்படுவதில்லை என்பதைப் போலாயிற்றே என்னுடைய பிழைப்பு. இது வாஸ்தவத்தில் ஏழ்மைத் தனமா? அல்லது வெளி வேஷமா அல்லது திருடனுக்காவது அரசனுக்காவது பயந்து தன் சொத்தை எல்லாம் ஒளித்து வைத்திருக்கிறானோ தெரியவில்லையே! பூமிக்குள் புதைத்து வைத்திருப்பானோ? இந்த மணிகளைக் கீழே உருட்டிப் பார்த்தால் மேடு பள்ளம் இருப்பதும், சமமாய் இருப்பதும் தெரியும். அதனால் பூமி வீடு கட்டப்பட்ட பிறகு தோண்டப் பட்டதா என்பது நன்றாய்த் தெரியும். (உருட்டுகிறான்) சீ! இவன் நித்திய தரித்திரன்! இங்கே ஒன்றும் அகப்படாது! இவ்வளவு வீண் பாடுதான். வேறு எங்கேயாவது போகிறேன். (போக ஆரம்பிக்கிறான்)
ஸோமே : (கனவு கண்டு தானே உளறுகிறான்) ஒ மாதவராயரே! திருடர்கள் கன்னம் வைக்கிறார்கள் நகை மூட்டையைத் திருட வருகிறார்கள்! இதோ இந்த மூட்டையை நீரே வைத்துக் கொள்ளும்.
சசிமுகன் : (திடுக்கிட்டு) உண்மையில் விழித்துக் கொண்டானோ? என்னைப் பார்த்து விட்டானோ? ஒன்றுந் தெரியவில்லையே! இது மாதவராயருடைய வீடா தான் மிகுந்த ஏழை என்பதை எனக்குத் தெரிவிக்க இவ்விதமாகப் பரிகாசம் செய்து இடித்துக் காட்டுகிறானோ? (நெருங்கிப் பார்க்கிறான்) இல்லை. இல்லை. இவன் கனவு காண்கிறான் போல் இருக்கிறது. இவன் தலையின் கீழ் ஏதோ ஒரு துணி மூட்டை இருக்கிறது! சே! ஏற்கெனவே பரம தரித்திர நிலைமையில் இருக்கும் இவனுடைய சொத்தைத் திருடி இவனை மேலும் வருத்துவது பாவம். வேறு எங்கேயாவது போகிறேன். (போக ஆரம்பிக்கிறான்)
ஸோமே : ஐயா! நீர் இதை உடனே எடுத்துக் கொள்ளும். இல்லாவிட்டால் இது போய்விடும். பிறகு என்னைக் கேட்கக் கூடாது.
சசி: மிகவும் அந்தரங்க விசுவாசத்துடன் இவ்வளவு வேண்டிக் கொள்ளும் இவனுடைய வார்த்தையை மரியாதை படுத்தாமல் நான் எப்படி மறுத்துப் போகிறது? நான் இந்தக்