ஜாக்கிரதையாகப் பார்த்து மூடித் தாளிட்டு விட்டுப் படுத்துக் கொள்.
குண : ஸோமேசரே! இந்த நகை மூட்டையைப் பகலெல்லாம் நான் வைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது உம்முடைய முறை. இதோ வாங்கிக் கொள்ளும். (கொடுக்கிறான்)
ஸோமே : நல்ல வேளையாய் இன்று பகல் ஜாக்கிரதையாய்க் கழிந்தது. இந்த இரவு எப்படிக் கழியப் போகிறதோ தெரியவில்லை. இந்த மங்களபுரத்தில் திருடர்கள் இல்லாமல் இருந்தால் இப்பொழுது எனக்கு இவ்வளவு கவலை இராது; நானும் நன்றாய்த் தூங்கலாம். இனி எனக்கு நித்திரை எங்கு வரப் போகிறது? போய்ப் படுத்துப் பார்க்கிறேன்.
மாத : மித்திரா! இது நம்பிக்கையின் பேரில் நம்மிடத்தில் வைக்கப்பட்டது. இது சொந்தக்காரரிடத்திற் போய்ச் சேரும் வரையில், இதை நாம் ஜாக்கிரதையாகக் காப்பாற்ற வேண்டும், பார்த்துக் கொள். (சயனித்துக் கொள்கிறார்)
(தனக்குள் ஆகா! அந்த சங்கீதம் இன்னமும் என் காதில் சப்தித்துக் கொண்டிருக்கிறதே! எவ்வளவு இனிமை (தூங்குகிறார்)
(ஸோமேசனும் வேறொரு பக்கத்திற் படுத்துத் துயிலும் பொழுது கனவு கண்டு உளறுகிறான்.)
ஸோமே : (தனக்குள் ஆகா! என்ன பாட்டு! நல்ல வீணை! திலோத்தமாவின் அழகே அழகு! திலோத்தமா! உன் தேகத்தில் உள்ள ஆபரணங்கள் பத்திரம்! திருடன்! திருடன்; பிடியுங்கள்! பிடியுங்கள்! ஆகா!! ஓட முடியவில்லையே? கால் பூமியை விட்டுக் கிளம்பவில்லையே! (சற்று மெளனம்)
(சசிமுகன் என்னும் திருடன் கையிற் கன்னக் கோலுடன் மெதுவாக மார்பினால் நகர்ந்துகொண்டு வருகிறான்.)
(தனக்குள் மெதுவாக) அப்பா தோட்டத்தின் சுவரைத் தாண்டி உள்ளே வந்து சேர்ந்தேன். (மேலே பார்த்து)