வேலை பிராதை விசாரிக்க வேண்டியதே ஒழிய ஜோசியம் சொல்வதல்ல. எனக்கு நேரமாகிறது; விசாரணை நடக்கட்டும்.
தாய் : (தனக்குள்) இதென்ன மோசமோ தெரியவில்லையே! என் அருமைப் பெண் உயிருடன் இருக்கிறாளோ இல்லையோ தெரியவில்லையே! இவரை ஏன் இப்படி வருந்துகிறார்கள்? (திபாயாதிபதிக்கு) நியாயாதிகளே இவர் இந்தக் குற்றத்தை ஒரு நாளும் செய்திருக்க மாட்டார். இவர் ஒரு எறும்பைக்கூட வதைப்பவர் அல்லவே! தன் உயிர் போவதாய் இருந்தாலும், பிறருக்கு ஒரு தீங்கும் செய்ய மாட்டாரே! இவர் எவ்வளவு ஏழ்மை நிலையில் இருந்த போதிலும், இவருடைய மேன்மை ஒரு நாளும் போகாது. என் மகள் தன் ஆபரணங்களை ஒரு நாளிரவு இவரிடம் வைத்து வந்தாள். அவைகள் களவு போய் விட்டன; இவர் அவற்றைவிட எவ்வளவோ விலை உயர்ந்த ஒரு வைர மாலையைக் கொடுத்தார். அப்படி இருக்க, இவர் அற்ப நகைகளுக்காகக் கொலை செய்தாரென்பது முழுதும் பொய்.
நியா : மாதவராயரே! அவள் உம்முடைய மாளிகைக்கு எப்பொழுது வந்தாள்.
மாத : நேற்று சாயங்காலம்.
நியா : பிறகு எப்பொழுது போனாள், நடந்து போனாளா, அல்லது வண்டியில் போனாளா?
மாத : அந்த விவரம் எனக்குத் தெரியாது; அவள் இன்று காலையில் தன் வீட்டிற்குப் போகுமுன் நான் எழுந்து என் உத்தியான வனத்திற்குப் போய் விட்டேன்.
(வீரகன் அவசரமாக வருகிறான்.)
வீர :நியாயாதிபதிகளே! நமஸ்காரம்.
நியா : வீரகா! எங்கு வந்தாய்; என்ன விசேஷம்?
வீர : ஒரு பிராது சொல்லிக் கொள்ள வந்தேன்..
நியா : இன்று காலையில் பிரதாபனைத் தேடிக் கொண்டு போன போது, ஒரு பெட்டி வண்டி