முகூர்த்தத்துக்கு முதல் நாள் சாயந்திரம் கிட்டப்பாவும் மூர்த்தியும் ஏகப்பட்ட சாமான்களோடு காரில் வந்து இறங்கினார்கள். மூர்த்தியை வாசலிலேயே நிற்கச் சொல்லி ஆரத்தி சுற்றிக் கொட்டி மேளவாத்தியத்துடன் உள்ளே அழைத்துச் சென்றாள் அத்தை,
"சமையல்காரா வரலையா?" என்று கேட்டாள் கெளரி.
"பஸ்ல வந்துண்டிருக்கா" என்றான் மூர்த்தி.
"தாழம்பூ கொண்டு வந்திருக்கேன்" என்று கிட்டப்பா சொன்னதுமே மற்ற வேலைகளை யெல்லாம் மறந்துவிட்டு பாகீரதிக்குத் தலைபின்னத் தொடங்கி விட்டாள் அத்தை.
கூடத்தில் "ஹிஸ்மாஸ்டர்ஸ் வாய்ஸ்" தகரக்குழாய் கிராம போனில் எஸ்.ஜி. கிட்டப்பா ‘கோடையிலே இளைப்பாறி’ பாடிக் கொண்டிருந்தார்.
எல்லோரும் கூடத்தில் வந்து உட்கார்ந்து பாட்டு கேட்க ஆரம்பித்தார்கள். கிராமபோன் பிளேட்டில் ஏற்பட்டிருந்த கீறல் காரணமாக பாட்டு தடைப்பட்டு "கோடையிலே கோடையிலே. கோடையிலே…." என்று ஒரே இடத்தில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்! கிராமபோனை நிறுத்தச் சொல்லிவிட்டு"நீங்கள்ளாம் ஆளுக்கொரு பாட்டுப் பாடுங்களேன், கேட்போம்" என்றார் கிட்டப்பா,
“நீதான் ஒரு பாட்டுப் பாடேன் கேட்கலாம்" என்றாள் கெளரி அத்தை கிட்டப்பாவிடம்.
”நான் என்ன எஸ்.ஜி. கிட்டப்பான்னு நினைப்பா உனக்கு? நான் பாடினா எல்லாரும் ஓடுவா!" என்றார் அவர்.
பாகீரதியை அழகாக அலங்கரித்து முடிந்ததும் கூடத்துக்கு அழைத்துவந்து கிட்டப்பாவுக்கு நமஸ்காரம் பண்ணச் சொன்னாள் அத்தை.
“சீக்கிரமேவ விவாகப் பிராப்திரஸ்து!" என்று வாழ்த்தினார் கிட்டப்பா.