அதுவரை பஞ்சம் தலைவிரித்து ஆடிய விராட ராஜன் தேசத்தில் பரம துஷ்டனான கீசகனை பீமன் வதம் செய்து ஒழித்த பின் அந்த காட்டில் சுபிட்சம் தாண்டவமாடத் தொடங்குகிறது. பாண்டவர்களுக்குப் புகலிடம் தந்து அவர்களை வெற்றி காணச் செய்த தேசம், விராடனுடைய மச்சதேசம்.
ஆகவே, இந்த உன்னதமான கதையை எப்போது, யார், எங்கே சொன்னாலும் அங்கே மழை பெய்யும் என்றும் சுபிட்சம் உண்டாகும் என்றும் ஓர் அசைக்க முடியாத நம்பிக்கை இந்த பாரத தேசத்தில் பரவியிருக்கிறது.
நான் இதுவரை ஏழு இடங்களில் விராடபர்வம் கதை சொல்லியிருக்கிறேன். ஏழு தடவையும் மழை பெய்யத் தவறியதில்லை. இந்தப் பெருமை என்னைச் சேராது. பாரதக் கதையின் மகிமை அப்படி. இன்றைக்கும் மழை பெய்யும் என்கிற திட நம்பிக்கையோடு கதையைத் தொடங்குகின்றேன்" என்று பூர்வ பீடிகையாகக் கூறிவிட்டு கணீரென்ற சங்கீதக் குரலில் சுலோகங்களைச் சொல்லத் தொடங்கியதும் அங்கே தெய்வீகமான ஒருகுழ்நிலை உருவாயிற்று.
கதை முடிகிறபோது மணி பன்னிரண்டு. கனபாடிகள் வீட்டுக்குத் திரும்பி வரும்போதே களைப்பாக இருந்தார். கிட்டாவின் தோளை ஆதாரமாகப் பற்றிக் கொண்டே ஊஞ்சலில் போய் உட்கார்ந்தார்.
"இறுக்கம் தாங்கலைடா, கிட்டா கொஞ்சம் விசிறி விடறயா?" என்று கேட்டவர் "வடக்குப்பக்கம் பளீர் பளீர்ணு மின்னல் அடிக்கிறது, மழை வருமோ, என்னவோ தெரியலை!" என்றார்.
”கொட்டு கொட்டுணு கொட்டப் போறது. பார்த்துண்டே இருங்க" என்றார் கிட்டப்பா. அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே பயங்கரமாய்க் காதே செவிடாகிவிடும் போல் இடித்த பேரிடி ஒன்று ஊரையே கிடுகிடுக்கச் செய்தது.
"அப்பா, இந்தப் பாலைக் குடிச்சுட்டு போய்ப் படுத்துக்குங்க. இன்னைக்குப் பூரா பட்டினி நீங்க. ஏற்கனவே உடம்பு சரியில்லை உங்களுக்கு" என்று பரிவோடு அந்தப் பாலை அப்பாவிடம்