சனிக்கிழமை ராத்திரி எட்டு மணிக்கு விராடபர்வம் நடக்கப் போவதாக ஊர் மக்களுக்கு தண்டோரா போட்டு அறிவித்தார்கள்.
பஜனை மடம் வாசலைப் பெருக்கி, தண்ணீர் தெளித்து, கோலம்போட்டு, சுவாமி படங்களுக்கு மாலை அலங்காரம் செய்து, குத்துவிளக்கு ஏற்றிவைத்து எல்லா ஏற்பாடுகளையும் கிட்டா தான் ஓடி ஆடிச் செய்து கொண்டிருந்தான்,
ரொம்ப நாளைக்கப்புறம் கனபாடிகள் கதை சொல்கிறார் என்பதால் ஊர் மக்களோடு, அடுத்த கிராமத்து ஜனங்களும் திருவிழாக் கூட்டம் போல் பஜனை மடத்தில் கூடியிருந்தார்கள். கனபாடிகள் அன்று காலையிலிருந்தே உபவாசம் இருந்து, பக்தி சிரத்தையோடு வந்து மணையில் உட்கார்ந்தார். பெட்ரோமாக்ஸ் விளக்கு ‘புஸ்புஸ்’ என்று அணைந்து அணைந்து எரிய, விட்டில் பூச்சிகள் விளக்கைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
பஞ்சாயத்துத் தலைவர் கனபாடிகளுக்கு மாலை போட்டு விழாவைத் துவக்கி வைத்ததும், கனபாடிகள் கழுத்தில் போட்ட மாலையோடு பேச்சைத் தொடங்கினார்.
”வியாச பகவான் அருளிய மகாபாரதம் மொத்தம் பதினெட்டு பர்வங்கள் அடங்கியது. நாலாவதுதான் விராடபர்வம்.
பாண்டவர்கள் வனவாசம் முடிந்து ஓராண்டு காலம் அஞ்ஞாத வாசம் செய்வதற்கு ஏற்ற இடமாக விராடனுடைய மச்ச நாட்டைத் தேர்ந்தெடுத்தார்கள். விராட மகாராஜாவுக்கே தெரியாமல் திரெளபதியும் பாண்டவர்களும் மாறு வேடத்தில் அங்கே வாழ்ந்து வருகிறபோது திரெளபதியின் அழகில் மயங்கிய கீசகனை பீமன் வதம் செய்வதும் விராடனின் மச்ச நாட்டுப் பசுக்களை கெளரவர்கள் மடக்கிச் செல்வதும், அர்ஜூனன் அலியாக மாறி ராணியின் அந்தப்புரத்தில் பணிபுரிவதும், விராடராஜனுடைய மகன் உத்தரனுக்கு உதவியாகத் தேரோட்டிச் சென்று பசுக்களை மீட்பதும் இந்த பர்வத்தில்தான் நடக்கிறது.
பல சோதனைகளுக்கிடையே ஒரு வருஷகாலம் அஞ்ஞாதவாசம் இருந்து அதை வெற்றிகரமாக முடிக்கும் பாண்டவர்கள் தங்க ள் உண்மை சொரூபத்தை வெளிப்படுத்துவதும் இந்த பர்வத்தில்தான்.