(Reading time: 16 - 32 minutes)

 " நிறைய பணம் தினமும் இந்த தொழில்லே கிடைக்குதா? ரெண்டுவேளை சாப்பாட்டுக்காவது கிடைக்குதா?"

 கீழே குனிந்து தைத்துக்கொண்டிருந்த கிழவன், தலை நிமிர்ந்து, என்னைப் பார்த்தான்.

 " நான் ஏதாவது தப்பா கேட்கிறேனா?"

 " ஆமாங்க, இந்தக் கிழவன்கிட்ட யாருங்க வருவாங்க? ஐயா! தவிர, இப்பல்லாம் எல்லார்கிட்டேயும் காசு இருக்குதுங்க, அது எப்படி வருதுன்னு கேட்காதீங்க, ஆனா இருக்கு! செருப்பு போடறவங்களே கம்மி! அப்படி போடறவங்களும் செருப்பு பிய்ந்துபோனா, தெருவிலே கடாசிட்டு, கடையிலே புதுசு வாங்கி போட்டுக்கறாங்க, எனக்கு உங்களைப்போல, ஒருத்தர் ரெண்டுபேர், பரிதாபத்தோட கொடுக்கிற காசிலே ஒரு வேளை பன்னு, ரெண்டுவேளை டீ குடிக்கத்தான் வருமானம் கிடைக்குது, ஆனா, பட்டினியிலே செத்தாலும் சாவேனே தவிர, பிச்சை எடுக்கமாட்டேங்க!"

 அவன் சொன்னதைக் கேட்டவுடன், மெய் சிலிர்த்தது.

 "சரி, எங்க வீட்டிலே வேலை தரேன், சாப்பாடு போடறேன், துணி வாங்கித் தரேன், பசியில்லாம குறைநாளை தள்ளலாம், வரியா?"

 கிழவன் என்னைப் பார்த்து சிரித்தான்.

 " ஏம்ப்பா சிரிக்கிறே? நான் சொல்றதிலே, உனக்கு நம்பிக்கை இல்லையா?"

 " ஐயா! இந்த வழியா நீ தினமும் தடியை ஊனிக்கிட்டு காலைலே தலையை குனிஞ்சுகிட்டு எங்கேயோ போய்ட்டு கொஞ்ச நேரத்திலே திரும்பி வர்றதையும் பார்த்துக்கிட்டுத் தானே இருக்கேன், இன்னிக்கி என்னவோ, தலையை நிமிர்த்தி, என்னை பார்த்து நெருங்கிவந்து பேசறே? இதெல்லாம் எத்தினி நாளைக்கு நிக்கும்? நீங்க ஒருவேளை நின்னாக்கூட, உங்க குடும்பத்திலே உள்ளவங்க ஒத்துப்போவாங்களா? திருட்டுப் பட்டம் கட்டி என்னை விரட்டிடுவாங்க, ஐயா! சாமி! ஆளை விடுங்க! ஒருவேளை டீ குடிச்சாலும் இப்படியே குறைநாளை தள்ளிடறேன், தப்பா நினைக்காதீங்க, நம்ம தலைமுறை சனங்க குணமே வேறே! இப்ப இருக்கிற சனங்க குணமே வேறே! நான் சொல்றது, சரியா தப்பான்னு சோதிச்சுப் பாருங்க! புரியும்! இந்தாங்க உங்க செருப்பு! அது நல்லாவேயிருக்கு, தையல் ஒண்ணும் தேவையில்லே, சாலையிலே பார்த்து உஷாரா நடங்க! இந்த பேப்பர் போடற சின்னப் பசங்க சைக்கிளிலே கண்ணு மூஞ்சி தெரியாம ஓட்டறாங்க, இடிச்சாங்கன்னா, நாளைக்கு சங்குதான், உங்களுக்கு!"

 என்னை யாரோ பிடரியில் ஓங்கி அடித்தது போலிருந்தது!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.