ஜானகி.
"யாருன்னு கேட்கிறேன்ல!" என்ற வினாவில் உச்சுக்கொட்டி, 'உஷ்!' என்ற ஒலியை மட்டும் எழுப்பினாள் அவள். அதிலிருந்தே வந்திருப்பது ஒரு பெண் என்பது தெளிவாய் தெரிந்தது அவனுக்கு!
"யார் நீங்க?எதுக்கு என் ரூமுக்கு வந்திருக்கீங்க?" தன் கண்ணியம் காக்க விரும்பி விலகி நின்றான் அவன். அவள் அறிவாள் அவன் தன் குரல் வளம் நன்கறிவான் என்று! வார்த்தைகள் உதிர்த்தால் குட்டு உடைந்துப்போகும், சில நிமிடம் விளையாடித் தான் பார்ப்போம் என்ற எண்ணம் அவளுக்குள்! அவனது பிரய்லி மொழியால் சில வாக்கியங்களைப் புனைந்து அவனிடம் நீட்டினாள் ஜானு. குழம்பியவண்ணம் அதனைத் தீண்டியவன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்.
"எனக்கு உங்களை ரொம்ப பிடித்திருக்கு! உங்கக் கூடவே கடைசி வரைக்கும் வாழணும்னு ஆசைப்படுறேன்!" என்பது அதன் மொழியாக்கம்.
"யாருங்க நீங்க? என்ன விளையாடிட்டு இருக்கீங்களா? காலையில வந்தவங்க தானே நீங்க? மரியாதையா வெளியே போயிடுங்க!" அவன் உண்மையில் கோபப்படுகிறான் என்பது தெளிவாய் தெரிந்தது. மீண்டும் அவன் மொழியில் சில வாக்கியங்களைப் புனைந்தாள் அவள்.
"நான் பல வருடமா உங்களை காதலிக்கிறேன்.ஒருவேளை நீங்க என் காதலை ஏற்றுக்கவில்லை என்றால் நான் தற்கொலை பண்ணிப்பேன்" என்று பதிந்திருந்தது அது! என்னவென்று அதற்கு விடையளிப்பது என்பது உறைந்துப் போனான் அமன்.
"நீங்க நல்லா விளையாடுறீங்கன்னு தெரியுது! அம்மா...! எங்கேம்மா இருக்கீங்க?" என்று கத்தியவனின் வாயைப் பொத்தினாள் ஜானு. அத்தீண்டல் எங்கே அவள் கரத்தை உணர்ந்ததாய் ஓர் எண்ணம் அவனுக்குள்! எனினும், அங்கு என்ன நடக்கிறது என்பது அவனுக்குப் புதிராய் போனது! யாரோ ஒரு ஆண் தனிமையில் இருக்கையில் எந்த உரிமையில் இவள் இவ்வாறு நடந்துக்கொள்கிறாள்? ம்...ஆண்களுக்கும் இங்கு பாதுகாப்பில்லை தான் போலும்! இருக்கட்டும் அவன் அவளுக்கு உரியவன், நாம் கேட்க இயலாது! ஆனால், அவன் அங்கு உண்மையில் அச்சம் தான் கொண்டிருந்தான் என்பதில் சற்றும் ஐயமில்லை.
"நீங்க பண்றதை யாராவது பார்த்தா நான் உங்கக்கிட்ட தப்பா நடந்துக்கிறேன்னு நினைப்பாங்க மிஸ்டர்.இம்ரான்!" என்ற தொனி அவனை முழுதுமாக கட்டிப்போட்டது. இக்குரல்...அவளுடையதல்லவா! ஒருவழியாக அவன் புத்தி உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டது. அவன் முக மாறுதல்களை ஊகித்தவள், ஒரு கள்ள நகையுடன் அவனிடமிருந்து விலகினாள்.