(Reading time: 10 - 20 minutes)

" நீங்களும் மாரட்பள்ளியா?"

" பக்கத்திலே, லாலாகூடா!"

ரித்திகாவுக்கு மூச்சு இரைத்தது.

" நீ நிறைமாத கர்ப்பிணி! பேசாம நடந்துவா!"

இன்னும் சற்று தூரம் கடந்ததும், மறுபடியும் இடது புற சாலையிலிருந்து, ஒரு கும்பல் சேர்ந்துகொண்டது, குமாருக்கும் ரித்திகாவுக்கும் சற்று நம்பிக்கை பிறந்தது.

அவர்களில், பெண்களும் குழந்தைகளும் இருந்ததால், ஆண்களின் நடைவேகம் தடைப்பட்டது, ரித்திகாவுக்கு சௌகரியமாகி விட்டது.

" பெங்களூரிலே எங்கே வீடு உங்களுக்கு?"

" மல்லேஸ்வரம்!"

" எங்கள் வீடு, பக்கத்திலே ராஜாஜிநகர்! இரண்டு பகுதிகளுமே ரொம்ப பழைய பகுதிகள்........"

" எல்லா வசதிகளும் இருக்கு!"

ஒரு குழந்தை தன் தாயிடம், நெருங்கி வந்து, மெதுவாக, தன் ஒரு விரலை காட்டியது. " கொஞ்சம் பொறுத்துக்க, ஏதாவது ஒதுங்கற இடம் வந்தா சொல்றேன்....." " ரொம்ப அர்ஜண்ட், அம்மா!"

தாய், முன்னும் பின்னும் பார்த்துவிட்டு, சாலையோரத்தை காட்டினாள். சிறுவனும் சிறுநீர் பிரித்துவிட்டுக் கொண்டிருந்தபோது, போலீஸ் வேன் வந்துவிட்டது.

கையும் களவுமாக பிடிபட்டனர்.

" அபராதம் கட்டுங்க! அம்பது ரூபாய்....!"

" ஐயா! காசில்லாமத்தான், ஊரை விட்டே போகிறோம், ஹைதராபாத்!"

அந்த காவலர், அருகே வந்து, ரகசியமாக, " நானும் அந்த ஊர்க்காரன்தான்....ஆமாம், நடந்தேவா அறுநூறு கிலோமீட்டர் போகப்போறீங்க!"

" வேற வழி இல்லீங்களே!"

காவலர் முன்னும் பின்னும் பார்த்துவிட்டு, சைகையால், அனைவரையும் வேனில் ஏறிக்கொள்ளச் சொன்னதும், எல்லோரும் முண்டியடித்தைக்கொண்டு வேனில் புகுந்தனர்.

மனதின் நெருக்கமும் கூடியது!

அந்த நல்லவரால் முடிந்தது, எல்லைவரை கொண்டுவிட்டார். அங்கே அனைவரும் இறங்கியதும், " நீங்க போய்ச்சேர, இருபது இருபத்தைந்து நாளாகும். அங்கங்கே இருக்கிற ஊர்களிலே, கொஞ்சம் தங்கி இளைப்பாறுங்க! கடவுள் உங்களை காப்பாற்றுவார்......"

அனைவரும், அவரை கையெடுத்துக் கும்பிட்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.