பிரீதாவிற்கு கலக்கம் ஏற்பட்டது.
அரவணைக்க உறவினர்கள் இல்லை... ஆறுதல் சொல்வார்கள் என்று நினைத்த நண்பர்களும் நல்லவர்கள் இல்லை... ஒரே பிடிமானமாக இருந்த வேலையிலும் பிரச்சனை! அவள் என்ன தான் செய்வாள்?
என்ன செய்வது என்று அவள் குழம்பி இருந்த போது ஏதேச்சையாக வினய் வேலை செய்த நிறுவனத்தில் அவளுக்கு பரிச்சயமாகி இருந்த சுமித்ராவை சந்தித்தாள் பிரீதா. மனதில் இருந்த பிரச்சனையை வெளியே சொல்லவும் ஆள் இல்லாமல் கலங்கிக் கொண்டிருந்தவளுக்கு வடிகாலாக சுமித்ரா வரவும், அவளிடம் தன் பிரச்சனைகளை சொல்லி கண்ணீர் விட்டாள் பிரீதா! கட்டாயம் உதவுவதாக சுமித்ரா சொன்ன போதும் கூட பிரீதாவிற்கு பெரிதாக நம்பிக்கை ஏற்படவில்லை. சுமித்ராவும் அவளை போலவே நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள் தானே? கதை, திரைப்படங்களில் வருவது போல் நட்புக்கு மரியாதை தருகிறேன் என்று எதையும் செய்ய முடியாதே!
ஆனால் மறுநாள் சுமித்ரா அவளை அழைத்து இந்த கம்பானியன் வேலை பற்றி கூறினாள். பிரீதாவிற்கு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையை விட்டு விட்டு செல்ல வேண்டுமே என்று வருத்தமாக தான் இருந்தது... ஆனால் தெரிந்த குடும்பம், ரொம்ப நல்லவர்கள் என்று சுமித்ரா சொல்லவும், தற்போது இருக்கும் நிலைக்கு மேல் என்று தோன்றவும், சரி என ஏற்றுக் கொண்டு இந்த வேலையில் சேர்ந்தாள் பிரீதா.
“பிரீ இதை நான் சொல்லாமல் இருந்தால் தப்பு... இந்த கம்பேனியன் வேலை பற்றி எனக்கு சொன்னது வினய்... அவங்க அவருடைய தூரத்து சொந்தமாம்... பாட்டி முறை! அவரே முயற்சி செய்து உனக்கு வேற வேலை வாங்கி தரலாம் ஆனால் அப்போதும் கூட இதே பிரச்சனைகள் உனக்கு வர வாய்ப்பு இருக்கு... மற்றபடியும் நீ இப்போ இருக்கும் மனநிலையில் கொஞ்ச நாளுக்கு இப்படி ஒரு வித்தியாசமான சுழல் உனக்கு நல்லதுன்னு சொன்னார்... இந்த ஹெல்ப் அவர் செய்ததுன்னு சொல்ல வேண்டாம்னு தான் சொன்னார்... எனக்கு தான் மனசு வரலை...”
இங்கே செல்லம்மாவை அவளுக்கு மிகவும் பிடித்து விடவே, அவரை தனிமையில் விட்டு செல்ல அவளுக்கு மனம் வரவில்லை... அதனால் ஒரு சில மாதங்களுக்கு என்று ஏற்றுக் கொண்ட வேலை தொடர்ந்துக் கொண்டிருந்தது...