இன்று வரை வினய்யிடம் அவனின் உதவிக்கு நன்றி தெரிவிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை... அதேபோல் அவள் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் அந்த பழைய நாளில் அவள் நடந்துக் கொண்ட முறைக்கு ஒரு மன்னிப்பு கேட்கவும் தான்...
எதை எதையோ யோசித்தபடி வந்தவள், வீட்டில் புது குரல் கேட்கவும், திகைத்து நின்றாள். செல்லம்மாவின் குரலோடு, வேறு இரண்டு புதிய பெண்களின் குரலும் கேட்டது...
குழந்தைகள் இல்லாத செல்லம்மாவை தேடி இன்று வரை யாரும் வந்ததில்லை... எப்போதேனும் அவருடைய தோழி ருக்மணியும் அவர் குடும்பமும் வருவது உண்டு... ஆனால் இது யார் புதிதாக?
கேள்வியோடு அவள் நுழையவும்,
“வாம்மா பிரீ, உன் செல்லம் எல்லோரும் நல்லா இருக்காங்களா?” எனக் கேட்டார் செல்லம்மா.
“ம்ம்ம்...” அங்கே இருந்த புதியவர்களை பார்த்து அவள் சங்கோஜத்துடன் தலை அசைத்தாள்.
ஏனோ அவர்கள் இருவரும் அவளுக்கு பரிச்சயமானவர்களாக தோன்றினர்!
“பிரீ, இது என் தங்கையோட மருமகள் தேவி... அவள் மகள் விஜி... சிங்கப்பூரில் இருக்காங்க... இப்போ லீவில் வந்து இருக்காங்க... உன்னை பற்றி தான் அவங்களிடம் பேசிட்டு இருந்தேன்...”
பிரீதா ஒரு புன்னகையை கொடுக்க, மற்ற இருவரும் பதிலுக்கு நட்புடன் புன்னகைத்தனர்.
“பிரீக்கு தோட்டம் செடின்னா ரொம்ப பிடிக்கும்... அவளே நிறைய செடி நட்டு வச்சிருக்கா... காலையில் அந்த ரோஜா செடிகளுடன் பேசா விட்டால் அவளுக்கு நாளே சரி படாது...”
“நல்ல பழக்கம் தானே அத்தை... சைன்டிபிக்கா கூட இது போல் செடியோடு பேசுவது அந்த செடிகளுக்கு பிடிக்கும் அதனால் நல்ல செழிப்பா வளரும்னு சொல்றாங்க...”