(Reading time: 19 - 38 minutes)

தே நாள் மாலை நேரம் 4.00

உணவு தேடித்தேடி வேர்வையில் குளித்திருந்தது உடல் . ஆனால் உணவு என்று ஏதும் கையில் சிக்கவில்லை  நேரம் கடந்ததுதான் மிச்சமாயிருக்க வந்திருந்த ஆண்கள் ஒவ்வொருவராய்ப்பிரிந்து சென்று கிடைக்கும் உணவுகளை எடுத்துகொண்டு ஒரு ஆற்றங்கரையின் பெயரைக்கூறி அங்கு சந்திப்பதாக திட்டம் போட்டுக்கொண்டு பிரிந்தனர்.      

நேரம் இரவு 7.00

அரச மரம் அடைக்கலம் தர மறுத்தது. அவர்கள் இருந்த இடத்திற்கு பக்கத்தில் குண்டு வெடிக்க அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்களில் பாதிக்குமேற்பட்டவர்களை காவு வாங்க அதிஷ்ட்டவசமாக உயிர்தப்பிய மீதிபேர் ஓலமிட்டபடி  மீண்டும் ஓட ஆரம்பித்தனர். சற்றுமுன் நடக்கவே மறுத்த கால்கள் ரத்தம் கண்ட பயத்தில் தானாகவே ஓட ஆரம்பித்தன. என்ன செய்ய வலியைப் பெரிதென நினைத்தால் உயிர் அதைவிடப்பெரிதே.. உயிரைக்கையில் பிடித்துக் கொண்டு தாங்கள் உயிராக நினைப்பவர்களை உயிர் தப்பியவர்களை பிடித்திழுத்துத்கொண்டு மீண்டும் ஓர் இடம் தேடி ஓடினர்கள். குழந்தையுடன் உயிர்தப்பிய யாழினியும் ஏனையவர்களுடன் பாதுகாப்பு தேடி ஓடினாள். அவள் செல்லுமிடதான் அவள் குழந்தையை அவள் பிரியப்போகுமிடம் என்பதை அறியாமல் ஓடினாள்.

நேரம் இரவு 10.00 பார்த்தீபன் நிலை

நடந்து நடந்து களைத்த பார்த்தீபன் களைப்பின் மிகுதியால்  தான் நிற்க்கும் இடத்தை கவனிக்க மறந்தான். மீண்டும் உணவு தேடி புறப்பட எழுந்தவன் கையில் தட்டுப்பட்ட சுவரினைப்பிடித்து எழும்ப முயற்சி செய்தபோது அந்த களிமண்ணால் கட்டப்பட்டிருந்த ஒரு சுவரும் அருகில் தெரிந்த பனை ஓலை வேலியும் ஆபத்தை உணர்த்த அந்த நேரத்திலும் மூளை தன் கடமையையை சரியாகச் செய்ய அது தனக்கு பாதுகாப்பற்ற இடம் எனப்புரிந்திருந்தது. அங்கிருந்து புறப்பட எத்தனித்தபோதும் விதி அவனை விடவில்லை. அங்கேயே காத்திருந்து ஆள்நடமாட்டம் குறைந்ததும் வெளியேற நினைத்திருந்தான் பார்த்தீபன்.

நேரம் கடந்துகொண்டே இருந்தது அந்த இடத்தில் எங்கிருந்தோ வந்த உணவுவாசம் அவன் நாசியை துளைக்க சுற்றும் முற்றும் பார்த்தான். மங்கலான மின்வெளிச்சத்தில் அந்த இடம் கொஞ்சம் தெரிந்தது தூரத்தில் ஒன்றிரண்டு ஆட்க்களின் நடமாட்டமும்  தெரிந்தது. அவை தற்காலிகமாக அமைக்கபட்டிருந்த இருப்பிடங்களாக இருக்கவேண்டும்.  தெரிந்தவரை அந்த இடத்தில் இருப்பது பாதுகாப்பற்றது எனப்புரிந்தது. ஆனாலும் அங்கு பசியில் வாடும் நூற்றுக்கணக்கானோரில் அவன் மனைவி மக்களும் அடக்கமே. அடுத்தநிமிடம் இடுப்புவரைக் குனிந்து தவழ்வதுபோல் மெதுமெதுவாக நடக்க ஆரம்பித்தான் பார்த்தீபன். அவன் கைவைத்திருந்த சுவர் முடியும் இடம் வந்தது. யாரோ ஒருவரின் நிழல் தன்முன் விழுவதுபோன்று தெரிய நிமிர்ந்து எட்டிப் பார்த்தான் பார்த்தீபன். அவன் உணர்வு மிகச் சரி என்பதுபோல பார்த்தீபன் நின்றிருந்த இடத்திற்கு மிக அருகில் யாரோ ஒருவன் நின்றிருந்தான். அவனுக்கும் பார்த்தீபனுக்குமான இடைவெளி வெறுமனே சில அடிகள்தான். வந்தவன் வாயிற்புறத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டான். பார்த்தீபனோ வாயிற்புற சுவர் முடியும் இடத்தில். ஒருசிலர் மட்டுமே தங்கக்கூடிய சிறிய குடிசை அளவே இருந்தது அந்த இடம். அந்த இடத்தை விட்டு வெளியேறும் வழியும் தெரியாதே

பார்த்தீபனின் போதாத காலம் அந்த நேரத்தில் தும்மல் வடிவில் வந்துசேர்ந்தது. அவன் தும்மிய அதே நேரம் இன்னுமொரு தும்மல் சத்தம் கேட்டதை பயத்திலிருந்த பார்த்தீபன் அப்போது அறியவில்லை. அவனைக்காப்பாற்றப்போகும் அதே தும்மல் சத்தம்தான் அவனைக் கொலைகாரனாகவும் மாற்றவிருந்தது. .

தும்மல் சத்தம் கேட்ட அடுத்த கணம் அமர்ந்திருந்தவன் எச்சரிக்கையுணர்வுடன் கையில் ஆயுதத்துடன் எழுந்து வருவது தெரிய எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த பார்த்தீபன் வேகமாக தலையை பின்னிளுத்துக்கொண்டான். இருட்டின் நிசப்தத்தில்  வரும் ஆபத்தில் கதிகலங்கிப்போயிருந்தான் பார்த்தீபன். அப்பா உணவு கொண்டுவருவார் என காத்திருக்கும் மகளும் உணவுதேடிப்போன கணவன் திரும்பிவருவான் என காத்திருக்கும் மனைவிக்கும் இன்னும் முழுவளர்ச்சிகூட அடையாது அவள் வயிற்றில் வளரும் சிசிசும் தன் மரணத்திற்கு பின் என்ன ஆவார்களோ தன் இவர்கள் கையில் சிக்கினால் பிணம் கூட உரியவர்களிடம் சேராதே தான் யாரென்று அறியாத இவர்களிடம் என்னவென்று சொல்லி தன் பிணத்தை யாழினியிடம் சேர்க்கச் சொல்வது பசிமயக்கத்தில் இப்போதே பாதி உயிர்போய்விட்ட நிலையில் தன் மரணத்தை அவள் தாங்குவாளா?  என் குழந்தைகள் கதி ? மீண்டும் அவன் எண்ணம் மகளிடம் வந்து நின்றது.  வாயுவேகம் மனோ வேகம் அதை பார்த்தீபன் மனமும் சரியாகச் செய்தது. நான் மரணத்தை வென்றாகவேண்டும். இப்போது என் மரணம் நிகழ்ந்தால் என்குடும்பம் அநாதையாகிவிடும்.  மரணத்தை வென்றே ஆகவேண்டும் என்ற எண்ணம் தீர்க்கம் பெற என்ன செய்வது என வேகமாக சிந்தித்த பார்த்தீபன் கண்ணில் பட்டது கல். அடுத்த கணம் வேறு எதையும் சிந்திக்காது அருகில் கிடந்த கல்லை கையில் எடுத்து அடிக்க தயாரானான்.

அடிக்க காத்துக்கொண்டிருந்த பார்த்தீபன் தன்னை நோக்கி வந்தவனின் காலடி ஓசை சட்டென நிற்கவும் மீண்டும் எட்டிப்பார்த்த பார்த்தீபனின் கண்ணில் பட்டது அந்த காட்சி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.