(Reading time: 19 - 38 minutes)

சுற்றி இருக்கும் மற்ற எல்லாரும் பொழிந்துக்கொண்டிருக்கும் அன்பை எல்லாம் மறக்கடிக்கும் போதை பொருளா காதல்? அதை அடைந்து விட வேண்டும் என்பதற்காக கண்மூடித்தனமாக மற்ற எல்லோரையும், எல்லாவற்றையும் தூக்கி எறியும் காதலில் அவனுக்கு கண்டிப்பாக நம்பிக்கை இல்லை.

அதன் பிறகு உறவினர்களின் முன்னால், அவர்கள் கேலிபார்வையின் முன்னால் அவமானத்தில் உடைந்து போய் நின்ற அப்பாவை, உடல் நலம் குன்றிப்போய் நின்ற அம்மாவை, அழுதுக்கொண்டு நின்ற இன்னொரு தங்கையை என அனைவரையும் தாங்கி நிமிர்த்தி இருக்கிறான் கெளதம்.

வித்யாவுக்கும் ஒரு நல்ல வாழ்கை அமைத்துக்கொடுத்திருக்கிறான் அவன். அப்போதெல்லாம் எட்டிகூட பார்க்காத தங்கை, இதோ நாலு வருடங்கள், கழித்து எல்லாரும் நிமிர்ந்து நல்ல நிலைக்கு வந்த பிறகு மறுபடியும் அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்திருக்கிறாள்.

கனல் பார்வையும், காரமான குரலுமாக அவன் உதிர்த்த வார்த்தைகளில் கலங்கி போனவளாக சொன்னாள் ப்ரியா 'நா... நான் இத்தனை நாள்...இத்தனை நாள் வரலைன்னாலும் உங்களை எல்லாம் நினைச்சு தி... தினமும் அழுவேன்..... '

'பார்ரா ....... அப்புறம்???? ' என்றான் மனம் ஆறாதவனாக.

'நிஜமாண்ணா... சௌம்யா கல்யாண பேச்சு வரும் போது இது கார்த்திக் குடும்பம்னு தெரியாம நீங்க ஜாதகம் அனுப்பி இருந்தீங்க. உன் போட்டோவை பார்த்திட்டு நான் தான் இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்னு சொன்னேன். நீ பொண்ணு பார்க்க வந்த போது நான் வெளியே போயிட்டேன். நிச்சயத்துக்கு கூட நான் வரலை..... எனக்காக தான் எல்லாரும் இப்படி செஞ்சாங்க... அவங்க எல்லாரும் நல்லவங்கண்ணா...'

'அவங்க எல்லாரும் நல்லவங்க... நாங்க கெட்டவங்க... ரொம்ப சந்தோஷம்... நீ கிளம்பு தாயே...' அவளை நோக்கி கை கூப்பினான் கெளதம். யாரும் ஒரு வார்த்தை பேசவில்லை அங்கே.

'அண்ணா...'

'தயவுசெய்து என்னை அண்ணான்னு கூப்பிடாதே. எனக்கு ஒரே ஒரு தங்கைதான் அது வித்யாதான் .' இன்னுமாக உயர்ந்தது அவன் குரல்.  

'அண்ணா ப்ளீஸ்ண்ணா .....  நான் உன் கல்யாணத்தை பார்க்கணும்...'

'போதும்... நீ பார்த்தது செஞ்சது எல்லாம் போதும்... வீட்டை விட்டு போடி வெளியே...' அதிர்ந்து எகிறி வெடித்தன அவனது வார்த்தைகள். அனைவரும் உறைந்தே போனார்கள். கண்களில் நீர் வழிய எல்லாரையும் ஒரு முறை பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் ப்ரியா.

'போகட்டும்... போகட்டும்... இவள் கண்ணீரை கண்டெல்லாம் உருகி போகிறவன் நானில்லை....' ஏனோ அன்று முழுவதும் தனக்குள்ளே சொல்லிக்கொண்டே இருந்தான் கெளதம்.

ரவு உறக்கம் கிட்டவில்லை. மாடியில் அவன் நடை பயின்றுக்கொண்டிருக்க அவனுருகில் வந்தார் அவன் அப்பா.

'என்னடா கண்ணா... தூக்கம் வரலையா?'

'அதெல்லாம் ஒண்ணுமில்லைபா... சும்மா....'

'உனக்கு நாலு நாளிலே கல்யாணம்டா கண்ணா . எல்லாரும் சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம் இப்போ போய் இப்படி எல்லாம்... வீட்டுக்கு வந்த பொண்ணு அழுதிட்டு போனது மனசுக்கு கஷ்டமா இருக்கு பா' மெலிதான குரலில் சொன்னார் அப்பா. அவன் மனதையும் அந்த காட்சி தானே வருத்திக்கொண்டிருக்கிறது.

'அப்பா... அது.. அதுக்காக அவ செஞ்சது எல்லாம் சரின்னு சொல்லாதீங்கப்பா... அவ மேலே உயிரையே வெச்சிருந்த நம்மை எல்லாம் ஒரே நாளிலே தூக்கி போட்டுட்டு போனவ பா... அவ காதலை விட நம்ம வெச்ச பாசம் எந்த விதத்திலே கம்மி.??? காதல், பாசம் எல்லாம் அன்போட வெளிப்பாடு தானே பா???'

பேசாமல் நின்றிருந்தார் அப்பா.

'சௌம்யா உன்கூட வந்தாளே அது மட்டும் ரைட்டான்னு கேட்பீங்க. தப்புதான். அதுவும் தப்புதான். நான் தான் அந்த தப்பை செய்ய வெச்சேன்... வேணும்னே செய்ய வெச்சேன்.....' என்றான் கெளதம்.

'சரிடா.. சரிடா கண்ணா... அவன் தோள் அணைத்துக்கொண்டு சொன்னார் அப்பா. 'நான் அவ செஞ்சது ரைட்டுனு சொல்லலை. ஆனா மன்னிக்க முயற்சி பண்ணலாமான்னு கேட்கறேன்....உன் கூட பிறந்தவளை நீ மன்னிக்காம யார் மன்னிப்பாங்க.???' யோசிச்சு பாரு. அதுக்கு மேலே நீ எடுக்கறதுதான் முடிவு.' சொல்லிவிட்டு இறங்கி சென்று விட்டார் அப்பா.

'ப்ரியாவின் கண்ணீர், பெற்றவர்களை பிரிந்து வந்தும் அந்த வருத்தத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வளைய வரும் சௌம்யா, பெற்ற மகளின் மீதிருக்கும் பாசத்தை அவன் வார்த்தைக்காக வெளிக்காட்டாமல் இருக்கு பெற்றோர் என எல்லாருமாக சேர்ந்து கௌதமை கொஞ்சம் கொஞ்சமாக கரைக்க ஆரம்பித்திருந்தனர்.

ன்னும் இரண்டு நாட்கள் கடந்திருந்தன. எல்லார் முகத்திலும் வாட்டம் மட்டுமே குடிக்கொண்டிருந்தது. திருமணத்திற்கென வந்திருந்த உறவினர்களிடமும் இதே வாட்டம். 

'இருக்கட்டும். யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நீ இதற்கெல்லாம் கவலைப்படாதே' அவன் அறிவு அவனுக்கு ஆணை இட்டுக்கொண்டே இருந்தது ஆனால் மனம்??? ப்ரியாவையே சுற்றி சுற்றி வந்தது.

அன்றிரவு .... டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தனர் அனைவரும்.

'ஆண்டவா...' என்றான் 'ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க.???'

'ஏன்பா எல்லாரும் நல்லாத்தானே இருக்கோம்' இது அம்மா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.