(Reading time: 18 - 36 minutes)

னிமேல் அவன் தொந்தரவு பண்ணினாச் சொல்லு... போலீஸ்ல சொல்லிடலாம்... என் செல்ஃபோன்ல நிஜமாவே அவன் பேசியதைப் பதிவு செய்திருக்கிறேன்...” எனத் தங்கையிடம் அதைப் போட்டுக் காட்டினான் நந்தகுமார்.

“அண்ணன்னா என் அண்ணன் தான்... நீங்க இருக்கறப்போ எனக்கு எந்தக் கவலையுமில்லை.... தேங்க்ஸ் அண்ணா...” எனக் குதூகலத்துடன் சொன்னவள்,

“இந்த வெள்ளிக்கிழமை ஜவுளி எடுக்கப் போகணும்... அதனால் வேலைக்கு லீவு போடச் சொல்லி ஞாபகப்படுத்தச் சொன்னாங்க அம்மா....” என்றாள்.

அவர்களின் பெற்றோர்கள், உறவில் பத்திரிக்கை வைப்பதற்கு அன்று காலையில் தான் வெளியூர் சென்றிருந்தனர்.

ங்கை சொன்னதைக் கேட்டதும், மீண்டும் ஜனனியை வேறொருவனுடன் பார்த்த அந்தக் காட்சி நந்தகுமாரின் மனக் கண்ணில் ஓடியது. எது எப்படி என்றாலும் இதை உடனே தெளிவுபடுத்திவிட வேண்டும்.

ஆனால் அதிலும் ஓர் சிக்கல். ஜனனியை எப்போது அழைத்தாலும் வேலையில் ‘பிசி’ என்ற பதில் தருவாள். இல்லையென்றால், அழைப்பை ஏற்று ஒன்றிரண்டு வார்த்தைகள் மேலோட்டமாகப் பேசிவிட்டு, “அப்புறம் பேசறேன்...” என வைத்துவிடுவாள்.

ஆனால் இதுவரையில் அவளாக நந்தகுமாரை அழைத்தது இல்லை. அதெல்லாம் வெட்கம் என அவனாகப் பெயர் சூட்டிக்கொண்டது அவனது முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம்.

இனிமேல் அப்படி ஊகங்களுக்கு இடம் தராமல் நேரில் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் மறுநாள் மதியம் ஜனனியின் அலுவலகத்தில் போய் நின்றான் நந்தகுமார்.

சொல்லாமல் கொள்ளாமல் பணியிடத்தில் நந்தகுமார் அப்படி வந்து நிற்பான் என ஜனனி சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அது மட்டுமல்லாமல் நந்தகுமாரைப் பார்த்த, அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பெண்கள் வேறு, “யாருடி இது? ஆளு ஹேன்ட்சம்மா இருக்கார்..” எனக் கேட்டு அவளைத் திணற வைத்தனர்.

ஜனனி பதில் சொல்லத் தடுமாறுவதைப் பார்த்த நந்தகுமார், “நண்பன்” என்று மட்டும் சொல்லி அனைவரிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டான்.

ஒருவிதத் தவிப்புடன் நின்றிருந்த ஜனனியைப் பார்த்து, “கொஞ்சம் தனியாப் பேசணும்...” என்றான் நந்தகுமார்.

“அது.. இப்போ.. பிஸியா...” என ஜனனி சன்னக் குரலில் ஆரம்பிக்க, “நீங்க வேறொருத்தரோட வண்டியில் போனதை நேற்றுப் பார்த்தேன்...” எனப் பார்த்த இடத்தையும், நேரத்தையும் நந்தகுமார் சொல்ல, ஜனனிக்கு உள்ளூர உதறலெடுக்க ஆரம்பித்துவிட்டது.

அத்துடன் தன்னை இதுவரையில் ஒருமையில் அழைத்துக் கொண்டிருந்தவன் இப்போது பன்மைக்குத் தாவிவிட்டான். அப்படியென்றால் ஓரளவுக்கு விஷயத்தை ஊகித்திருப்பான். இனி மறைப்பதில் பயனில்லை எனத் தோன்றியது ஜனனிக்கு.

“இனியும் பிஸின்னு சாதிக்கப் போறீங்களா ஜனனி? பேசியே ஆகணும்... இப்போ என் நிலை என்ன என எனக்குத் தெரியணும்...” என்றான் நந்தகுமார் அவள் கண்களை ஊடுருவி.

அதற்கு மேல் மறுப்புத் தெரிவிக்காமல், “இதோ வரேன்,...” என அலுவலகத்தினுள் சென்று அனுமதி வாங்கிக் கொண்டு வந்தாள் ஜனனி.

வள் அலுவலகத்துக்கு எதிரேயுள்ள உணவகத்துக்குச் செல்லும் வரையில் நந்தகுமார் எவ்விதப் பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளவில்லை. ‘இனி என்ன ஆகுமோ?’ எனத் தட தடக்கும் இதயத்துடன் அவனைப் பின் தொடர்ந்தாள் ஜனனி.

உள்ளே சென்று அமர்ந்த நந்தகுமார், அவளுக்குப் பிடித்த உணவு எது எனக் கேட்டு அங்கு வந்த பணியாளரிடம் சொல்லிவிட்டு, “சொல்லுங்க... என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?” என்றான் நந்தகுமார்.

“வந்து... எதைப் பத்தி?” எனக் கேட்ட ஜனனி தானாக எந்த விஷயத்தையும் கொட்ட முன் வரவில்லை.

“கல்யாணத்துக்கு முன்னாடி நாள் ஓடிப் போகலாம் எனத் திட்டம் போட்டிருக்கீங்களா?” என்ற நந்தகுமாரின் நேரடித் தாக்குதலில் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தாள் ஜனனி.

அவள் அமர்ந்திருந்த நிலையே அவள் அதைத் தான் முடிவு செய்திருக்கிறாள் என்பதைக்  காட்ட , “இதைப்பத்தி சம்மந்தப்பட்ட என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லணும் எனத் தோணலையா?” எனக் குரல் உயர்த்திக் கேட்டான் நந்தகுமார்..

திடீரென்று ஓங்கி ஒலித்த குரலில் அங்கிருந்தவர்கள் சிலர் அவர்களைத் திரும்பிப் பார்க்க, “எ.. எல்லோரும் பார்க்கிறாங்க...கொ... கொஞ்சம் மெதுவா...” என்றாள் ஜனனி.

“ம்ம்ம்..” என விரக்தியாகப் புன்னகைத்த நந்தகுமார், “இங்கே ஒண்ணு ரெண்டு பேர் பார்க்கிறதுக்கே உங்களுக்குச் சங்கடமா இருக்கே, நாளைக்கு நீங்க பண்ணப்போற காரியத்துக்காக எத்தனை பேர் எத்தனை விதமாப் பேசுவாங்க... அதை யோசிச்சுப் பார்த்தீங்களா?” என்றான்.

பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தவளைப் பார்த்து, “நீங்க பண்ணப்போற காரியத்தால் என் குடும்பம் பாதிக்கப்படும் என்கிற எண்ணம் கொஞ்சமாவது உங்களுக்கு இருந்ததா?” என நந்தகுமார் கேட்க, இப்போது ஜனனிக்கு கண்கள் கரித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.