(Reading time: 18 - 36 minutes)

தான் அவனுக்குச் சொந்தமாகப் போவதில்லை என்று தெரிந்தும் காட்டுக் கத்தல் கத்தாமல், அவளுக்கு மரியாதை தந்து பேசுபவனைப் பார்த்த ஜனனிக்கு மனம் நிலைகொள்ளவில்லை.

அவளைத் திட்டியிருந்தால் அவள் செய்யவிருந்த காரியத்துக்குக் கிடைத்த தண்டனை என்று மனம் ஆறியிருக்கும். ஆனால் இவனோ இப்படி அமைதியாகப் பேசிக் கொண்டிருக்கிறானே.

அத்தோடு நந்தகுமார் கேட்டதைப் போல் அவள் இதையெல்லாம் யோசிக்காமல் இல்லை. நந்தகுமாரிடம் சொல்லி உதவி கோரலாம் என்று அவள் காதலன், பிரதீப்பிடம் சொல்லிப் பார்த்தாள்.

ஆனால் அவனோ, ‘இப்படிப் பாவம் பார்த்தால் பிறகு நாம் இந்த ஜென்மத்தில் ஒன்று சேர முடியாது... விஷயம் வெளியில் தெரிந்து அவன் பிரச்சனை செய்தால், அப்புறம் உன் வீட்டுக்கும் தெரிந்துவிடும்...’ என அவளை அமைதிப்படுத்திவிட்டான்.

அவள் காதல் கைகூடுவதற்காகத் திட்டம் போடும் போது தோன்றாத வேதனை அந்த நிமிடத்தில் அவள் மனதில் தோன்ற, ஜனனிக்கு அழுகை பொங்கியது.

“ப்ளீஸ் அழாதீங்க... இப்படியெல்லாம் பேசி உங்க மனச மாத்த வரலை நான்... ஏதோ என் ஆதங்கம்... முன்னாடியே சொல்லி இருந்தா வேற மாதிரி முடித்திருக்கலாம்...” என ஆதங்கப்பட்டான் நந்தகுமார்.

“சாரி....” என ஜனனி விசும்பலுக்கிடையில் சொல்ல,

“ப்ச்... உங்களைப் பத்தி என் மனதில் கனவுகளை விதைக்காமல் இருந்திருப்பேன்... இப்போ அந்தக் கனவுகள் கலைந்து போனதில் ஏமாற்றம்... கொஞ்சமே கொஞ்சம் இங்கே வலிக்குது...” என இதயம் இருக்கும் இடத்தைத் தட்டிக் காட்டினான்.

“நான் வேணும் என....” என ஜனனியால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

“இட்ஸ் ஓகே... கொஞ்ச நாள்ல இதைக் கடந்து வந்திடுவேன்... சரி, மார்கெட்ல இருக்கிற ஒரு புதுக் கார் பெயர் சொல்லுங்க...” என்றான் நந்தகுமார்.

திடீரென்று அப்படிக் கேட்டதும் ஜனனி திகைத்து விழிக்க, “சும்மா சொல்லுங்க... அந்தக் கார் வாங்கித் தந்தா தான் கல்யாணம் என உங்க வீட்டில் மிரட்டப் போகிறேன்... எப்படி?” எனச் சிரித்த நந்தகுமாரைப் பார்த்து அவளின் மனம் கனத்துப் போனது.

“உங்க வீட்டில் பேசறேன்... அங்கே என்ன ரியாக்ஷன் என நீங்க தான் எனக்கு அடிக்கடித் தகவல் சொல்லணும்... அதற்கேற்பத் தான் நான் திட்டம் போடணும்..” என்ற நந்தகுமார், பணியாளரை அழைத்து உணவுக்கான பணத்தைச் செலுத்தினான்.

பின்னர், “நேரமாகுது... நான் கிளம்பறேன்... உங்க வீட்டில் சம்மதம் வாங்கி, அவங்க ஆசிகளோடக் கல்யாணம் பண்ணிக்கோங்க... ஆல் த பெஸ்ட்...” என விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான் நந்தகுமார்.

“நந்தா...” என முதல் முறையாக அவன் பெயரைச் சொல்லி அழைத்த ஜனனி, “ரொம்பத் தேங்க்ஸ்... உங்களுக்கு மனைவியா வரப் போற பொண்ணு ரொம்பக் கொடுத்து வச்சவங்க’...” என்றாள்.

அதைக் கேட்டு கலகலவென்று சிரித்த நந்தகுமார், “ஆனால் அது நீங்களா இல்லாமல் போயிட்டீங்களே...” என்றவன், ஜனனியின் முக மாறுதலைப் பார்த்து,

“ஹே... சும்மா ஜோக்குக்கு சொன்னேன்... ஆனால், இது தான் நீங்க நீளமா என்கிட்டே பேசிய முதல் வாக்கியம்...” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.

டனே பிரதீப்பை அழைத்த ஜனனி நடந்ததைச் சொல்ல, இவள் நிம்மதி அடைந்ததைப் போல் அவன் நிம்மதி அடையவில்லை.

“அவன் சொன்ன மாதிரி கல்யாணத்தை நிறுத்தினாலும் நம் காதலை எப்படி உன் வீட்டில் ஒத்துக்குவாங்க...? அதனால் நம் திட்டப்படி கல்யாணம் பண்ணிக்கலாம்...” என்றான் பிரதீப்.

“அதில்லை பிரதீப்... இன்னும் கொஞ்சம் டைம் இருந்தா எப்படியாவது பேசி அப்பா-அம்மாவைச் சம்மதிக்க வச்சிடுவேன்...” என்றாள் ஜனனி.

“நம்ம ‘பிளான்’ படி கல்யாணம் பண்ணிக்கிறோம்... அவ்வளவு தான்...” என அவன் திட்டவட்டமாகச் சொல்ல, “ப்ளீஸ் பிரதீப்...” என்றாள்.

“ ப்ளீஸ் ஜனனி, ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிற? உன்னை யாருக்கும் என்னால் விட்டுக் கொடுக்க முடியாது...” என்றான்.

“ம்ம்ம்.. சரி...” என அரைமனதாகச் சம்மதித்தாலும் உள்ளம் ஏனோ நிலை கொள்ளவில்லை ஜனனிக்கு.

கைப்பையை எடுத்துக் கொண்டு மீண்டும் தன் அலுவலகத்தை நோக்கி ஜனனி நடக்க, அலுவலகத்தை ஒட்டியிருந்த கடைக்கு முன்னால் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது.

‘நின்னுட்டு இருந்தவன் மேலே மோதிட்டுப் போயிட்டான் அந்தக் கடங்காரன்... தண்ணியைப் போட்டுட்டு கண்டபடி லாரியை ஓட்டறது...’ எனக் கடந்து சென்றவர்கள் பேசியது அவளது காதில் விழுந்தது.

‘ஏதோ ஆக்சிடென்ட் போல... ஐயோ பாவம்’ என ஜனனியால் பரிதாபம் மட்டுமே பட முடிந்தது. அதற்குமேல் கவலைகொள்ள முடியாமல் வேலை அழைக்க, உள்ளே சென்றாள்.

 சற்று நேரத்தில் ஜனனியின் கைப்பேசிக்கு அவள் தந்தை, பசுபதி அழைத்து, “ஜனனி, உடனே கிளம்பி ‘டூலிப்’ மருத்துவமனைக்கு வாம்மா... மாப்பிள்ளைக்கு ஆக்ஸிடென்ட்...” என்றார்.

அதைக் கேட்ட ஜனனிக்கு தலை ‘கிர்ரென்று’ சுழன்றது. சற்றுநேரத்துக்கு முன்னால் நன்றாக இருந்தானே? தன் கண் முன்னால் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தானே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.