(Reading time: 18 - 36 minutes)

..அப்பா... உ...உயிருக்கு ஒ... ஒண்ணும் ஆ...ஆபத்தில்லையே....” எனத் திக்கித் திணறிக் கேட்பதற்குள் அவளையும் அறியாமல் கன்னத்தில் கண்ணீர் மளமளவென்று இறங்க ஆரம்பித்துவிட்டது.

“தெரியலைடா... இப்போ தான் சம்மந்தி விஷயத்தைச் சொன்னாங்க... நான் அம்மாவைக் கூட்டிட்டு நேரா அங்கே வரேன்” என அவசரமாக அழைப்பை வைத்துவிட்டார் பசுபதி.

அவளுக்கு உடனே அங்கே ஓட வேண்டும் போல் தோன்றியது. ஆனால் இருக்கும் பதட்டத்தில் அவளால் வண்டியை ஓட்ட முடியும் என்று தோன்றவில்லை. அதனால் ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்குச் சென்றால், நந்தகுமாரின் மொத்தக் குடும்பமும் அங்கே அழுகையில் கரைந்து கொண்டிருந்தது.

“அத்தை...” என ஜனனி சொன்னது தான் தாமதம், ‘ஓ’வென்று பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்துவிட்டார் நந்தகுமாரின் அன்னை. சொல்ல வந்த தேறுதல் வார்த்தைகள் அவளது தொண்டைக் குழியில் சிக்கித் தவிக்க, ஜனனியின் பெற்றோர்கள் அங்கு வந்து சேர்ந்தனர்.

அவர்களைப் பார்த்த நந்தகுமாரின் தந்தை, “காந்தி ரோட்ல ஏதோ ஒரு கடை முன்னாடி நின்னுட்டு இருந்தப்போ, சைட்ல வந்த லாரிக்காரன் இடிச்சுட்டுப் போயிட்டான்... கீழே விழுந்ததில் தலையில் நல்ல அடி...” எனக் கண்ணீருக்கிடையில் சொல்ல,

“என் பையன் யாருக்குமே கெட்டது நினைக்க மாட்டானே... அவனுக்குப் போய் இப்படி ஒரு நிலைமையா?” எனக் கதறினார் நந்தகுமாரின் அன்னை.

அவர்கள் சொன்னதைக் கேட்ட ஜனனியின் கால்கள் துவண்டன. பொத்தென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவள் குலுங்கி அழ ஆரம்பித்தாள். அந்த காந்தி சாலை அவள் அலுவலகம் இருக்கும் சாலை.

‘சற்றுநேரத்துக்கு முன்னால் உணவகத்தில் இருந்து அவள் வெளியில் வந்த பொழுது பார்த்த மக்கள் கூட்டம், இவனைச் சுற்றித் தான் நின்று கொண்டிருந்ததா ?’

‘உன் விஷயம் குறித்துப் பேச வந்ததால் தான் இப்படி விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். நீயானால் விபத்தில் அடிப்பட்டவனைக் கண்டு கொள்ளாமல் வேலை என்று சுயநலமாகச் செயல்பட்டிருக்கிறாய்...’ என அவள் மனசாட்சி அவளைக் குற்றம் சாட்டியது.

அப்போது அங்கே வந்த மருத்துவர், ‘அவர் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை... ஆனால் அவருக்குச் சுயநினைவு திரும்புமா, இல்லை, அப்படியே கோமாவில் இருப்பாரா என 24 மணிநேரம் போனாத் தான் தெரியும்’ என்றார்.

நந்தகுமாரின் உயிருக்கு ஆபத்தில்லை என்ற விஷயம் அங்கிருந்தவர்களின் மனக் காயத்துக்கு மருந்திட்டாலும், அவனுக்கு சுயநினைவு திரும்பினால் மட்டுமே அது முழுதாக ஆறும்.

ஆனால் இருபத்திநாலு, நாற்பத்தி எட்டு, எழுபத்தி இரண்டு, தொண்ணூற்று ஆறு மணி என நேரம் கடந்து போனாலும் நந்தகுமாரின் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

நான்கு நாட்களாக வேலைக்குச் செல்லாமல் மருத்துவமனையே கதி என்று கிடந்த ஜனனியின் நிலையைப் பார்த்த அவள் பெற்றோருக்கு வயிறு கலங்கியது. தங்கள் பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடுமோ என அஞ்சினர்.

அதனால் அன்றிரவு ஜனனி படுக்கப் போவதற்கு முன்னால், “ஜனனி, மாப்பிள்ளைக்கு எப்போ சுயநினைவு வரும் எனச் சொல்ல முடியாது... நல்லவேளை கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி நடந்தது. அதனால் இந்தக் கல்யாணத்தை நிறுத்திடலாம் என நானும் அம்மாவும் முடிவு பண்ணியிருக்கிறோம்...” என்றார் பசுபதி.

அவள் விரும்பாத திருமணம் தான். விருப்பப்பட்டு ஏற்பாடு செய்த அவள் தந்தையே இத்திருமணத்தை நிறுத்திவிடுகிறேன் என்று சொல்லிவிட்டார். ஆனால் ஜனனியால் மகிழ முடியவில்லை.

தந்தை சொல்வது காதில் கேட்டாலும், பதில் சொல்லாமல் வெற்றுப் பார்வை ஒன்றை வீசிவிட்டுத் தன்னறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

“என்னங்க இவ, இப்படி இருக்கா?” என ஜனனியின் அன்னை பார்வதி கலக்கத்துடன் கேட்க,

“சின்னப் பொண்ணு தானே.. கொஞ்ச நாள்ல சரியாயிடுவா... நம்ம முடிவு சரின்னு ஏத்துக்குவா...” என்றார் பசுபதி.

பசுபதி மகளிடம் சொன்னவாறே நந்தகுமாரின் பெற்றோர்களை அழைத்து, ‘இந்தத் திருமணம் நடக்காது’ எனச் சொல்ல, “அவசரப்படாதீங்க....” என்றனர் அவர்கள்.

“உங்க மகளுக்கு இப்படி ஓர் நிலைமை வந்தா இப்படிப் பேசுவீங்களா?” எனக் கேட்டு பசுபதி அவர்களின் வாயை அடைத்துவிட்டார்.

நந்தகுமாரின் பெற்றோர்களால் அதற்குமேல் என்ன சொல்ல முடியும்? மகனின் நிலை குறித்து மேலும், மேலும் கண்ணீர் மட்டுமே சிந்த முடிந்தது.

மேலும் ஒரு ஆறு நாட்கள் கடந்து செல்ல, ஜனனியை அழைத்த பிரதீப், அவர்களின் திருமணத் திட்டத்தைப் பற்றிச் சில முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டான்.

அவன் சொல்வதைப் பொறுமையாகக் கேட்ட ஜனனி, “பிரதீப், நேர்ல பேசணும்...” என்றவள், அவள் எப்போதும் செல்லும் கோவிலுக்கு அவனை வரச் சொன்னாள்.

சொன்ன நேரத்துக்கு வந்த பிரதீப்பை ஓர் தூணுக்கு அருகில் அமரச் சொன்னவள், தானும் அமர்ந்து கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.