(Reading time: 18 - 36 minutes)

நான் சொல்லப் போற விஷயத்தைக் கேட்டு உனக்குக் கோபம் வரலாம்... ஆனால் நான் எடுத்திருக்கும் இந்த முடிவினால் எனக்குக் கிடைக்கப் போகும் நிம்மதியையும், சந்தோஷத்தையும் வேறெந்த முடிவாலும் தர முடியாது..” எனப் பீடிகையுடன் ஆரம்பித்தாள் ஜனனி.

“என்ன சொல்ல வர்ற... நேரடியாச் சொல்லு...” எனப் பிரதீப் சொல்ல, “நம்ம கல்யாணம் வேண்டாம்...” என்றாள்.

“இதைத் தானே அடிக்கடி சொல்லிக் கடுப்பேத்தற... இரண்டு நாள்ல நம்ம கல்யாணத்தை வச்சுக்கிட்டு இன்னும் உன் வீட்டில் சம்மதம் வாங்கித் தான் கல்யாணம் பண்ணனும் என ஏன் பிடிவாதமா இருக்க?” என எரிச்சலுடன் கேட்டான் பிரதீப்.

“ஆமா... அவங்க கண்டிப்பாச் சம்மதிப்பாங்க என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு... ஆனால் நீ நினைக்கிற மாதிரி உன்னைக் கல்யாணம் பண்ணிக்க இல்லை... நந்தகுமாரை...” என்றாள் ஜனனி.

“என்ன உளர்ற? அவனுக்கு அடிபட்டதில் உனக்கு மூளை பிசகிடுச்சா?” எனக் கோபத்தில் வெடித்தான் பிரதீப்.

பின்னே கடந்த இரண்டு ஆண்டுகளாக உருகி, உருகிக் காதலித்தவளின் வாயில் இருந்து இப்படி ஓர் வாக்கியம் வெளிவந்தால் அவனுக்குக் கோபம் வராமல் என்ன செய்யும்?

“ப்ளீஸ் பிரதீப்... நான் சொல்லப் போறதை நிதானமாக் கேளு... நந்தகுமார் சந்தோஷமா வேறொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணியிருந்தா நானும் நிம்மதியா உன்னைக் கல்யாணம் செய்திருப்பேன்... சந்தோஷமாகவும் வாழ்ந்திருப்பேன்...”

“அடிபட்டதில் அவன் மேலே பரிதாபம் வந்துடுச்சா?” பிரதீப்புக்கு இன்னும் எரிச்சல் குறைந்தபாடில்லை.

“ம்ம்ஹூம்... பரிதாபம் இல்லை... அவர் மேலிருக்கும் நல்ல அபிமானம்... ஒரு நல்ல உள்ளத்தின் மேல் வைத்திருக்கும் மதிப்பு... அவருக்குத் துரோகம் பண்ணப் போறேன்னு தெரிஞ்சும் எனக்கு உதவ முன் வந்தாரே... அதற்குத் தரும் மரியாதை...

உண்மையைச் சொல்லு, அவர் சூழ்நிலையில் நீ இருந்திருந்தா அந்தப் பொண்ணுக்கு உதவியிருப்பியா?” எனக் கேள்வியாகப் பிரதீப்பைப் பார்த்தாள் ஜனனி.

அவன் மறுப்பாகத் தலையசைக்க, “நடக்கவிருக்கும் விபத்தை யாராலும் தடுக்க முடியாது பிரதீப்... ஆனால் என்னைப் பார்க்க வந்தப்போ தான் அவருக்கு அந்த விபத்து ஏற்பட்டது. அது வாழ்க்கை முழுக்க என்னைத் துரத்தும்...” என ஜனனி சொல்ல,

“அப்போ நீ என் மேலே வைத்திருந்த காதல் எல்லாம்....” என பிரதீப் அவளை ஊடுருவ,

“அது உண்மையான காதல் தான்... காதல் சுயநலமானது என எல்லோரும் சொல்லுவாங்க... ஆனால் என்னைப் பொறுத்தவரை காதல் சுயநலமில்லாதது... காதலுக்கு அடிப்படை அன்பு.

அந்த அன்பு இருக்கிறதால் தான் என்னால் உன்னைக் காதலிக்க முடிந்தது. அதே அன்பினால் தான் நந்தாவை இந்த நிலையில் அப்படியே விட்டுவிட்டு சுயநலமாக யோசிக்க முடியவில்லை” என்றாள்.

“நீ பேசறது சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கு ஜனனி... எவ்வளவு பணம் வேணும் சொல்லு... அவன் வைத்தியதுக்கு நான் கொடுக்கிறேன்...” எனப் பிரதீப் சொல்ல,

“இது பணத்தால் தீர்க்கக் கூடிய பிரச்சனை இல்லை பிரதீப்.. பாசத்தால், அன்பால் தான்முடியும். ... நான் இல்லை என்றாலும் உனக்கு வேறொரு நல்ல பொண்ணு கிடைப்பா... உடனே இல்லா விட்டாலும், வருங்காலத்தில் என்னை மறந்து நீ சந்தோஷமா இருப்ப...

ஆனால் நந்தகுமாரைப் பத்திக் கொஞ்சம் யோசிச்சுப் பார்... அவர் கண் முழிக்கிறது நாளைக்கா இருக்கலாம், இல்லை, இன்னும் இரண்டு வருஷம் கழிச்சும் இருக்கலாம்... அப்போ அவருக்கு வேலையிருக்காது... வசதி இருக்காது...

அவர் மீண்டும் அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கணும்... அவர் இழப்பிலிருந்து வெளிவரதுக்குள்ள காலம் கடந்திருக்கலாம்... அவருக்கு இறுதிவரை ஓர் துணை கிடைக்காமலே போகலாம்...

அதனால் அவர் கண் முழிக்கிறப்போ அவர் வாழ்க்கைக்கும் ஓர் அர்த்தம் இருக்கிறது எனப் புரிய வைக்கணும். அது என்னால் மட்டும் தான் முடியும்...” என நிறுத்தினாள்.

ஜனனி பேசுவதைக் கேட்ட பிரதீப்புக்கு எரிச்சல் கூடிக் கொண்டே போனது. “நீ பேசறதைக் கேட்டு எனக்கு எரிச்சல் வருது.. ஆனால் நீ ஓர் முடிவோட தான் என்னோட பேச வந்திருக்க... அதனால் உன்னோட சண்டைப் போட விரும்பலை... ஆனால் ஒண்ணு... இப்போ தான் எனக்கு உன்மேலே இருக்கும் காதல் அதிகமாகுது...” என்றான் வேதனையுடன்.

“வேண்டாம் பிரதீப்... ப்ளீஸ்... அப்படிச் சொல்லாத...” என்ற ஜனனியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. வலது கரம் கொண்டு அதைத் துடைத்தவள்,

“பிரதீப், மனசுக்குள்ள நந்தகுமாரைப் பற்றிய கவலையோட உன்னைத் தாராளமா கல்யாணம் பண்ணிக்கிறேன்... ஆனால் நான் தாமரை இலை மேல் பட்டுத் தெறிக்கும் மழைத்துளியைப் போலத் தான் ஒட்டாமல் இருப்பேன்...

இதுவே நான் நந்தாவைக் கல்யாணம் பண்ணிக்கொண்டால், வானம் பார்த்துத் திறந்திருக்கும் சிப்பியைப் போன்ற அவர் வாழ்வில் நான் மழைத்துளியாக நுழைவேன்.

அவர் உள்ளே இறங்கி, நான் முத்தாகவும் மாறுவேன்... என் உயிர்த்துளி அவரோட சங்கமமாகிறது தான் சரி... கூடிய விரைவில் சங்கமமாகும்... அந்த நம்பிக்கை எனக்கிருக்கு...” என்றாள் ஜனனி.

சற்றுநேரம் கோவில் மணியோசை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. அமர்ந்த நிலையில் ஜனனி அப்படியே அமர்ந்திருக்க, பிரதீப் எதுவும் பேசாமல் கோவில் வாசலை நோக்கி நடந்தான்.

This is entry #67 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.