(Reading time: 22 - 43 minutes)

ஜய், ராகவி இருவரின் குடும்பமும் பக்கத்து வீட்டுக்காரர்கள், இவர்கள் சிறுபிள்ளையாய் இருக்கும் போதிலிருந்தே அருகருகே வசிக்கின்றனர்... இரு குடும்பமும் ஒரு வருட இடைவெளியில் அங்கு வீடுகட்டி குடி வந்திருந்தனர்... அதிலிருந்தே நல்ல அன்னியோன்யமாய் இரு குடும்பமும் இருந்தது... அத்தை, மாமா என்று பெரியவர்களை கூப்பிட்டுக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் உறவினர்கள் போல் இருந்தனர்..

அஜய் பார்ப்பதற்கு சினிமா ஹீரோக்கள் போல் அழகாக இருப்பான்... ஆனால் அதையும் விட குணத்திலும், பண்பிலும் சிறந்தவனாக இருந்தான்... தந்தையின் லெதர் கம்பெனியை இன்னும் மேம்படுத்தும் முயற்சியில் உழைத்துக் கொண்டிருந்தான்...

அஜய், ராகவியின் இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது... அதையும் தாண்டி அது எப்போது காதலாக மாறியது என்பது ராகவிக்கு தெரியாது... இந்த காதலினால் நட்பு பாதிக்கப்படுமோ என்றும், அஜயின் மனதிலும் அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா?? என்று அறியும் வரைக்கும் மனதில் உள்ளதை வெளிப்படுத்தக் கூடாது என்று நினைத்திருந்தாள்...

அதேபோல் அஜயின் அன்னை மலர்விழிக்கும் ராகவியை மருமகளாக்கிக் கொள்ளும் எண்ணம் இருந்தது... நேரம் வரும்போது அதைப்பற்றி பேசலாம் என்று நினைத்திருந்தார்...

தன்னுடைய குடும்பம், அஜயின் குடும்பத்தை தவிர ராகவிக்கு இன்னொரு உலகம் என்றால், அது அவளின் தோழிகள்... இவளோடு சேர்த்து மொத்தம் ஐந்து பேர், பள்ளியிலிருந்தே அவளின் நெருங்கிய தோழிகள் அவர்கள்... ஒரே கல்லூரியில் படிக்க வேண்டும் என்று முடிவெடுத்து எல்லோரும் ஒன்றாகவே இருந்தனர்... ஆனால் இவளுக்கும் அவர்களுக்கும் எண்ணங்கள் வேறுபடும்.

அவர்களுடைய எண்ணங்கள் யாவும் அழகு சம்பந்தப்பட்டதை மையமாக குறித்தே இருக்கும்... அதாவது வெள்ளை நிறத்தோடு அடுத்தவரை ஈர்க்கும் அந்த அழகு... அதனாலேயே மாடலிங், பேஷன் டெக்னாலஜி, ஆங்கரிங் இதுப்போன்ற துறையிலேயே அவர்கள் இருக்க விரும்பினார்கள்...

ராகவிக்கோ தன் குடும்பத்தை மேம்படுத்த நன்றாக படிக்க வேண்டும், நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது...

எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கப்படுவது காதலுக்கு வேண்டுமென்றால் பொருந்தும்... நட்பைப் பொறுத்தவரை ஒத்தக் கருத்துடையவர்கள் தான் நல்ல நண்பர்களாக எப்போதும் இருக்க முடியும்... இல்லையென்றால் அந்த நட்பில் நேர்மை, உண்மை, ஒற்றுமை இதெல்லாம் சரியாக அமைவது கடினம் தான்... இருந்தும் அப்படியும் நல்ல நண்பர்களாக இருக்கவும் முடியும்... ராகவியை பொறுத்த வரை அப்படித்தான் இருக்க நினைக்கிறாள்... அப்படி இதுநாள் வரையிலும் இருந்துக் கொண்டிருக்கிறாள்...

ராகவியின் தோழிகள் அனைவரையும் அஜய்க்கு நன்றாக தெரியும்... அதேபோல் அஜயின் நண்பர்களை ராகவிக்கும் தெரியும்...

ராகவியின் தோழி ஸ்ரேயாவிற்கு அஜயின் அழகு மேல் ஒரு ஈர்ப்பு... அவனை போல் ஒருவன் கணவனாக கிடைத்தால், அதைவிட அதிர்ஷ்டம் வேறெதுவுமில்லை என்று நினைப்பாள்... அதனாலேயே மற்ற தோழிகளை விட, அஜயிடம் கொஞ்சம் நெருக்கமாகவே பழகுவாள்... ஒரு பெண்ணான அவளின் இந்த அணுகுமுறையை தெரிந்துக் கொண்ட அஜயின் மனம் அவள் பக்கம் சாயத் தொடங்கியது... இருவரும் காதலை வெளிப்படுத்திக் கொண்டார்கள்..

இதை அறிந்த ராகவிக்கு அதிர்ச்சியாக இருந்தது... அப்போதே அவளின் காதலை அவள் மனதுக்குள் போட்டு புதைத்துவிட்டாள்... இருவரின் காதலுக்கும் துணையாக இருந்தாள்...

அவர்களின் காதல் பற்றி அவர்கள் இருவரின் வீட்டாருக்கும் தெரிய வந்தது... ஸ்ரேயாவின் வீட்டில் சம்மதித்துவிட்டனர்... மலர்விழிக்கோ ராகவி மருமகளாக வர முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது... இருந்தும் மகனின் ஆசைக்கு மதிப்பு கொடுத்தார்... இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மூன்று மாதம் கழித்து திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது...

ராகவிக்கும் திருமணம் செய்ய அவளின் பெற்றோர் ஆர்வம் காட்டினர்... ஆனால் கொஞ்ச நாள் போகட்டும்... நான் இப்போது வேலைக்கு போக வேண்டும், என்று தள்ளிப் போட்டிருந்தாள்...

இதற்கிடையில் திருமணத்துக்கு இரண்டு மாதம் இருக்கும் தருவாயில், தோழிகள் ட்ரீட் கேட்பதாக சொல்லி, அஜயை அந்த பெரிய மாலுக்கு அழைத்துச் சென்றாள் ஸ்ரேயா... மற்ற தோழிகளோடு ராகவியும் இதில் அடக்கம்...

நல்ல ரெஸ்ட்டாரன்ட்டில் எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும், ஷாப்பிங் செய்ய திட்டமிட்டார்கள்... ஸ்ரேயா ஏதோ உடை வாங்க வேண்டும் என்று சொன்னதால், ஆடையகம் உள்ள தளத்திற்கு எல்லோரும் செல்ல, ஏதோ புத்தகம் வாங்க வேண்டும் என்று ராகவி சொன்னதால், அவள் மட்டும் புத்தக கடை உள்ள தளத்திற்குச் சென்றாள்...

அப்போது திடிரென, ஆடையகம் இருந்த தளத்தில் தீப்பிடித்தது... அவரவர் உயிரைக் காப்பாற்ற எல்லோரும் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓட, அஜய், ஸ்ரேயா மற்றும் தோழிகள் இருந்த இடத்தில் தான் கொஞ்சம் அதிகமாக தீ பரவியது...

அங்கிருந்து தப்பிக்க கொஞ்சம் கடினமாக இருக்க, அஜய் அவனைப் பற்றி கவலைப்படாமல் ஸ்ரேயா, மற்றும் தோழிகளை பாதுகாப்பாக வெளியே அனுப்பினான்... இன்னும் சிலரையும் காப்பாற்றினான்... அவன் தப்பித்து வருவதற்குள் தீ இன்னும் வேகமாக பரவியது...

இதற்குள் விஷயம் கேள்விப்பட்டு, ராகவி அங்கு வர... இன்னும் அஜய் வெளியில் வரவில்லையென்று தெரிந்து பதறினாள்... அவனை காப்பாற்ற அவள் முயற்சிக்க, யாரும் அவளை அங்கு செல்ல விடவில்லை... அதற்குள் தீயணைப்பு துறையினர் வந்து உதவியதால் அஜயை உயிருடன் மீட்டனர்... ஆனால் அவன் முகம் மற்றும் உடம்பில் தீக்காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.