(Reading time: 22 - 43 minutes)

" நீ சொல்லு... உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா..?? என்னடா இப்போ கேக்கறானேன்னு நினைக்காத... நம்ம யோசிக்கவோ, பேசி முடிவெடுக்கவோ முடியாத சூழ்நிலை அமைஞ்சுடுச்சு... நீயும் உன்னை கல்யாணம் செஞ்சுக்கப் போற மாப்பிள்ளை பத்தி நிறைய கனவு வச்சிருப்ப இல்லையா... நானும் உன்னை கவனிச்சுக்கிட்டு தான் இருந்தேன்... உன்னோட முகமே சரியில்ல... இதுல மணமேடையில வேற நீ அழுத... அதான் இப்போ கேக்கறேன்... உன்னோட மனசுல என்ன இருக்கோ சொல்லு... "

"ஆமாம் இந்த கல்யாணத்தை நினைச்சு குழப்பமா தான் இருந்துச்சு... ஆனா அது ஸ்ரேயா சொன்ன காரணத்துக்காக இல்லை... இது வேற..." என்றவள்... அவனை காதலித்ததைப் பற்றியும், அது நிறைவேறாது என்று தெரிந்து, அதை மறக்க கஷ்டப்பட்டதை பற்றியும், திருமண நேரத்தில் அவளுக்கு இருந்த குழப்பம் பற்றியும் கூறினாள்.

அதையெல்லாம் கேட்டவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை... "ஸாரி ராகவி... உன்னோட காதலை நான் புரிஞ்சிக்கவே இல்லை... நான் ஸ்ரேயாவை காதலிப்பது தெரிஞ்சதும் உனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்... நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்ல.."

"நீங்க என்ன தெரிஞ்சா என்னை கஷ்டப்படுத்தினீங்க... விடுங்க அஜய்...  இப்போ நான் ரொம்ப தெளிவா இருக்கேன்.. உங்களுக்கும் ஸ்ரேயாவை மறக்க அவகாசம் வேணும்.. அப்புறம் நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு நல்லா வாழுவோம்... எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு..."

"ஸ்ரேயாக்கும் எனக்கும் இருந்தது ஆத்மார்த்தமான காதல்ன்னு சொல்ல முடியாது ராகவி... ஏதோ ஒரு ஈர்ப்புல உண்டானது தான் எங்க காதல்...  ஆனா அதுல நான் உண்மையா இருக்க தான் நினைச்சேன்... ஆனா அவ அதைக் கூட நினைக்கல... அப்பவே ஸ்ரேயா என்னோட மனசை விட்டு தூரமா போய்ட்டா...

நான் உன்னோட சேர்ந்து வாழறதுல எனக்கு எந்த தயக்கமும் இல்ல... இன்னைக்கே நம்ம வாழ்க்கையை முழுமையா வாழ ஆரம்பிக்கலாம்... என்ன சொல்ற...?"

"உங்களுக்கே பிரச்சனை இல்லைன்னும் போது நான் என்ன சொல்லப் போறேன் அஜய்.. எனக்கும் சம்மதம்.."

"அது.. அது.. நான் எதுக்கு கேக்கறேன்னா.. என்னோட முகம்.. அது இந்த காயம்.." இவர்களின் தாம்பத்ய வாழ்க்கைக்கு இவனின் தீக்காயப்பட்ட முகம் தடையாக இருக்குமோ... அதை அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்ற தயக்கம் அவனுக்கு இருந்தது... ஸ்ரேயாவும் இந்த காரணத்தை சொன்னாளே... அதான் இவளுக்கும் அதனால் சங்கடம் இருக்குமோ என்று கேட்க நினைத்தான்...

அவனின் தயக்கம் புரிந்தவளோ... திடிரென்று அவனின் காயம்பட்ட கன்னத்தில் இதழ் பதித்திருந்தாள்... அடுத்த நொடி அவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள்...

"உன்னை மனைவியா அடைய நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும் ராகவி..." என்றான்... அவர்களின் இல்லற வாழ்க்கை இனிதே ஆரம்பித்தது.

றுநாள் மலர்விழி அஜயிடம் ராகவியை கோவிலுக்கு அழைத்துச் செல்லும்படி கூறினாள்... ஆனால் அவனுக்கோ அதற்கு தயக்கமாக இருந்தது...

இவன் முகத்தில் இருக்கும் இந்த வடுவை அவன் எப்போதும் குறையாக நினைத்ததில்லை... ஆனால் ஸ்ரேயா சொன்னது போல் ராகவியோடு வெளியில் போகும்போது, மற்றவர்கள் பார்க்கும் பார்வையால்... அவளுக்கு சங்கடமாகி விடக் கூடாது என்று நினைத்தான்...

ஆனால் ராகவி அதையெல்லாம் யோசித்தது போல் தெரியவில்லை... அவனை தொல்லை செய்து வெளியில் அழைத்துச் சென்றாள்...

முதலில் இருவரும் கோவிலுக்குச் சென்றார்கள்... பின் ஒரு பெரிய மாலில் உள்ள திரையரங்கில் படம் பார்த்தார்கள்.. பின் சிறிது நேரம் ஷாப்பிங் சென்றுவிட்டு உணவருந்த சென்றார்கள்... அங்கு செல்ஃப் சர்வீஸ் என்பதால், அவளுக்கு என்ன தேவை என்பதை கேட்டு வாங்கி வர அஜய் சென்றான்... இவளோ சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்... அப்போது தான் ஸ்ரேயாவையும் மற்ற தோழிகளையும் அங்கு பார்த்தாள்... அவர்களும் இவளை பார்த்துவிட்டு அருகே வந்தனர்.

அஜயின் புறத் தோற்றத்தை மட்டும் வைத்து, ஸ்ரேயா எப்போது இந்த திருமணத்தை நிறுத்தினாளோ... அதற்கு மற்ற தோழிகளும் உடந்தை என்று தெரிந்ததும்... அப்போதே அவர்களிடம் இருந்து ஒதுங்கிவிட்டாள்... இவளின் திருமணத்தைப் பற்றிக் கூட அவர்களிடம் சொல்லவில்லை... மலர்விழி தான் அஜயின் திருமணம் ராகவியோடு நடக்கவிருப்பதை அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்து சொல்லியிருந்தார்...

ராகவி திருமணம் நடக்கப் போவது தெரிந்தும், யாராவது ஏதாவது சொல்லிவிடுவார்கள் என்று பயந்து யாரும் அந்த திருமணத்திற்கு செல்லவில்லை... இப்போதும் அவளை வாழ்த்த அவர்கள் இவள் அருகில் வரவில்லை...

பொதுவாக நான் சொல்வதை தான் எல்லோரும் கேட்க வேண்டும் என்று சிலர் நினைப்பர்... அதற்கு ஆமாம் போடுகின்ற கூட்டத்தை தன் அருகே வைத்திருப்பர்... இந்த தோழிகள் கூட்டத்தில் எல்லோருமே அப்படி குணமுடையவர் தான்... ஆனால் இவர்கள் சொல்வது சரியாக இல்லையென்றால் அதை ராகவி ஏற்றுக் கொள்ள மாட்டாள்... அதனாலேயே அவளிடம் இவர்களுக்கு ஒரு காழ்ப்புணர்ச்சி இருந்தது... அதை வெளிக்காட்டும் சந்தர்ப்பம் இதுவரைக்கும் அவர்களுக்கு அமைந்ததில்லை... இப்போது அதனாலேயே அவளை சீண்டிப் பார்க்க நினைத்து அவள் அருகில் வந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.