(Reading time: 20 - 39 minutes)

துக்கு என்ன பண்றதும்மா, அந்தப் பொண்ணு ஜாதகம்தான் இவனுதோட சேரலையே. அவனுக்கும் வயசாகிட்டே போகுதேன்னுதான் இவங்க சம்மந்தம் பிடிச்சேன். இது வரைக்கும் அவங்களும் ஒண்ணும் பிரச்சனை பண்ணாம நாம கேக்கறதை செய்யறாங்களே”

“நீங்க ஒண்ணும் பெரிசா கேக்கலை, அதனால அவங்களும் பிரச்சனை பண்ணலை. அவங்க என்ன சீர் செய்யறாங்களோ செய்யுங்கன்னு விட்டுட்டீங்க, அதுதான்”

“அவங்களே நல்லாத்தானே செய்யறேன்னு சொன்னாங்க. நூறு பவுன் போட்டு, இருபது கிலோ வெள்ளி கொடுக்கறேன்னு சொல்லிட்டாங்க. கல்யாண சத்திரமும் நல்ல சென்டர் இடத்துல பார்த்திருக்காங்க. அதுதான் நானும் வேற ஒண்ணும் கேக்கலை”

“இதெல்லாம் அதிகமாக்கா. நம்ம புள்ள டாக்டர். இந்த மாதிரி ரெண்டு மடங்கு கொடுத்துக் கூட அவனை என் நாத்தனார் வீட்டுல கொத்திட்டு போய் இருப்பாங்க. சரி விடுங்க. நிச்சயம் முடிஞ்சாச்சு, இனி அதைப் பத்தி பேசிப் பிரயோஜனம் இல்லை. இருந்தாலும் நாம நம்ம கெத்தைக் காட்ட ஏதானும் கேக்கணும். அதே மாதிரி நம்ம ஆதவனை அவங்க கூட நேரடியாப் பேச சொல்லாதீங்க. எதா இருந்தாலும், உங்க கிட்ட சொல்ல சொல்லுங்க. நீங்களே மாமா இல்லாம தனி மரமா இருக்கீங்க. இதுல இப்படி பேசிப் பேசி இருக்கற ஒரு பையனையும் உங்க கிட்ட இருந்து பிரிச்சுடப் போறாங்க, பார்த்துக்கோங்க”, என்று தன்னால் முடிந்த காரியமாக ஏற்றி விட, ஆதவனின் அன்னைக்கு அவன் அன்றே அவளை விட்டுவிட்டு மாமனார் வீட்டோடு போய்விட்டதாகத் தோன்ற, தன் தங்கையைப் பிறகு அழைத்துப் பேசுவதாகக் கூறிவிட்டு கீதாவிற்கு அழைத்தாள்.

ஏற்கனவே அவர் ஒரு முறை அழைத்தபோது அவரின் பையன் புராணம் பாடி, அவள் அவர்கள் வீட்டிற்கு வந்த பின் எவ்வாறு நடக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வகுப்பு எடுத்து இருந்ததால், இந்த முறை எதைப் பற்றி பேசி ரம்பம் போடப் போகிறாரோ என்ற பயத்துடனேயே தொலைபேசியை எடுத்தாள் கீதா.

“ஹலோ அத்தை, எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லா இருக்கேன். ஆனா உனக்கு என்னைப் பத்தி எல்லாம் கூட நினைப்பு இருக்கா என்ன?”, என்று நக்கலாக கேட்க, இவர் இப்படி நக்கலடிப்பதற்கு போன் பண்ணாமலேயே இருந்து இருக்கலாம், என்று கீதா மனதிற்குள் நினைத்தாள்.

“சரி அதை விடு. நீ எப்போ வரைக்கும் வேலைக்குப் போகப்போற. கல்யாணத்துக்கு அப்பறம் இந்த வேலைக்குப் போகற ஐடியா எல்லாம் விட்டுடு. வீட்டோட இருந்து என் மகனை நல்லபடியா கவனிச்சுக்கோ போதும்”

“இந்தக் கம்பெனில அடுத்த வாரம் வரைக்கும் போகப் போறேன் அத்தை. கல்யாணத்துக்கு அப்பறம் வேலைக்கு போகலாம் அப்படின்னு ஆதவன் சொன்னாரே அத்தை.......”

“நான் ஒண்ணு சொன்னேன்னா, அதை உடனே கேக்கப் பழகு கீதா, ஆதவன் எப்போ சொன்னான் உன்கிட்ட”

“அது பொண்ணு பார்த்த அன்னிக்கு.....”

“அது நடந்து கிட்டத்தட்ட 6 மாசம் ஆச்சு. நான் அவன்கிட்ட உன்னை வேலைக்கு அனுப்பக்கூடாதுன்னு சொல்லிட்டேன். அவன் என் பேச்சைத் தட்ட மாட்டான், புரியுதா. அதே மாதிரி கல்யாணம் முடிஞ்சப்பறம் உங்க வீட்டோட அடிக்கடி தொடர்பு வச்சுக்கறத நிறுத்து. சும்மா, சும்மா அம்மாக்கு போன் பண்ணிப் பேசறது, இல்லை சென்னைக்கு அடிக்கடி கிளம்பி வர்றது இப்படி பண்றதெல்லாம் எனக்குப் பிடிக்காது. அதனால புரிஞ்சு நடந்துக்கப் பாரு”,என்று கூற, இது என்ன நாம கல்யாணம் பண்ணி, கணவன் வீட்டுக்குப் போகப் போறோமா, இல்லை கான்வென்ட்க்குப் போகப் போறோமா என்ற மிகப் பெரிய சந்தேகம் வந்தது கீதாவிற்கு. இப்படியே சென்றால் தனக்கும் தன் தாய் வீட்டிற்கும் தொடர்பே இல்லாமல் போய் விடுமோ, இத்தனை நாள் ஆதவன் பேசியதையும், அவனின் தாய் பேசியதையும் தன் பெற்றோரிடம் சொல்லாதது தவறோ என்று யோசித்தாள் கீதா.

அவள் இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவனின் தாய் விட்ட இடத்திலிருந்து மறுபடி துவங்கினார். “என்ன நான் சொன்னது எல்லாம் நல்லாப் புரிஞ்சுகிட்டியா. உனக்கு நாங்க வாங்க வேண்டிய சேலை எல்லாம் நானேப் போய் கடைல வாங்கிட்டேன். ஜாக்கெட் கட் பண்ணி கொடுத்துட்டாங்க. உங்கப்பா இங்க வரும்போது கொடுத்து விடறேன். அதை மட்டும் தைச்சு வாங்கி வச்சுடு. அதே மாதிரி ஜாக்கெட்ல இந்த மணி வைக்கறது, டிசைன் பண்றது இதெல்லாம் எனக்குப் பிடிக்காது. அதனால சாதாரணமா தைக்க சொல்லு போதும்”, என்று கூற, இவர்களுடன் தன் வாழ்கை எப்படி இருக்கப் போகிறது என்ற மலைப்பு வந்தது கீதாவிற்கு.

“சரி நான் இதுவரை சொன்னதெல்லாம் புரிஞ்சு நடந்துக்கோ, இப்போ உங்கப்பா வீட்டுல இருக்காரா? இருந்தா அவர்கிட்ட குடு”, என்று சொல்ல, கீதா காதை தேய்த்துக் கொண்டே தன் தந்தையிடம் தொலைப்பேசியைக் கொடுத்தாள்.

தொலைப்பேசியில் பேச ஆரம்பித்ததிலிருந்தே தன் மகளின் முக பாவனைகளையே பார்த்திருந்த கீதாவின் தந்தை ஏதோ சரி இல்லை, என்று யோசித்தபடியே அவளிடமிருந்து தொலைப்பேசியை வாங்கினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.