(Reading time: 20 - 39 minutes)

ணக்கம் சம்மந்தி அம்மா, எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லா இருக்கேன். நீங்க ஏதோ ஆதவனுக்கு போன் பண்ணி இருந்தீங்களாம்”

“ஆமா சம்மந்தி, அவருக்கு கல்யாணத்துக்கு டிரஸ் எடுக்கணும் இல்லை அதுதான்”

“அது எல்லாம் நீங்க வாங்க வேண்டாம். ஆதவனே அவனுக்குப் பிடிச்சா மாதிரி வாங்கிப்பான். பில் மட்டும் அனுப்ப சொல்றேன். பணத்தை கொடுத்துடுங்க, சரியா. நான் இப்போ எதுக்காகப் போன் பண்ணினேன்னா, கல்யாணத்துக்கு எங்க சைடுலேர்ந்து ஒரு நூறு பேர் வருவாங்க. அவங்களுக்கு சத்திரத்துல ரூம் எல்லாம் வசதியா இருக்கு இல்லை... இல்லைன்னா நல்ல ஹோட்டலா பார்த்து ரூம் போட்டுடுங்க”, என்று படு அதிகாரமாக சொல்ல, கீதாவின் தந்தைக்கு கோவம் வர ஆரம்பித்தது.

“அப்பறம், ரிசெப்ஷன்க்கு யாரு கச்சேரி வைக்கப் போறீங்க? கதிரி, இல்லை நித்யஸ்ரீ கேட்டுப் பாருங்க, இல்லைன்னா லக்ஷ்மன்சுருதி லைட் மியூசிக் வச்சாக்கூட சரிதான்”, என்று சொல்ல, இதற்கு மேல் இவர்கள் பேசுவதை கேட்க முடியாது என்ற முடிவுக்கு வந்த கீதாவின் தந்தை, தானும் தன் மனைவியும் நேரில் வந்து அவருடன் பேசுவதாகக் கூறி போனை வைத்தார்.

“என்னங்க என்ன ஆச்சு? ஏன் இப்படி பட்டுன்னு போனை வச்சுட்டீங்க?”

“ஏண்டா இந்த இடத்துல சம்மந்தம் பண்ணினோம்ன்னு இருக்கு கமலா. எப்பவுமே ஒரே அதிகாரமா பேசறாங்க”

“என்னங்க அவங்க பேசறது என்ன புதுசா. எப்பவுமே அப்படித்தானே பேசுவாங்க. நாம பொண்ணைப் பெத்தவங்க. கொஞ்சம் பொறுத்துதான் போகணும். பத்திரிகை அடிச்சு எல்லாருக்கும் கொடுத்தாச்சு. இனி கல்யாணம் முடியறவரை கொஞ்சம் பொறுமையாப் போங்க, கோவப்படாதீங்க”

“புரியாம பேசாத கமலா, நான் அப்படி யோசிக்காம பேசற ஆளா, அதுவும் நம்ம பொண்ணுக்கு கல்யாணம், அவ விஷயத்துல போய் யோசிக்காம பேசுவேனா. முதல்லேர்ந்து நாம ஒண்ணு சொன்னா அதுக்கு எதிர் வாதமா அந்தம்மா ஏதானும் பேசாம இருந்தது இல்லை. அதெல்லாத்தையும் பொறுத்துப் போகலையா. ஆனா இப்போ அந்தம்மா பேசறது ரொம்ப அநியாயம்”

“ஏங்க என்ன சொன்னாங்க. சீர் ஏதானும் இன்னும் செய்யணும்ன்னு எதிர்பார்க்கறாங்களா. நம்மளால முடியும்ன்னா செஞ்சுடலாமேங்க”

“அவங்க சொந்தக்காரங்க ஒரு நூறு பேர் கிட்ட வருவாங்க போல இருக்கு. சத்திரத்துல இடம் போதலைன்னா பக்கத்துல இருக்கற ஏதானும் ஹோட்டல்ல போட சொல்றாங்க. அதுவும் ஏதானும் பெரிய ஹோட்டல்ல. அப்பறம் ரிசெப்ஷன்க்கு பெரிய பாடகரோட கச்சேரி ஏற்பாடு செய்யணுமாம். யோசிச்சு யோசிச்சு புதுசு புதுசா டிமாண்ட் பண்றாங்க”

“இது என்னங்க அநியாயமா இருக்கு. நாம பார்த்திருக்கற சத்திரமே பெரிசுதானே. இதை புக் பண்றதுக்கு முன்னாடி அவங்க கிட்ட எத்தனை முறை போன் பண்ணி கேட்டோம். அவங்க சரின்னு சொன்னதுக்கு அப்பறம்தானே புக் பண்ணினோம். சரி அதை விடுங்க. ஒரு ரெண்டு நாள் கழிச்சு சம்மந்தி அம்மாக்கு போனைப் பண்ணி சத்திரத்துலையே தங்க இடம் வசதியா இருக்குன்னு சொல்லிட்டு, அவங்க சொன்ன பாட்டுக்காரங்க ரிசெப்ஷன் அன்னைக்கு ப்ரீயா இல்லைன்னு சொல்லிடுங்க”

“ஏம்மா இப்படியானும் என் கல்யாணம் நடக்கணுமா. இப்போவே இவ்ளோ டிமாண்ட் செய்யறவங்க நாளைக்கு கல்யாணம் ஆன பின்னாலையும் எதுவும் கேக்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்மா”

“நீ சும்மா இரு கீதா... உனக்கு ஒண்ணும் தெரியாது. இந்த மாதிரி கெத்து காமிக்கறதெல்லாம் மாப்பிள்ளை வீட்டுல சகஜம்டி. கல்யாணம் ஆனா அதெல்லாம் மாறிப் போய்டும். அவங்க வீட்டுக்குப் போன பிறகு நீ அவங்க மேல காட்டற அன்பு அவங்களை மாத்திடும். இதெல்லாம் மனசுல வச்சுட்டு குழப்பிட்டு இருக்காத. கல்யாணப் பொண்ணா லட்சணமா சந்தோஷமா இரு”,என்று கீதாவை சமாதானப் படுத்திவிட்டு தன் கணவனிடம் பிறகு பேசலாம் என்று கண்ணைக் காட்டிவிட்டு அகன்றாள் கமலா.

ந்த மாதிரி சில பல சருக்கல்களுடன் ஆதவன், கீதா கல்யாண நாள் வந்தது. முந்தைய தினம் நிச்சயம் முடிந்திருக்க இதோ இன்னும் சிறிது நேரத்தில் ஆதவன் கீதா கழுத்தில் தாலிக் கட்டப் போகிறான். திருமாங்கல்யத்தை அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி வந்து ஐயர் கையில் கொடுக்க, அவர் அதை ஆதவன் கையில் கொடுத்தார். அந்த நேரத்தில் கீதா மணமேடையில் எழுந்து நின்றாள்.

“என்ன கீதா, எதுக்கு தாலி கட்டும்போது எழுந்துக்கற... உக்காருமா”, பதைபதைப்புடன் கமலா கீதாவை அமர வைக்க முயல, கீதா முடியாது என்று தலை ஆட்டி தன் கழுத்திலிருந்த மாலையைக் கழட்டினாள்.

“அப்பா, உங்க கிட்டயும் அம்மா கிட்டயும் ஒண்ணு சொல்லணும். இந்தக் கல்யாணத்தை நிறுத்திடலாம்ப்பா”

“என்னடி இது, உனக்கு விளையாட்டா போச்சா. அதுவும் இன்னும் ரெண்டு நிமிஷத்துல தாலி கட்டற சமயத்துல. அச்சான்யமா என்ன பேச்சு இது. உக்காரு கீதா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.