(Reading time: 17 - 34 minutes)

தர்ஷ் வீட்டிலிருந்து அனைவரும் கிளம்பி அர்ச்சனா வீட்டிற்கு செல்ல, அங்கிருந்த அனைவர் முகமும் இறுகி இருந்தது... ஒரு தலையசைப்புடன் அனைவரையும் வரவேற்ற அர்ச்சனாவின் அப்பா அங்கிருந்த சோபாவில் அவர்களை அமரும்படி  சொன்னார்.... அவளின் அண்ணன்கள் ஒரு புறம் ஆதர்ஷை முறைத்தபடி நிற்க, அர்ச்சனாவின் அம்மா கலங்கிய கண்களுடன் நின்றிருந்தார்.

“என்னது இது சம்மந்தி.... இப்படி உங்கப் பொண்ணு சொல்லாமக் கொள்ளாம வீட்டை விட்டுக் கிளம்பி வந்திருக்கா... நேத்திக்குத்தான் கல்யாணம் ஆகி இருக்கு... இன்னைக்கே இப்படி நடந்துக்கறது நல்லாவா இருக்கு சொல்லுங்க....”, ஆதர்ஷின் தந்தை ஆரம்பிக்க, அவரை முறைத்தார் அர்ச்சனாவின் தந்தை.

“கல்யாணத்துக்கு முன்னாடி உங்கப் பையன் யாரையாவது காதலிச்சானா...”

“என்ன சம்மந்தி இது... மாப்பிள்ளைன்னு மரியாதையே இல்லாமப் பேசறீங்க....”

“மரியாதையைப் பத்தி நீங்க பேசாதீங்க... கேட்டத்துக்கு பதில் சொல்லுங்க... மொதல்ல இந்த சம்மந்தின்னு சொல்றத நிறுத்துங்க...”

“என்ன இப்படி பேசறீங்க... உங்கக்கிட்ட யாரோ தவறான தகவல் கொடுத்திருக்காங்க...”

“யாரோ இல்லை... தகவல் கொடுத்தது உங்க பையன்தான்...”

“அது ஏதோ வயசுக் கோளாறுல பண்ணினது சம்மந்தி... நாங்க சொன்னோம்ன்னு அந்தப் பொண்ணை விட்டுட்டான்....”

“அப்படியா ஆனா உங்கப் பையன் அர்ச்சனாக்கிட்ட வேற ஏதோ சொன்னான் போல இருக்கே...”

“இங்க பாருங்க சம்மந்தி.... அவன் ஏதோ அர்ச்சனாக்கிட்ட தமாஷ் பண்ணி இருப்பான்... அதை அர்ச்சனா தப்பா புரிஞ்சுட்டு இருக்கும்....”

“அப்படியா, நான் அடுத்த வாரத்துல இருந்து இன்னொரு பொண்ணுக்கூட குடித்தனம் நடத்தப்போறேன்னு சொல்றது தமாஷ் பண்ணி விளையாடறதா....”, அர்ச்சனாவின் தந்தை கேட்க, ஆதர்ஷ் இப்படி எல்லா விஷயத்தையும் போட்டுக் கொடுத்து விட்டாளே என்று அர்ச்சனா அந்த அறையில் இல்லாததால் அவளை முறைக்க முடியாமல் சுவரை முறைத்தான்.

“டேய் ஆதர்ஷ் என்னடா இதெல்லாம்... என்னப் பண்ணி வச்சிருக்க....”

“அப்பா நான் அப்போவே எனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலைன்னு சொன்னேன் இல்லை... நீங்கதான் வற்புறுத்தினீங்க...”,ஆதர்ஷ் சொல்ல அர்ச்சனாவின் அண்ணன்களுக்கு கோவம் வந்து அவனை அடி பின்னி எடுத்து விட்டார்கள்.

“ஏண்டா உனக்கு விளையாட என் தங்கையோட வாழ்க்கைதான் கிடைச்சுதா...”,என்று மேலும் மேலும் அடிக்க, இரு பக்க பெற்றோரும் வந்து அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள்....

“சம்மந்தி என் பையன் சார்பா நான் உங்க எல்லார்க்கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கறேன்.... அவன் வாழ்க்கையை இன்னும் சரியாப் புரிஞ்சுக்கலை... நாங்க அவனுக்கு எடுத்துப் புரிய வைக்கறோம்... நீங்க அர்ச்சனாவை எங்களோட அனுப்பி வைங்க....”,ஆதர்ஷின் தந்தை பேசிக்கொண்டிருக்கும்போதே உள்ளிருந்து வெளியில் வந்தாள் அர்ச்சனா.  வந்தவளை முறைத்தான் ஆதர்ஷ்....

“நான் எப்போ உங்கப் பையன் கூட வாழணும் என்னை சேர்த்து வைங்கன்னு சொன்னேன்.... இந்த சினிமால எல்லாம் வருமே, ஹீரோ யாரையானும் காதலிச்சிருப்பான்... ஹீரோயின் போராடி இல்லாத வேலை எல்லாம் பண்ணி அவப் பக்கம் அவனைத் திருப்புவாளே, என்னை அதைப் பண்ண சொல்றீங்களா.... அதுக்கு வேற ஆளைப் பாருங்க....”

“என்னம்மா இது கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசற....”

“மரியாதைங்கறது நாம நடந்துக்கற முறைலதான் நமக்கு கிடைக்கும்.... என் வாழ்க்கையோட விளையாட உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது.... எங்க வீட்டுல இருந்து வந்து என் பொண்ணுக்கு வாழ்க்கை கொடுங்கன்னு கேட்டாங்களா.... உங்க வீட்டுல இருந்துதான் மொதல்ல என்னைப் பெண் கேட்டு வந்தீங்க.... அதன் பிறகும் நீங்க சொல்ற டிமாண்ட்ஸ் எல்லாத்துக்கும் நாங்க ஒத்துவருவோம்ன்னு தெரிஞ்சப்பறம்தான் கல்யாணத்துக்கு சரி சொன்னீங்க... சொல்லுங்க உங்கப் பையன் ஏற்கனவே ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டு இருக்கார்ன்னு தெரியும்... அவளை விட முடியாதுன்னும் உங்கக்கிட்ட சொல்லி இருக்கார்.... ஒண்ணு அந்தப் பெண்ணையே அவருக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கணும்... இல்லைனா அவர் மனசு மாறும் வரை வெயிட் செய்து இருக்கணும்... ரெண்டும் இல்லாம அவசர அவசரமா கல்யாணத்தை நடத்தி என் வாழ்க்கையை அழிச்சிட்டீங்க....”

“ஏம்மா இந்தக் காலத்துல காதலிக்கறது எல்லாம் ரொம்ப சர்வ சகஜமா போச்சும்மா... அதைப் போய் பெரிசு படுத்துவியா...”

“இதே வார்த்தையை நான் சொன்னா நீங்க ஒத்துக்குவீங்களா....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.