ஆண் ஒன்று, பெண் ஒன்றுமாக அந்த குழந்தைகள் நன்றாக ஆரோக்கியமாக இருந்தன! அதுவே கர்ப்பத்தில் நல்ல ஊட்டம் பெற்றிருக்கிறாள் என்பதை உணர்த்த, இப்படி பலதும்,
“அவள் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்! ” என்பதை ஊர்ஜிதப் படுத்த,
என் வேண்டுதலின் பலனை பார்த்து விட்டேன் என்று மனது நிறைந்து போனது!
அவளை என்னோடே வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இப்பொழுது மறைந்தே போனது! எந்த வித ஏமாற்றமோ, பொறாமையோ தோன்றவே இல்லை!
இவள் மீது இத்தனை வருடம் எனக்கு உண்டானது நட்பா? காதலா??
என் அன்பின் தன்மையை நான் கேள்வி கேட்கும் பொழுது, அறை வாசலில் செவிலியுடன் யாரோ பேசுவது கேட்டது. அது முட்டையின் கணவன் என்பதை நான் அறிந்து ஆர்வமாக வெளியே போய் பார்த்து அதிர்ந்தே போனேன் அங்கே ஒரு குள்ளன் நின்று கொண்டிருந்தான்!
‘இவனா???? இவனைப் போயா???’ மனம் பதறிப் போனது...
அவனோ மனைவிக்கு விபத்து என்றதும் அவன் தவிக்கிற தவிப்பை தாமதமாக தான் கண்டு கொண்டேன். தன் வாரிசுகள் பிறந்த சந்தோஷத்தை விட, தன் மனைவி நலமாய் இருக்கிறாளா? பெரிய அடி பட்டு விட்டதா இதை தான் விசாரித்துக் கொண்டிருந்தான்!!! என்னைப் போலவே அவள் மீது அதீத அக்கறை வைத்துள்ளான்!
‘குறை உருவத்தில் தான்! குணத்தில் அல்ல!’ புரிந்தது எனக்கு!
என்னைக் கண்டதும் செவிலியிடம் கேட்டுக் கொண்டிருந்தவன் என்னிடம் ஓடி வந்து விசாரித்தான். அவனை சமாதனப்படுத்த போதும் போதும் என்றாகி விட்டது!
என்னை விட மோசமான பாசக்காரனா இருக்கிறானே என்று எண்ணிக் கொண்டே, அவனுக்கு குழந்தைகளை காட்டினேன். தன் குறை அவர்களுக்கு இல்லை என்பதை பலமுறை கேட்ட பின் அவன் முகத்தில் வந்த பெருமிதம்!
முட்டைக்கு தான் மோசமான அப்பன்! அவள் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பன் கிடைத்து விட்டான்!
அவனைப் பற்றி விசாரித்து மலைத்து போனேன்! ஆடிட்டராம்!!!!
‘வாழ்க்கை நல்ல விதமாக அமைச்சுட்டே முட்டை!’, அனிச்சையாக என் பார்வை அவளிடம் சென்ற பொழுது, அவளுக்கும் முழிப்பு வந்து என்னைப் பார்த்தாள்!
அவள் பார்வை என்னை இழுத்து அவளருகே அமர வைக்க..
அவளிடம் வார்த்தைகளே இல்லை!
என்னையே பார்த்தவள் கண்களில் மகிழ்ச்சி, பாசம், நேசம், நன்றி என அத்தனையும் கலவையாய்!
என் உள்ளங்கையை அழுத்தி,
“நீ எனக்கு சாமி டா!!!”, என்றாள் உணர்ந்து!
பிரசவித்த பொழுது பாதி மயக்கத்தில் இருந்திருந்தாலும், நான் பேசியது எல்லாம் அவளுக்கு நினைவு இருக்கும் என்பதை அறிந்திருந்ததால், உணர்ச்சி வசப் பட்டு இருந்தவளை இலகுவாக்க,
“என்ன முட்டை! பெரிய குடும்ப இஸ்திரியா இருக்கே! என்ன லவ் மேரேஜ்ஜா?”,
என்றேன் அவள் கணவனைப் பார்த்து! அதுவரை என்னை ஏதோ மருத்துவன் என்றே என்னை பார்த்திருந்தவன், நாங்கள் உரிமையோடு பேசிக் கொள்வதை பார்த்ததும் ஏதோ புரிந்தும் புரியாமலும் விழித்தான்.
என்னை அவனுக்கு அறிமுகப் படுத்தியதும் அவன் முகம் பெரிதாக மலர்ந்தது! ரொம்ப நல்லவிதமாக சொல்லி வைத்திருப்பாள் போலவே எண்ணிக் கொண்டேன்! அவள் அவனை பற்றியும் என்னிடம் சொன்னாள்.
“உண்மையிலே அவரு தங்கம்! பேசிப் பார்த்தா உனக்கே பிடிக்கும்”
என்றாள்!
“உனக்கு பிடித்தால், எனக்கும் தானே! நீ வேற நான் வேறயா!!!”
நான் சொன்னதும் அவளுக்கு அப்படி ஒரு பூரிப்பு! பின் அவள்,
“ரொம்ப வருஷம் கழிச்சு நம்ம ஊருக்கு போனேன். அப்போ தான் ஹச். எம் தவறிட்டாங்க, நீங்க எல்லாம் ஊரை காலி செய்துட்டு போயிட்டீங்கன்னு கேள்விப் பட்டேன்! மனசே விழுந்துடுச்சு!”
“உன் மனசுலே அவங்க இடத்தை யாராலும் நிரப்ப முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்! தாயில்லாம நீ எந்த கஷ்டமும் படக் கூடாதுன்னு உனக்காக வேண்டாத நாளே இல்லை!”, என்று கலங்கியவள்,
“கொஞ்ச நாள் வாழ்ந்தாலும், இப்படி தான் வாழணும்னு கத்து கொடுத்துட்டு போயிட்டாங்க ஹச். எம்.!!! இன்னைக்கு நான் நல்லா இருக்கேன்னா அவங்க தான் காரணம்”
என்று நெகிழ்ந்து, தனக்கு நடந்ததை சொன்னாள்.
அவள் பூப்பெய்திய அவளை வீட்டிற்கு விடப் போன என் அம்மாவிற்கு அவள் அப்பாவின் எண்ணம் தெரிந்து அவளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுகிறேன் என்று உறுதி அளித்து விட்டு, அப்படியே காவல்துறை உயரதிகாரியாக இருந்த தன் பழைய மாணவன்கிட்ட பேசிட்டு அவர் தொடர்பு எண்ணையும் கொடுத்து இருக்காங்க!