(Reading time: 36 - 72 minutes)

மீண்டும் மனம் அழத் துடிக்கிறது! வாழ்க்கையில் இழப்புகளை சந்தித்த பின் எப்படி அழாமல் இருக்க முடியும்? ஒன்றை இழந்தேன்! மீட்கவே முடியாது!!! மற்றொன்றை தொலைத்தேன்! மீட்டு விடத் தவிக்கிறேன்!!!

அம்மாவிற்கு உயிரை கொல்லும் வியாதி! மருத்துவனாக புரிந்து கொள்ள முடிகிறது இப்பொழுது. ஆனால், என் முட்டையை உயிரோடு அனு தினமும் கொல்லும் தொழிலுக்கு தள்ளப் பட்டாளே! இது என்ன வியாதியோ? மருத்துவனாக ஏன் ஒரு மனிதனாகக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை! யாருக்கு என்ன பாவம் செய்தாள் அவள்??

விமானம் தன் பயணத்தை துவக்குவதாக அறிவிப்பு வரவும் என் மனம் தன் குமுறலை நிறுத்தி வைத்தது. என் சீட் பெல்ட்டை மாட்டி விட்டு நிமிர்ந்த பொழுது அருகில் இருந்தவர்  என்னையே உற்று உற்று பார்ப்பது போல தோன்ற....

அவர் பக்கம் திரும்பினேன். நடுத்தர வயது மனிதர்! அவரை நான் பார்த்ததும், அதற்காகவே காத்திருந்தவர் போல,

“ஆர் யு டாக்டர் பரத் திலகம்?”, வேகமாக அவர் கேட்ட விதத்தில் வெகு நேரம் கேட்க  நினைத்திருப்பார் போல என்பது புரிந்தது! புன்னகையுடன் மேலும் கீழுமாய் தலையசைத்தேன்!

திலகம் என் அம்மாவின் பெயர்! அம்மா காலமான பின் அப்பாவின் பெயரை தங்கள் பெயரோடு சுமக்க இன்னொரு மனைவியும் மகளும் அவருக்கு வந்து விட, என்னை சுமந்து பெற்ற தாய் பெயரை என் பெயரோடு பொருத்திக் கொண்டேன்!

“CNN மேன் ஆஃப் தி இயர் நீங்க தானே!  இண்டியா டூடேல கூட உங்களை பத்தி ஆர்ட்டிக்கிள் படிச்சேன்! ஒரு தமிழன் இந்த அவார்ட் வாங்குறதுல பெருமையா இருக்கு!”

என்றவர்,

“ஆனா, ஹச். ஐ. வி. பேஷண்ட்ஸ்க்கு ரிஸ்க்கி டெலிவரிலாம்  பார்க்கிறீங்க! உயிர் மேல பயமே இல்லையா?”

அவர் கேட்டதும்,

“சேஃப்டி பிரிகாஷன்னும் எடுத்திட்டு தான் செய்வோம்! பயப்பட அவசியம் இல்லை!”, என்றேன். அடுத்து அவர்,

“சோனாகாஞ்சிக்கு சேவை செய்யணும்னே வந்தீங்களா?”

பத்திரிக்கையை படிச்சிட்டு பத்திரிக்கைகாரனை விட அதிகமாக கேள்வி கேட்கிறார்ன்னு தான் தோன்றியது. அவர் ஆர்வம் புரிந்தது. ஆனால், என் மனம் பதில் சொல்ல தயாராக இல்லை! 

“இல்லை! டிபார்ட்மெண்ட் ஆஃப் பப்ளிக் ஹெல்த் போஸ்டிங் அங்கே தான் கொடுத்தாங்க!”

பதில் சொல்லிக் கொண்டே ஹட்போனை மாட்டி இருந்தேன்! அதற்கு மேல் கேள்வி கேட்க முடியாமல் அமைதியானார்.

இந்த கேள்வியை என் முட்டை கேட்டிருந்தா சொல்லியிருப்பேன் - உன்னாலே தான், உனக்காக தான் நான் சோனாகாஞ்ச்கே போனேன் என்று!

அவளைத் தேடி அங்கே போகலை!  வேண்டுதல் வைக்க போனேன். அவளை காப்பாற்ற முடியாத பாவத்தை தொலைத்து விட போனேன்.

எல்லாரும் புண்ணியம் தேடி காசிக்கு போவாங்க! நான்  இந்தியாலே மிகப்பெரிய சிகப்பு விளக்கு பகுதிக்கு போனேன்!

அம்மா எப்போ கண்ணை மூடினாங்களோ அப்பவே கடவுள் நம்பிக்கை  எல்லாம் காணாம போய் விட்டது! ஒவ்வொரு மனுஷனுக்குள்ளே கடவுள் இருக்கார்ங்கிற நம்பிக்கை மட்டும் தான் இப்போ இருக்கு! சிகப்பு விளக்கில் தங்கள் உடலை விற்கிறவர்களுக்கும் அந்த கடவுள் இருக்கத் தான் செய்றார் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு!

ஆமாம், என் கண் முன்னே என் முட்டையை இழுத்துட்டு போனது போல இங்கே உள்ளவங்களும் கட்டாயபடுத்தபட்டோ.. கடத்தபட்டோ.. ஏமாற்றப்பட்டோ.. இந்த தொழிலுக்கு தள்ளப்பட்டு இருப்பாங்க!

பண்பாடு, கலாச்சாரம் பற்றி பேசுறவங்களுக்கு பாலியல் தொழில் செய்றவங்க இழிவாக தான் தெரிவாங்க! என்னைப் பொறுத்தவரை அறிவு செத்த ஆண்களின் காமப் பசிக்காக சிதைக்கபடும் பெண்கள் இவர்கள்!

அவங்களுக்கு என்னாலே ஏதாவது நல்லது செய்தா அந்த நல்லது எல்லாம் என் முட்டைக்கு சேருமே!!! இந்த எண்ணத்தில் தான் இங்கே வந்தேன்!

அம்மா மரண படுக்கையில் கிடந்தப்போ சொல்வாங்க,

“இந்த டாக்டருங்க இந்த உடம்பை வெறும் எலும்பும், சதையுமா தான் பார்க்கிறாங்க! அவங்க கடமையை செய்துட்டா போதும்! உயிரைத் தாண்டி மனசுன்னு ஒன்னு இருக்குன்னு யாருக்கு தெரியுது!”

அம்மா சொன்னது மனசுலே பதிந்து போனதாலோ என்னவோ... ஒரு மகப்பேறு மருத்துவனா என்கிட்ட வர்ற கர்பிணிங்களை தெய்வத்துக்கு சமமா தான் நினைக்கத் தோணும். ஆமாம், தெய்வத்துக்கு குளிப்பாட்டி அலங்கரிக்கும் பூசாரியின் மன நிலை தான் என்னதும் என் தொழிலில்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.