(Reading time: 36 - 72 minutes)

ள்ளி சிறுவர்களாக இருந்த நாங்கள் வளர்ந்து விடலை பருவத்தினராய் எட்டாம் வகுப்பில் அடி எடுத்து வைத்த பொழுது தான் எந்த திருப்பமும் இல்லாமல் போன வாழ்க்கை எங்களை அப்படியே புரட்டி போட்டது!

எட்டு எட்டாது என்பார்களே... அது எங்கள் வாழ்க்கையில் சரியாக தான் இருந்தது.

நான் என் பதின்மூன்றாவது வயதைத் தொட, அதன் நினைவா அப்பா சைக்கிள் வாங்கிக் கொடுத்தாங்க! அந்த சைக்கிள்ல ஒரு தூசு துரும்பு விழாத படி நான் பார்ப்பேனோ இல்லையோ முட்டை அந்த வேலையைப் பார்த்து வைப்பாள்!

“முட்டை என் சைக்கிளை நான் பார்க்க மாட்டேனே!”, நான் அதட்டும் பொழுது,

“நீ வேற நான் வேறயா... போடா புண்ணாக்கு!”, இப்படி தான் அவள் பதில் வரும்! ஆம், எங்கள் நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்திருந்தது!

ஒரு நாள் பள்ளிக் கூடம் முடிந்ததும் அம்மாவை சைக்கிள்ளே கூட்டி வந்தப்போ ஏதோ சாதாரணமா சொன்னது மாதிரி தான் தெரிந்தது.

“கண்ணா.. அம்மாக்கு நெஞ்சுலே கட்டி மாதிரி இருக்கு! ஆஸ்பத்திரிலே விட்டுட்டு போ.. டாக்டர்கிட்ட காட்டிட்டு நானே வந்துடுறேன்”

டாக்டர்கிட்ட காண்பித்து வந்ததும்,

மதுரைக்கு போய் ஒரு டெஸ்ட் எடுக்கணும்ன்னு சொன்னவங்க, அதைக் கூட, அடுத்த நாள் ஸ்கூலுக்கு AEO வர்றார்ன்னு தள்ளிப் போட்டாங்க!

அம்மா அடுத்த நாளே மதுரைக்கு போகாததும் ஒரு நல்லதுக்கு தான் இப்ப பரிபூரணமா நம்புறேன்!

ஏன்னா அந்த நாள் என்னாலையும், முட்டையாலும் மறக்கவே முடியாத நாளாகி போனது அந்த நாள்... அந்த மாலைப் பொழுது!

அன்னைக்கு கடைசி பீரியட் உடற்பயிற்சி வகுப்பு! முட்டைக்கு தலை வலின்னு  வகுப்பிலே இருந்துட்டாள். அன்னைக்கு PET வாத்தியார் க்ரவுண்ட்ல வேலை இருக்குன்னு மணி அடித்த பிறகும் என்னை  விடலை!

ஒரு வழியாக நான் வகுப்புக்கு பையை எடுக்க வந்தால், அப்பவும் முத்துச் செல்வி அவள் இடத்தை விட்டு நகராம அவள் டெஸ்க்கிலே தலை வைத்து படுத்து இருந்தாள்!

“என்ன முட்டை லைப்ரரிக்கு போகலையா? உலக அதிசயமா இருக்கு!”

என் குரலுக்கு செவி மடுக்காமல் படுத்தே கிடக்க... எப்பவும் இப்படி சோர்ந்து படுத்து இருக்க மாட்டாளே.. அவள் தாயைப் பற்றி யாரும் வருந்துற மாதிரி பேசிட்டாங்களா.. இல்லை நிஜமாவே உடம்புக்கு முடியலையா என்னவென்று புரியாமல் அவள் தோளை ஆதரவாகப் பற்றியதுமே, என்னை நோக்கி  நிமிர்ந்தவள்,

“நான் செத்துடுவேனோன்னு பயமா இருக்கு புண்ணாக்கு!”

சொன்னவள் கண்களில் மரண பயம்!!!  

“உளறாதே! அதெல்லாம் ஒன்னும் ஆகாது! எதுவும் ஆகா விடமாட்டேன்”

சொல்லிக் கொண்டே அவளருகே அமரப் போக...

என்னை தடுத்தாள்.

“கிட்ட வராதே... ரத்தமாக இருக்கு!! எனக்கு ஏதோ நோய் இருக்கு! ப்ளட் கேன்ஸரான்னு பயமா இருக்கு! பாவாடை எல்லாமே பாழாகிடுச்சு”

அவள் ரத்தம் என்றதுமே... மரண பயம் எனக்கும் தொற்ற... அடுத்த நொடியே என் அம்மாவை அழைத்து வர பறந்தேன்!

அம்மா வந்து அவளைப் பார்த்ததுமே அவங்களுக்கு எல்லாமே புரிந்து விட்டது.

“கங்கிராட்ஸ்! நீ பெரிய மனுஷியாகிட்டே!”, என்றார் அவளைப் பார்த்து! அதுவரை அவள் முகத்தில் இருந்த மரண பயம் நீங்கி நிம்மதி பிறக்க...

எனக்குமே புரிந்தது ! பெண்கள் பூப்பெய்துவதை கேள்வி பட்டவன் தான்! ஆனால், அதன் பின்னால் இப்படி ஒரு உடல் ரீதியாக இப்படி எல்லாம் நடக்கும் என்று அன்று தான் தெரிந்தது.

என்னை வீட்டிற்கு போகச் சொல்லி விட்டு அம்மாவே அவளை வீட்டில் விட்டு வந்தார். அம்மாவிடம் எல்லாமே பகிர்ந்து இருக்கிறேன்!  இந்த விவரத்தை பற்றிக் கேட்கவா... வேண்டாமா.. எனக்குள் ஒரு தயக்கம்!

கண்ணில் பார்த்து விட்ட ரத்தக்கறை... அவளுக்கு எவ்வளோ வலிக்கும் என்ற கவலையே மேலோங்க, அம்மா வந்ததும்,

“ஏன்ம்மா முட்டைக்கு இப்படி நடந்தது! பெரிய மனுஷியாக இவ்வளோ கஷ்டபடணுமா?”

கேட்டே விட்டேன்!

அம்மா சிரித்தவாறே சொன்னார்.

“ஒரு பொண்ணுக்கு பிறவியிலே இருக்கிற தாய்மைக்கான உறுப்புகள் முழுமை அடைந்து கரு முட்டையை உருவாக்கும் உன்னதமான நிகழ்வு! இதுலே என்னடா கஷ்டம்! இது இயற்கை! இது இல்லைன்னா நீயோ... நானா... ஏன் இந்த மனுஷ இனமே தழைத்து இருக்காது!”

அந்த வார்த்தைகள் எனக்குள் பெரிய பிரம்மிப்பை உண்டு செய்து  புல்லரிக்க வைக்க... அடுத்து அவர் வாயில் பாரதியின் வரிகள்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.