(Reading time: 34 - 67 minutes)

ந்த மாதிரியான வியாக்கியானங்கள் பல அவள் கேட்பதுதான், அவளை பொறுத்தவரை அவளுடைய புகுந்த வீடு மட்டும் தான் அவளுக்கும் அவள் இளமைக்கும்,இன்னும் வருணுக்கும் பாதுகாப்பான இடம். அவள் வீட்டைவிட்டு வெளியே வந்தால், அவளை கொத்திதிங்க பல கழுகுகள் வட்டமிட்டுக்கொண்டிருப்பது அவளுக்கு நன்றாகத்தெரியும். சுபாவின் இந்த நிலைமையை பயன்படுத்தி அவளை நெருங்க முயன்றவர்களுக்கெல்லாம் நெருப்பென மாறி, எதிரே இருப்பவரை துவம்சம் செய்துவிடும் துணிச்சலானவள் தான் அவள். காயப்படும் தருணங்களில் தன் வேதனையை யாருடனும் பகிர்ந்து கொள்ளது, தனக்குள்ளே நத்தைகூடாக சுருங்கிப்போவாள் அவள். அவளுடைய ஓரே நம்பிக்கை வருண் மட்டும் தான். அவளைப் பொறுத்தவரைஅக்ஷய் ஒரு நல்ல மனிதர்,  அக்ஷயின் படிப்பிற்கும் வேலைக்கும் அவளை விட செல்வாக்கான குடும்பங்கள் பல அவனுக்கு பெண் குடுக்க தயாராய் நின்றபோது, கோவிலில் சந்தித்த இவளை தன் தாயுடன் வந்து பெண் கேட்டான் அவன். நகை, வரதட்சணை என எதையும் எதிர்பார்க்காது, கல்யாண செலவைக்கூட அவனே ஏற்றுக்கொண்டான், இவ்வளவிற்கும்சுபா, அக்ஷையோடு ஒரு வார்த்தை பேசியதோ, தன் நிலைமை வருந்தி அவனிடம் சொல்லியதோ இல்லை. அவள் தாயார் வைத்து போன நகைகளில் பாதியை அவளுக்கு போட்டு மீதியை கல்யாண செலவிற்கென அவள் அண்ணன் ஒதுக்கினான். கடமைக்கென்று ஒரு கல்யாணத்தை நடத்தினான். அக்ஷயின் அம்மாவிற்கு இந்த திருமணத்தில் எள் அளவும் விருப்பமில்லை. ஆசையாசையாய் மகனின் திருமணத்தை எதிர்நொக்கி கொண்டிருந்தவளுக்கு அது நிச்சயம் பெரும் ஏமாற்றம் தான்! அதை உணர்ந்துகொண்டதாலோ என்னவோ, அவளுடைய எந்தக் குத்தலான பேச்சுக்கும் சுபா வாயைத்திறக்க மாட்டாள்.  வருண் பிறந்து இரண்டு மாதங்களில் அக்ஷய் விபத்தில் உயிரைவிட்டான். நிற்கதியாகிப்போனாள் அவள், அவன் வேலைப்பார்த்த அலுவலகத்திலேயே அவளுடைய படிப்பிற்கேற்ற வேலைவந்தது. அவளும் அதை ஏற்றுக்கொண்டாள். ஆறு மாத கைகுழந்தையை

மாமியாரிடம்விட்டு,வேலைக்குசெல்ல ஆயத்தமானாள், அவளை யாரும் தடுக்கவில்லை, தடுத்தாலும் அவள் நிச்சயமாக அந்த வேலைக்கு சென்றிருப்பாள். அவளுடைய சம்பாத்தியம் இல்லாதும் அந்த வீடு நடக்கும், அது அவளுக்கு நன்றாக தெரியும். அக்ஷயை அடுத்து ஆகாஷ், நல்ல படிப்பும் கைநிறைய சம்பளமுமாக, இளமையை அனுபவித்துக்கொண்டிருந்தவன். பணிகாரணமாக வெளிநாடு சென்றவன் இரண்டு வருடங்கள் கழித்து வந்தான், தன்னைப்போன்று உயரிய குடும்பத்தில் செல்வாக்கான பெண்ணையும் பார்த்து நல்ல முறையில் அக்ஷைக்கு முன்னரே திருமணம் முடித்து, அக்குதொக்கில்லாது வெளிநாடு போனவன் அண்ணனின் மறைவிற்கு பின் சுபாவை பற்றியோ, வருணைப்பற்றியோ ஏன் ஸ்ரீஜாவை பற்றியோ எள் அளவும் கவலை கொள்ளாதவன். அக்ஷயைவிட ஸ்ரீஜா ஐந்து வயது சிறியவள், அதனாலேயே அவர்களது கல்யாணம் ஸ்ரீஜாவின் கல்யாணத்திற்கு முன் நடந்தது, ஸ்ரீஜா நல்லப்பெண், படித்து வேலைத்தேடிக்கொண்டிருப்பவள். சுபா வீட்டிலில்லாத தருணங்களில் வருணைக் அவள் கண்ணுக்கு கண்ணாக பார்த்துகொள்பவள். சுபாவை தன் சகோதரிபோல் பாவிப்பவள், அக்ஷயைப்போன்று மென்மையானவள்.

கழிவறைக்குள் சென்று, வாயைப்பொத்திக்கொண்டு அழுது முடித்தாள். முகம் கழுவி, தன் இடத்திற்கு வந்தவளை, சிணுங்கிய அலைபேசி மீண்டும் அழைத்தது. ஸ்ரீஜாதான். அழைப்பை ஏற்றாள்.

“அண்ணி, வர்றீங்கல்ல, ட்ரிப்ஸ் ஏத்தனும்னு சொல்றாங்க, அம்மா அம்பத்தூர் போயிருக்காங்க, நீங்க வந்துதான் ஒரு டெசிஷன் எடுக்கனும்!”

“ஸ்ரீஜா, நான் எப்படியாச்சும் வந்திடுவேன், நீ அங்கேயே இரு!” அழைப்பைத்துண்டித்துவிட்டு, எழுந்து புது மேலாளரின் அறையை நோக்கி நடந்தாள்.

கணினித்திரையில் கண்களைப் பதித்திருந்தவன், அவளைப் பார்ததும் நிமிர்ந்து புன்னகைத்தான், “யெஸ், சுபா”, அவளது முகத்தைப்பார்த்ததும் எதை உணர்ந்தானோ? “உட்காருங்க, ஏதாவது பிரச்சனையா? “

“சார், என்னோட பையனுக்கு உடம்பு சரியில்ல ஹாஸ்பிட்டல் போகனும்”

ஒரு கணம் அவளைப்பார்த்தவன். “எந்த ஹாஸ்பிட்டல், எனிதிங்க் சீரீயஸ்?”

“ஆமா, சார், காலைல நல்ல காய்ச்சல் அதனால் ஃபிட்ஸ் வந்திடுச்சு!” சொல்லும்போது அவளை அறியாது கண்ணீர் துளிர்த்தது.

“ஓ மை காட், அவ்ளோ சீரியஸ் நா, ஒரு மெசேஜ் அனுப்பிட்டு நீங்க கிளம்பியிருக்க வேண்டியதுதானே! உடனே கிளம்புங்க, எப்படி போகப்போறீங்க?”

கேட்டவுடன் எந்த பந்தாவுமில்லாது அவன் அனுமதிப்பான் என்று அவள் நினைக்கவில்லை.” ஆட்டோல தான் போகனும் சார்!”

ஒரு கணம் யோசித்தவன், தனது கணினியை அனைத்துவிட்டு, “வாங்க போலாம், நான் உங்களை ட்ராப் பன்றேன்!”

அவள் அதிர்ந்துபோனாள் பதட்டமாக, “இல்ல சார், நீங்க பெர்மிஷன் கொடுத்ததே, எனக்கு போதும், நான் யார்கிட்டேயும் அதிகப்படியான உதவியை எதிர்பார்க்கிறது இல்லை!” அவளுடைய மனக்கட்டுபாடும், தற்காப்பு பயமும் சேர்ந்து உதிர்த்த வார்த்தைகள் அவை. அதை எளிதாக எதிர்கொண்டான அவன்.

“கமான் மேம், உங்க பையனுக்கு உடம்பு சரியில்லை, இப்ப நீங்க ஆட்டோ தேடி.. இல்ல பஸ் பிடிச்சு, காட் பீக் அவர்ஸ்ல, எதுக்கு ரிஸ்கு, டோன்ட் வேஸ்ட் டைம் ஹியர் கம் க்விக்!” அவன் அவளது பதிலுக்கு காத்திராது மேசைமீதிருந்த சாவியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். அவள் ஓடிச்சென்று தன் மணிப்பர்ஸை எடுத்துவரும் வரை லிஃப்ட் பட்டனை அழுத்திக்கிண்டு நின்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.