“எங்க வீட்டில் கொலு வச்சிருக்கோம், அம்மா ஈவினிங்க் உங்களை அழைச்சுட்டு வர சொன்னாங்க!”
“ஹரீஷ், வந்து, எனக்கு நிறைய வேலையிருக்கு!” அது அப்பட்டமான பொய், “எனக்கேவா?” என்பதுபோல் இருந்தது அவன் பார்வை.
“வருணை ஸ்கூல்லயிருந்து பிக் அப் பண்ணனும்!, இன்னொரு நாள் வர்றேன்!”
“ஆஃபீஸ்ல எல்லாரையும் நான் இன்வைட் பண்ணிருக்கேன், அவங்க கேப் அரேஞ்ச் பண்ணி வர்றாங்க, நீங்க என்னோட ஸ்பெஷல் கெஸ்ட், ஸோ உங்களையும் குட்டி அக்ஷையையும் நான் பிக் அப் பண்றேன், பீ ரெடி !” புன்னகைத்துவிட்டு அவள் பதிலுக்கு காத்திராது விரைந்து போனான்.
கொஞ்சம் கொஞ்சமாக அவள் மீது அவன் எடுத்துக்கொள்ளும் உரிமை அவளை அச்சுறுத்தியது.. மாலை சீக்கிரமே வீட்டுக்கு கிளம்பிப்போனாள், வருணை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழையும்போது, சுனிலின் குடும்பம் வந்திருந்தது. ஸ்ரீஜா அழகாக உடுத்திக்கொண்டு நின்றாள். சுபாவைக் கண்டதும் மலர்ந்து புன்னகைத்தாள். சுனிலின் தாய் அவளை வரவேற்றாள். சுனில், ஸ்ரீஜா கல்யாணம் பற்றிய பொதுவான விசயங்கள் தான் பேச்சு, சுபாவை மரியாதையுடன் நடத்திய அவர்களது குடும்பத்தை சுபாவிற்கு மிகவும் பிடித்துபோனது..ஸ்ரீஜாவின் திருமண நாள் குறிக்கப்பட்டது. பேச்சோடு பேச்சாக ஆகாஷ் ஊரிலிருந்து வரும் செய்தியும் அவள் காதில் விழுந்தது. இந்தக் களேபரத்தில், ஹரீஷ் அவளை அழைத்தது பற்றியோ அவள் அதை நிராகரித்தது பற்றியோ யோசிக்காது போனாள்.
ஒரு ஞாயிரன்று, வருணுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தவளை கலைத்தது அவன் குரல். “ஹாலோ!” என்று வாசலில் வந்து நின்றவனைக் கண்டு சிலையாகிப்போனாள் அவள்,
“வீட்டுக்குள்ள கூப்பிட மாட்டீங்களா?”
“வாங்க, அழைத்தவாறே இயல்பாக அவள் கண்கள் வீட்டுக்குள் சென்றது, ஸ்ரீஜா வீட்டில் இல்லை, தங்கம் ஏதோ வேலையாக மொட்டைமாடிக்கு சென்றவள் எந்நேரமும் வரக்கூடும்!”
உரிமையாக உள்ளே வந்தவன், ஹாலில் ஏதோ கலர் பென்சிலில் கிறுக்கிக்கொண்டிருந்த வருணை தூக்கிக்கொண்டான், கையில் கொண்டுவந்திருந்த கார் பொம்மையை இயக்கி காண்பித்தான், ஏதேதோ எண்ணங்கள் மனதில் ஓட, தவித்து நின்றவளைப் பார்த்து, “காஃபி, டீ எதுவும் தர மாட்டீங்களா?”
அவள் புன்னகைத்துவிட்டு உள்ளே போனாள், ஏதாவது சொல்லி அவனை அனுப்பிவிட உள்ளம் துடித்தது, சொல்லப்போனால் அவளுக்கு பெரும் உதவிகளை செய்யும் ஒரு நல்ல நண்பன் அவன், அவனை வரவேற்கும் நிலைமையில் இல்லாதது கண்டு உள்ளுக்குள் வருந்தினாள், கையில் காஃபி டம்பளரோடு ஹாலுக்குள் நுழைந்தவளையும், இளமையும் கம்பீரமும் ததும்ப மிகவும் இயல்பாக வருணோடு விளையாடிக்கொண்டிருந்தவனையும் ஒருசேர பார்த்த தங்கத்தின் கண்களில் சந்தேக கோடுகள் அப்பட்டமாக தெரிந்தது.
அதைக் கண்டும் காணாததுமாய் நிலைமையை சீராக்க எண்ணி, அவனை அறிமுகப்படுத்தினாள் சுபா. “அத்தை, இவங்க ஹரீஷ், என்னோட மேனேஜர், இங்க பக்கத்தில அவங்க ரிலேஷன் வீட்டுக்கு வந்தவங்க அப்படியே இங்க வந்துட்டு போகலாம்னு..” அவள் முடிக்கும் முன்னரே, அனல் கக்கும் கண்களில் அவளைப் பார்த்த தங்கம், “இந்தக் கூத்து எத்தனை நாளா நடக்குது? மேனேஜரா இல்ல வேறயாருமா? நான் வீட்டில் இல்லைன்னு தெரிஞ்சதும் நீ எவன் கூடயோ வண்டில எங்க்கேயோ பொயிட்டு வர்றேன்னு கேள்விபட்டேன், அப்பவே உன்ன கண்டிச்சிருந்தா இது இந்த அளவுக்கு வந்திருக்காது..!”
இன்னும் ஏதேதோ வார்த்தைகள் வந்துவிழும் இதை உணர்ந்த சுபாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது..
உண்மையில் இத்தனைக்கும் அதிர்ச்சி அடைய வேண்டியவன் சிறிதும் அதிராது, தன் இருக்கையில் எழுந்து நின்றான் மார்புக்கு குறுக்கே கைகளைக்கட்டிக்கொண்டு நின்று தங்கத்தை நேராக பார்த்தான்,
“கொஞ்சம் நிறுத்துறீங்களா!, முதல்ல நான் என் ரிலேஷன் வீட்டுக்கெல்லாம் வரல, சுபாவையும் வருணையும் பார்க்கதான் வந்தேன்!, உங்கக்கிட்ட இதைபத்தி பேசனும்னுதான் வீட்டுக்கு வந்தேன், கொஞ்சம் அமைதியா இருந்தீங்கன்னா நான் சொல்றது உங்களுக்கு புரியும்!”
உண்மையில் அதிர்ந்து போனது சுபாதான், இவன் என்ன சொல்லபோகிறான் புதிதாக, ஏதோ வினை வரப்போகிறதென அவள் உள்ளம் அவளுக்கு சொல்லியது இதயத்தை யாரோ சம்பட்டிக்கொண்டு அடிக்க, விக்கித்து நின்றவளின் முகத்தைப் பார்த்துக்கொண்டே பேசினான் அவன்.
“ஆண்ட்டி, நான் சுபாவை கல்யாணம் பண்ண விரும்புறேன், வருணை என்னோட குழந்தையா ஏத்துக்கிறேன், இதை நான் சுபாக்கிட்ட கூட பேசல, ஒரு அம்மா ஸ்தானத்தில் அவ கூட இப்ப நீங்க தான் இருக்கிறீங்க, அதனால உங்கக்கிட்ட பேசலாம்னு வந்தேன்!” தங்கம் உண்மையில் எதை எதிர்ப்பார்த்தாளோ அது நடந்துப்போனது!,
சுதாகரித்துக்கொண்ட சுபா, “ஹரீஷ், என்ன பேசுறீங்க, உங்க மேல எனக்கு எவ்வளவோ நல்ல மரியாதை இருந்துச்சு, ச்சீ, நீங்களும் மத்தவங்கள மாதிரிதானா? இந்த எண்ணத்தோடதான் நீங்க இந்த வீட்டுக்குள்ள வந்திருந்தீங்கன்னா, தயவு செஞ்சு, வெளில போங்க, இதை எவ்வளவு ஆக்ரோஷமாக அவள் சொன்னாளோ அவ்வளவு, கண்ணீருடனும் மன வேதனையுடனும் அவள் சொன்னாள்.