(Reading time: 31 - 62 minutes)

ன்று நடந்தவற்றை நினைத்துப் பார்த்தப்படி அந்த சேலையில் ஒட்டியிருந்த விலைப்பட்டியலை பார்த்தாள்.. அதில் 4,500 என்று எழுதியிருந்தது.. இந்த கடைக்கு ஏற்றார் போல் விலையும் அதிகமாக போட்டுள்ளனர்… பேசாமல் அன்றே அந்த கடையில் எடுத்திருக்கலாம் போல.. என்று அவள் பட்ஜெட் மூளை யோசித்தது.. இப்போது அந்த கடைக்கு சென்றால், இதே சேலை இருக்குமா?? அதுவும் தான் எதிர்பார்த்த இந்த வண்ணத்திலேயே இருக்குமா?? யோசித்தப்படியே சேலையை பார்த்தப்படி நின்றிருக்க,

“என்ன மது..?? இங்கேயே ஸ்டாப் ஆயிட்ட.. இது 5,000 ரேஞ்ச்க்கு கம்மி..  நீ 5,000 க்கு மேல எடுப்பேன்னு இல்ல நான் நினைச்சேன்..” என்று செல்வா அவளை சீண்டினான்..

அன்று இவன் பேசிய வார்த்தைகளை நர்மதா மறந்து அவனை மன்னித்திருந்தாலும், முன்போல் அவனை வெறுப்பேற்றுவதற்காக பேசுவதெல்லாம் இப்போது இல்லை.. அவனிடம் ஒரு அளவோடு தான் பேசுகிறாள்.. என்னவோ அவள் அப்படி இருப்பது செல்வாவிற்கு பிடிக்கவில்லை… அதனால் கொஞ்சம் சீண்டிப் பார்க்க நினைத்தே இப்படி கூறினான்… இருந்தும் சொல்லியப்பின் அதை அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று கொஞ்சம் பயத்துடனே அவளுடைய பதிலை எதிர்பார்த்தான்..

“என்னது 5,000 க்கு மேலயா..?? நான் 10,000 க்கு ப்ளான் பண்ணி வச்சிருக்கேன்… இன்னைக்கு உங்களுக்கு செலவு வைக்காம போறதா இல்ல.. அதுக்குதான் இந்த சாரில விலை என்ன போட்ருக்குன்னு பார்த்தேன்..” என்றவள், 5,000 க்கு மேல் விலை இருக்கும் சேலைகளின் பக்கம் பார்வையை செலுத்தினாள். அவனுக்கும் பழைய நர்மதா திரும்பி வந்தது போல் இருந்தது.

விற்பனையாளர் எடுத்துப் போட்டதை ஆர்வமே இல்லாமல் புரட்டிக் கொண்டிருந்தாள்.. மனம் முழுதும் அந்த சேலையின் மீதே இருந்தது… அன்று அந்த சேலையின் விலை அதிகம், அதனால் அப்போதைக்கு அதை எடுக்க வேண்டாம் என்று விட்டுவிட்டாள்… இன்று அதன் விலை குறைவு என்று அதை ஒதுக்கிவிட்டாள்… ரிஷப் என்ன கேட்டால் என்ன? எனக்கு இது தான் பிடித்திருக்கிறது என்று எடுத்திருக்கலாமே.. அதை விட்டுவிட்டு அவனிடம் ஏன் வம்புக்கு நிற்கிறேன்.. அன்று நடந்த பிரச்சனைக்கு முன்பே அப்படியெல்லாம் அவனோடு வம்புக்கு நிற்க வேண்டாம் என்று தானே நினைத்தோம்… இப்போது அவன் சீண்டினால் கண்டும் காணாமல் போவதெற்கென்ன என்று அவள் மனசாட்சி சொல்லிக் காட்டியது.. ஆனாலும் இப்போது அவனிடம் சொல்லிவிட்டோம் என்பதற்காக வேறு ஏதாவது சேலை எடுக்கும் முடிவில் இருந்தாள்.

“என்ன மது.. இந்த சாரில ஒன்னுக் கூடவா பிடிக்கல… நான் வேணும்னா செலக்ட் செய்ய ஹெல்ப் பண்ணவா.. நம்ம கல்யாணத்துக்கு உனக்கு சாரி நான்தானே செலக்ட் செஞ்சு கொடுத்தேன்.. அந்த சாரில நீ எவ்வளவு அழகா இருந்த தெரியுமா?? இன்னும் கூட என்னால நம்ப முடியல.. நம்ம ரெண்டுப்பேருக்கு கல்யாணம்னு முன்னாடியே முடிவாகியிருக்கு போல… அதான் கடவுளே நான் சாரி செலக்ட் செய்யற மாதிரி சூழ்நிலையை உருவாக்கியிருக்காரு..”

“திருமணங்கள் ஏற்கனவே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு இருக்குன்னு சொல்வாங்க.. என்னமோ இப்போ தான் புதுசா கண்டுப்பிடிச்ச மாதிரி சொல்றீங்க.. எனக்கு சாரி செலக்ட் பண்ற மூட் இல்ல.. முதல்ல பெரியவங்களுக்கு சாரி எடுப்போம்… அப்புறம் எனக்கு செலக்ட் செஞ்சுக்கிறேன்.. “

“சரி ஒன்னு பண்ணலாம்… நீ அம்மா, அத்தைக்கெல்லாம் சாரி பார்த்துக்கிட்டு இரு.. நான் ஜென்ட்ஸ் செக்‌ஷன்க்கு போய் பார்க்கிறேன்…. அம்மாக்கும், அத்தைக்கும் ரொம்ப வெய்ட் இல்லாம எடு..” என்று  சொல்லிவிட்டு அவன் ஆண்கள் ஆடைகள் இருக்கும் பகுதிக்கு செல்லவும், அவளும் கோமதி விஜிக்கு சேலைகள் தேர்ந்தெடுப்பதற்காக அவர்களுக்கு ஏத்த சேலைகள் இருக்கும் பகுதிக்கு சென்றாள்.

சில சேலைகளை தேர்ந்தெடுத்தவள், எதை எடுக்கலாம் என்பதை செல்வாவிடம் ஒருமுறை கேட்டுவிட்டு எடுத்துக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்க, செல்வாவும் அவனுக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு வந்தான்.

“இது அத்தைக்குன்னு செலக்ட் செஞ்சு வச்சது… இது விஜி அம்மாக்குன்னு செலக்ட் செஞ்சு வச்சது…. இதுல எந்த கலர் எடுத்துக்கலாம்..” என்று அவள் கேட்டதும், அதிலிருந்து இருவருக்கும் சேலைகளை தேர்வு செய்தான்,

“இது அம்மாக்கு நல்லா இருக்கும்.. இது அத்தைக்கு நல்லா இருக்கும்.. இதையே எடுத்துக்கலாமா??”

“ம்ம் ஓகே.. அப்போ இதையே எடுத்துக்கலாம்…”

“ஆமாம்.. என்ன இவங்க ரெண்டுப்பேருக்கு மட்டும் எடுத்திருக்க… உங்க அம்மாக்கு எடுக்கலையா..?? அவங்களும் இந்த மாதிரி சாரி கட்டுவாங்கல்ல.. சரி அத்தைக்கு நானே செலக்ட் பண்றேன்..” என்றவன் மல்லிகாவிற்கு சேலை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தான்…

கோமதி சொல்லி அனுப்பியிருந்தாலும், தன் குடும்பத்தாருக்கு எடுக்க அவள் தயக்கம் காட்டினாள்… ஆனால் அப்படி எதுவுமில்லாமல் தன் அன்னைக்கு அவன் ஆர்வத்தோடு சேலை எடுப்பதை ரசித்துப் பார்த்தப்படி நின்றிருந்தாள்.

“மது..” அவன் அழைத்ததும் சட்டென்று பார்வையை மாற்ற அவள் சிரம பட வேண்டியிருந்தது.. இருந்தும் அதை  கண்டுக் கொண்டவன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது..

“இந்த சாரி அத்தைக்கு நல்லா இருக்கும்னு தோனுது.. உனக்கு பிடிச்சிருக்கா..”

“ம்ம் நல்லா இருக்கு… அம்மாக்கு இந்த கலர் பிடிக்கும்.. இதையே எடுத்துக்கலாம்..”

“ஓகே.. அப்புறம் எனக்கு ட்ரஸ் எடுக்கும்போதே, உன்னோட தம்பிக்கு போன் செஞ்சு அவனுக்கு எப்படி ட்ர்ஸ் வேணும்னு கேட்டு எடுத்துட்டேன்… அவன் உனக்கு மேல, எதுக்கு மாமா இதெல்லாம், நான் தீபாவளுக்கு எடுத்துட்டேன்.. அம்மா,அப்பா,அக்காக்கிட்டல்லாம் கேக்கனும்னு காரணமெல்லாம் சொன்னான்.. உன்னோட அக்காவும் என்னோட ஷாப்பிங் வந்திருக்கா.. அவ தான் உன்கிட்ட கேக்க சொன்னான்னு சொன்னதும் தான் அவன் ஓகே சொன்னான்..” என்றதும் அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.

“அத்தைக்கும், உன்னோட தம்பிக்கும் எடுத்தாச்சு, அடுத்து மாமாக்கு தான், அவர் வேஷ்டி தான் கட்டுவார் இல்ல.. அது எனக்கு எப்படி எடுக்கன்ன தெரியல.. அதனால நீயே அவருக்கு செலக்ட் பண்ணு.. உனக்கு சாரி எடுத்துட்டு அவருக்கு பார்க்கலாமா??”

“இல்ல.. முதல்ல அவருக்கே எடுத்துடலாம்.. அப்புறம் எனக்கு எடுத்துக்கலாம்..” என்று சேலை பகுதியை விட்டு போகும் போது அந்த சேலையை பார்த்தப்படி சென்றாள்..

குமாராசாமிக்கும் வேஷ்டி சட்டை எடுத்து முடித்ததும், “என்க்கு தலை வலிக்கிற மாதிரி இருக்கு, நான் இன்னொரு நாள் சாரி எடுத்துக்கிறேன்.. இப்போ நாம போகலாம்..” என்று அவள்  சொன்னதும், ஏதோ சொல்ல வந்தவன், “சரி போகலாம்” என்றான்.

பில் போடும் பகுதிக்கு சென்றால், அங்கு ஒரு நான்கு பேர் நின்றிருந்தனர்.. “மது.. நீ தலைவலின்னு சொன்னல்ல.. நீ இப்போ இங்க வெய்ட் பண்ண வேண்டாம்.. இந்த கடைக்கு ரைட் சைட் ரெண்டு பில்டிங் தள்ளி, ஒரு ரெஸ்ட்டாரன்ட் இருக்கு..  அங்க வெய்ட் பண்ணு.. நான் பில் போட்டு திங்ஸ் வாங்கிட்டு வரேன்..” என்று செல்வா சொன்னதற்கு,

“இல்ல எனக்கு இப்போ எதுவும் சாப்பிட வேண்டம்.. நாம வீட்டுக்குப் போகலாம்.. நீங்க வரவரைக்கும் நான் கார்ல இருக்கேன்..” என்று நர்மதா சொன்னாள்.

“நாம இன்னும் கொஞ்சம் ஷாப்பிங் செய்ய வேண்டியிருக்கு மது.. இப்போ லன்ச் டைம் நெருங்கிடுச்சு.. அதனால சாப்டுட்டு ஷாப்பிங் செய்யறது நல்லது.. அதனால நீ ரெஸ்ட்டாரன்ட்க்கு போய் உக்காரு.. நான் பின்னாடியே வரேன்” என்று அவன் கொஞ்சம் கண்டிக்கும் விதமாக சொன்னதும் அவளால் மறுக்க முடியாமல் அந்த ரெஸ்ட்டாரன்டிற்கு சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.