(Reading time: 31 - 62 minutes)

வீட்டிற்கு வந்ததும் கோமதியிடம் தான் வாங்கி வந்ததையெல்லாம் நர்மதா காட்டினாள்.. அவருக்கும், விஜிக்கும் எடுத்த சேலைகள் பிடித்திருக்கிறதா என்றுக் கேட்டவள், தன் பெற்றோருக்கும், சகோதரனுக்கும் வாங்கி வந்ததையும் காட்டினாள்.

அனைத்தையும் பார்த்து திருப்தி ஆனவர், “ஆமாம் உங்க ரெண்டுப்பேருக்கு எடுத்ததை காட்டுங்க.. தலை தீபாவளி உங்களுக்குத் தானே..” என்று அவர்கள் இருவருக்கு வாங்கியதை பற்றி கேட்டதும், என்ன சொல்வது என்று நர்மதா விழிக்க,

“அம்மா இதுதான் எங்களுக்கு வாங்கினது..” என்று அவனுக்கு வாங்கிய உடைகளோடு, ஒரு சேலையையும் எடுத்துக் காட்டினான்.. அது அவள் வாங்க ஆசைப்பட்டு, மனசில்லாமல் விட்டு விட்டு வந்த அதே சேலை..

அதைப்பார்த்ததும், “இதை எப்போது வாங்கினான்….” என்ற வியப்போடு செல்வாவை பார்த்தாள்.

“ம்ம் இந்த புடவை நல்லா இருக்கும்மா.. உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்.. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் அதிக விலையில எடுத்திருக்கலாம் இல்ல செல்வா..”

“அது… இதுதான்ம்மா மதுவுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..”

“ஆமாம் இது உண்மையிலேயே அழகா தான் இருக்கு.. உனக்கு பிடிச்சிருந்தா சரி தான்ம்மா.” என்றவர் தன் அறைக்கு சென்றார்.

“எப்படியோ உனக்கு எடுக்கலன்னா அம்மா கோபப்படுவாங்க மது… அதான் கடைக்குள்ள போனதும் இந்த சாரிய பார்த்தீயா..?? உனக்கு பிடிச்சு தானே பார்த்திருப்ப அதான் எடுத்தேன்..”

“தூரமா பார்த்தப்போ நல்லா தான் இருந்துச்சு..  ஆனா கிட்டப் பார்த்தப்போ சுமாரா தெரிஞ்சுது.. அதான் அதை வாங்கல.. சரி அத்தைக்கு என்ன பதில் சொல்லன்னு யோசிச்சேன்.. இப்போ ஏதோ ஒன்ன வாங்கி அவங்கள சமாளிச்சாச்சு..” என்றாள், அனைத்தையும் தன் அறைக்கு எடுத்து சென்றவள், முதல் வேலையாக அந்த சேலையை எடுத்து தன் மேலே போட்டு அழகு பார்த்தாள்.

அவள் அறைக்குச் சென்ற சிறிது நேரத்திற்கு பின், பின்னாலேயே அறைக்கு வந்த செல்வா, அவள் கண்ணாடி முன் நின்று சேலையை மேலே போட்டு அழகுப் பார்த்ததை ரசித்து பார்த்தப்படி நின்றிருந்தான்.

திடிரென்று அவன் தன்னை பார்த்துக் கொண்டு நின்றிருப்பதை பார்த்தவள், சேலையை கட்டிலில் வைத்தாள்..

“மது… இந்த சாரி சுமாரா இருந்தாலும், நீ கட்டினா அந்த சாரிக்கே தனி அழகு வந்திடும்..” உள்ளே வந்தவன், அவள் அருகில் நின்று சொன்னான்.

“ம்ம் பார்க்க சுமாரா தெரிஞ்சாலும், இப்போ நல்லா தான் இருக்கு.. தீபாவளிக்கு இந்த சாரியே போதும், ஆனா அடுத்த ஷாப்பிங் அப்போ, கண்டிப்பா பத்தாயிரம் பட்ஜெட் தான்..” என்று விரல் காட்டி எச்சரித்தவள், அந்த அறையை விட்டுச் சென்றாள்..

“அவளுக்கு பிடிச்சு வாங்கனும்னு நினைச்சத வாங்கிக்கிட்டு வந்தும்,  இப்போ வரைக்கும் சாரி பிடிச்சிருக்குன்னு ஒத்துக்கிறாளா பாரு..” என்று நினைத்தவன், அவள் சென்ற திசையைப் பார்த்து சிரித்தப்படி நின்றான்.

தீபாவளிக்கு இன்னும் மூன்று தினங்களே இருந்தது.. மாலை பள்ளி முடிந்து யமுனா ஹாஸ்டலுக்கு வர, அவளுக்கு ஒரு பார்சல் வந்திருப்பதாக அவள் அறை தோழி ஒரு பார்சலை கையில் கொடுத்தாள்.. அதை யார் அனுப்பியிருப்பார் என்று தெரிந்ததால், அவள் அதை பிரிப்பதில் அவசரம் காட்டவில்லை.

நைட் ஷிப்ட்க்காக அந்த தோழி கிளம்பியதும், மெதுவாக அந்த பார்சலை பிரித்தாள்… அதில் அழகான ஒரு சேலையும், ஒரு டெய்ரி மில்க் ப்ரூட் அண்ட் நட் சாக்லேட்டும் இருந்தது.. ஒவ்வொரு தீபாவளிக்கும் வருவது தான், முன்பு இவள் கல்லூரி படித்தபோது சல்வார்… இப்போது இவள் ஆசிரியையாய் பணியாற்றுவதால இரண்டு வருடமாக சேலை தீபாவளி பரிசாக வருகிறது..

அந்த சேலையை விரித்துப் பார்த்தாள்.. அது ஒரு சாதாரண சேலை தான், ஆனால் அதில் செய்திருந்த கை வேலைப்பாடுகள் அதன் அழகை கூட்டியது.. இதற்கு எப்படியோ நிறைய நேரம் செலவிட்டிருக்க வேண்டும்.. தன் அன்னையும் அப்படித்தான், தன் கை வேலைப்பாட்டால் ஒரு ஆடையை அழகாக மாற்றி விடுவார்… அந்த திறமை அப்படியே இந்த சேலையிலும் தெரிந்தது.. அந்த சேலையை பார்த்ததும் ஏதேதோ ஞாபகம் வந்தது..

அன்றும் இதே போல் ஒரு தீபாவளி தான், அந்த தீபாவளிக்கு இவளின் அன்னை இவளுக்கு பாவாடை சட்டையும், இவள் சகோதரிக்கு பாவாடை தாவணியும் எடுத்திருந்தார்.. இவள் அப்போது 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்… இவளின் சகோதரி பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்..

“பழைய பஞ்சாங்கம் மாதிரி எதுக்கு இதையே குழந்தைங்களுக்கு அடிக்கடி எடுக்குற..” என்று இவளின் தந்தை, அன்னையை கடிந்துக் கொள்வார்..

“இதுதான் நம்மளோட பாரம்பரியம்.. உங்களுக்கென்ன தெரியும் என்று சொல்லி.. இவளின் அன்னை, தந்தையை அமைதியாக்கி விடுவார்.

அந்த சாதாரண ஆடையை தன் கைவேலைப்பாட்டால்  அழகாக தன் அன்னை தைத்ததும் அதை இவர்கள் இருவரும் அணிந்தார்கள்..

“ரெண்டு தேவதைகளே நமக்கு பொண்ணா பொறந்திருக்காங்க..” என்று பெருமை பேசிய தந்தை.. உடனே அனைவரையும் போட்டோ ஸ்டூடியோவிற்கு கூட்டிச் சென்றார்.

அன்னையும் தந்தையும் நடுவில் நிற்க, தந்தை பக்கத்தில் அக்காவும், அன்னை பக்கத்தில் இவளும் நின்றிருக்க புகைப்படம் எடுக்கப்பட்டது.. சுவற்றில் மாட்டும் அளவிற்கு ஒரு அளவை காட்டி, அந்த அளவுக்கு லாமினேஷன் செய்ய வேண்டும், அதுவும் 3 வேண்டும் என்று இவளின் தந்தை கூறினார்.

“எதுக்கு 3 போட்டோ..” என்று அன்னை கேட்டதற்கு, “நம்ம பொண்ணுங்க கல்யாணம் செஞ்சுக்கிட்டு போகும்போது, ஆளுக்கு ஒன்னு அவங்க எடுத்துக்கிட்டுப் போகனும், ஒன்னு நம்ம கையில் இருக்கனும்..” என்றார்.

அந்த தீபாவளி தான் நால்வரும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியோடு கொண்டாடிய தீபாவளி… அது அந்த விதிக்கு பொறுக்கவில்லையோ..?? அதற்கு அடுத்து வந்த தீபாவளிக்கு அவர்கள் அன்னை அவர்களோடு இல்லை.. அதற்கு அடுத்த தீபாவளியில் தந்தையும் உடன் இல்லை.. அதன்பின் வந்த தீபாவளியில் மகிழ்ச்சியை வரவைத்துக் கொண்டு சகோதரிகள் இருவரும் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடினர்.. அதற்கு அடுத்தோ சகோதரிகளே பிரிந்து இருந்த நிலையை என்னவென்று சொல்வது..??

கண்களில் கண்ணீரோடு தன் பெட்டியில் இருந்த புகைப்படத்தை எடுத்து பார்த்தப்படி அமர்ந்திருந்தாள் யமுனா.. அதே நேரம் தன் அறையில் கங்காவும் அதே புகைப்படத்தை தான் பார்த்திருந்தாள்.

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 22

Episode # 24

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.