(Reading time: 26 - 51 minutes)

அந்த குளிருக்கு இந்தரை சற்று நெருங்கியே அமர வேண்டி இருந்தது. இந்தரும், பூஜாவை தனது கையணைப்பில் வைத்து “இப்போ நீ சொல்லுடா, உனக்கு எப்போ என் மேல் காதல் வந்தது.”

சிறிது வெட்கத்துடன் கன்னம் சிவக்க, “உங்க அளவுக்கு எனக்கு சரியா சொல்ல தெரியலை ஜித்து. ஆனா உங்களை முதல் முறை ரேஹேன் அருவி, கார் பார்க்கில், பார்த்த பொழுதே, எதோ வெளி ஆள் என்ற எண்ணம் தோன்றாமல், உங்களை நம்பி உங்களுடன் வரலாம் என்ற எண்ணம் வந்தது.”

“இல்லன்னா என்னடா செய்திருப்ப? அங்கிருந்து நடந்தே வந்திருபியா என்ன? என கிண்டல் செய்தான் இந்தர்.

“ஹலோ, எங்களுக்கும் கொஞ்சம் மூளை வேலை செய்யும், வேற யாரும் அந்நேரம் வந்து உதவி செய்யறேன்னு கேட்டிருந்தால், வேண்டாம் என்று சொல்லிவிட்டு, மறுபடி அருவி அருகில் சென்று, அங்கிருந்த உதவி மையத்தை அணுகி இருப்பேன்.” என்று பூஜாவும் வீராப்பகவே கூறினாள்.

“சரி அப்புறம் எப்போ தான் லவ் வந்தது.” சிறு புன்னகையுடன் கேட்டான் இந்தர்.

“அன்று பட்டமளிப்பு விழாவிற்கு மறு நாள் காலை, கண் விழித்த பொழுது உங்க முகத்தை பார்தேனா, அப்போ தோன்றியது, வாழ்நாள் முழுவதும் உங்க முகத்தில் தான் விழிக்க வேண்டும் என்று. அதற்கு தான் நாம் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டேன். ஆனால் நீங்க என்ன சொன்னீங்க?  ஸ்கூலுக்கு கிளம்பு என்று சொல்லும் அம்மா போல், நீ பேபிடா முதலில் படி அப்படின்னு சொல்லிட்டு போய்டீங்க. எனக்கு கோபம் வருமா வராதா?” என சிறிது கோபமாகவே கேட்டாள் பூஜா........

“கூல்டா பேபி. நீ அப்போ நிஜமாவே பேபியா தான்டா இருந்த”  என்று கூறி செல்லமாக இரண்டு அடியும் வாங்கினான் பூஜாவிடமிருந்து. “சரி வா, அடுத்து என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்” என கூறி அங்கிருந்து கிளப்பி சென்றான் பூஜாவை.

அங்கிருந்த ஒரு பெரிய பள்ளத்தாக்கில்  இரண்டு பக்கமும் பெரிய தூண்கள் அமைக்கப் பட்டு இரண்டு தூண்களையும் தடிமனான இரும்பு கம்பிகளால் பிணைக்கப்பட்டு இருந்தது. அதில் சிறு சக்கரங்கள் பொருத்தப்பட்டு அதில் ஊஞ்சல் போல் தொங்கியது. அதில் ஒவ்வொருவரும் அமர்ந்து தொங்கிய வண்ணம் ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்கு செல்லும்படி இருந்தது. அதில் இருவரும் ஏறி தொங்கியவாறு அடுத்த பகுதியை அடைந்தனர். அங்கு சைக்கிள் வாடகைக்கு இருந்தது. அதிலும் ஆளுக்கொரு சைக்கிளில் ஏறி சிறிது தூரம் சுற்றி வந்தனர்.

எல்லாம் முடிந்து வீட்டிற்கு திரும்பும் பொழுது “ஜித்து, போற வழியில் ஏதாவது இந்தியன் ஸ்டோர் இருந்தா அதில் நான் சமைக்கும் படி சிறிது சாமான் வாங்கிக் கொள்ளலாம்.” என்றால் பூஜா

“உனக்கு நமது உணவு சாப்பிட வேண்டுமானால் சொல்லு, நாம் ஏதாவது இந்திய உணவகத்திற்கு சென்று சாப்பிடலாம்டா.  ஏன் கஷ்டப்படனும்.” என அக்கறையுடன் கேட்டான் இந்தர்.

“எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை ஜித்துமா” என குழைவுடன் கூறினாள் பூஜா

“உன் சமையலை சாப்பிடப் போகும் என் கஷ்டத்தை சொன்னேன்டா” என கூறி அவளை வாரினான் இந்தர். அத்துடன் இரண்டு செல்ல அடிகளையும் பரிசாகப் பெற்றுக் கொண்டான்.

இருந்தாலும் கூகுளில் தேடி அந்த இந்திய கடையை அடைந்து அங்கு சில பொருட்கள் வாங்கியே வீடு திரும்பினர்.

ஆனால் சமைப்பது தான் அவ்வளவு ஈசியாக இருக்கவில்லை பூஜாவிற்கு. சமையலை ஆரம்பித்தாலே உதவி செய்கிறேன் பேர்வழி என்று இந்தர் அடித்த கொட்டம் ஏராளம். சில நேரம் சமையல் பாதியிலும் நின்று மற்ற வேலை அரங்கேறியது. இரண்டு நாளில் அவனது குறும்பு பொறுக்க முடியாமல் நாம் எங்காவது வெளியே சென்று வரலாம் என பூஜா கேட்கும் அளவிற்கு.

அடுத்த இடத்தை நெட்டில் தேடி உங்க்ஃபறு என்ற இடத்திற்க்கு செல்ல திட்டமிட்டனர். அதுவும் ஒரு மணிநேர பயணத்தில் இருந்தது. அது தான் ஐரோப்பாவின உயரமான இடமாக கருதப்படுகிறது. இது ஐரோப்பாவின் உச்சி என்று அழைக்கப்படுகிறது. மேலே செல்ல இரயில் வண்டி இருந்தது. உலகிலேயே உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட இரயில் போகும் இடமாக இருந்தது. போகும் வழியெங்கும் இயற்கை காட்சிகள் மிக அழகாக இருந்தது. சற்று உயரம் சென்றதுமே பனி மலையை முழுவதும் மூடி இருந்தது. சில இடங்களில் மலையை குடைந்து குகைக்குள் செல்லும்படி பாதை அமைந்து இருந்தது.

அந்த ரயிலில் எந்த ஹீட்டர் வசதியும் இல்லாததால் குளிர் அதிகமாக இருந்தது. என்ன தான் குளிருக்கு அணியும் ஆடைகளாக இருந்தாலும், அதையும் மீறி குளிர் வாட்டத்தான் செய்தது. நமது சென்னை வெயிலை எப்போது பார்ப்போம் என்று ஏக்கமாக இருந்தது. ஆனால் மேலே அந்த இடத்தை அடைந்ததும், ஒரு பெரிய கட்டிடமாக இருந்ததால் அதில் முழுவதும் ஹீட்டர் வசதி இருந்ததால் சற்று நன்றாக இருந்தது. அந்த கட்டிடத்தை  1903 ம் வருடம் கட்டி முடித்துள்ளனர். இரயில் பாதையும் அப்போதே போட்டு முடிக்கப்பட்டுள்ளது.

மலை மீது அமைந்து இருந்ததால் மேலும் கீழுமாக ஒவ்வொரு இடமும் அமைந்து இருந்தது. அதற்கு செல்ல அங்கங்கு லிப்ட் வசதியும் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.