(Reading time: 17 - 33 minutes)

“ஓய்.. அந்த நினைப்பு வேற இருக்க இந்த சிடுமூஞ்சிக்கு?”

“ ஹா ஹா சும்மா சொன்னேன் பொண்டாட்டி.. இந்த சிடுமூஞ்சிய உன்னைத்தவிர எந்த பொண்ணு கட்டிக்கும்?”

“அது..அந்த பயம் இருக்கட்டும்..”

“அதப்பத்தி நீ என் கவலைப்படுற? நானும் புகழும் பாத்துக்குறோம்.. அப்பாக்கிட்ட ஆல்ரெடி, கல்யாண வேலையே நிறைய இருக்கு.. சோ ரிஜிஸ்டர் மேரெஜ் கு பெருசா எதுவும் பண்ண வேண்டாம்னு சொல்லி வெச்சுட்டேன்.. மாமாவை புகழ் பாத்துப்பான்” என்றான் தமிழ்.

“ஹ்ம்ம்.. புகழ் மாதிரி நண்பன் கிடைக்க நான் கொடுத்து வெச்சு இருக்கனும் தமிழ்.. கல்யாணத்துக்கு அப்பறம் நான் உங்களோடு வந்திருவேன்.. அப்பா தனியா எப்படி இருப்பாருன்னு நினைச்சு தினமும் கவலைப்பட்டேன் தெரியுமா? புகழ்தான் இனி அப்பாகூடவே வீட்டில் தங்கிக்கிறேன்னு சொல்லிட்டான்.. அவனுக்கு சுப்ரஜா ஆண்ட்டி கட்டிதந்த சொந்த வீடு இருந்தும், இங்க வந்து இருக்கேன்னு சொன்னான்.. எவ்வளவு பெரிய விஷயம்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு”என்றாள் யாழினி. மனைவியின் கூற்றினை ஆமோதித்தான் தமிழ்.

“ஆமாடா.. ஆரம்பத்தில் புகழ் என்கிட்ட பேசின விதத்தில் நானும் அவனும் தொட்டாசிணுங்கி படத்துல வர்ற ரகுவரன், கார்த்திக் மாதிரி இருப்போம்னு நினைச்சேன்.. ஆனா நாங்க ரன் படத்துல வர்ற மேடி, ரகுவரன் மாதிரியில இருக்கோம்?”என்று சிலாகித்துக் கொண்டான் அவன்.

“ஹா ஹா இதுக்கு இன்னொருத்தரின் பங்கும் இருக்கே!”

“அவர் யாரு?”

“வேற யாரு?என் புருஷன்தான்.. இண்டெர்னெட்ல படிச்ச ஒரு துணுக்கு ஞாபகம் வருது. அதாவது,

ஒரு பெண் அவளுடைய நண்பனின் அணைப்பில் நின்னுட்டே

“இப்போ என் காதலனை நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன்” னு சொல்ல முடியுமாம். அதை அவன் தப்பாக எடுத்துக்க மாட்டானாம். மிக சரியா புரிஞ்சுப்பானாம். ஆனா அதே பெண் அவளுடைய காதலை கட்டிப்பிடிச்சுக்கிட்டு,

“இப்போ என் நண்பனை நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன்” னு சொல்லமுடியாதாம்!

ஆனா, என் தமிழ் அப்படி இல்லையே!”

“ஹா ஹா .. எல்லா பசங்களும் உண்மையான நட்போட பழகுறது இல்லடா. ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்கு புரியும்னு நீங்க சொல்லிக்கிற மாதிரி ஒரு பையனோட நோக்கம் இன்னொரு பையனுக்கு தெரியும். நட்பை ஆயுதமாக்கி தனக்கு சாதகமாக்கிக்கிற பசங்க நிறைய பேரு இருக்கத்தான் செய்யுறாங்க.

மனசார காதலிக்கிற பெண்ணை அப்படிப்பட்ட பசங்ககிட்ட முட்டாளாக விடக்கூடாதுன்னு உண்மையாக நேசிக்கிற காதலன் நினைக்கிறான். அந்த வேகத்துலதான் காதலியின் நட்புக்குள்ள கோடு கிழிக்கிறான். ஆனா இது ரொம்ப மென்மையான உறவு.அதை பொறுமையாக கையாளனும்னு பசங்க உணருறதே இல்லை. என் காதலி நீ, நான் சொல்லுறதை அப்படியே கேளுனு அதிகாரம் பண்ணும்போதுதான் பொண்ணுங்களுக்கு கோபம்வருது. பலநேரங்கள்ல பசங்க சொல்ல வருகிற விஷயம் சரியானதாக இருக்கும்.. ஆனா அதை சொல்லுற விதம் தான் சுத்த சொதப்பல்” என சிரித்தான் தமிழ்.

“இந்த விஷயத்துல நீ கொடுத்து வைச்ச பொண்ணு.. புகழ் சொக்க தங்கம்”. யாழினியுமே ஆமென தலையசைத்து ஆமோதித்தாள். அறிந்திருக்கவில்லை அவர்கள், தாங்கள் பாராட்டும் புகழே தங்களது திருமணம் நிற்க காரணமாகிப்போவான் என!

மூன்று நாட்கள் கடந்திருந்த நிலையில், தனது அறையில் மெத்தைமீது ஒரு புடவை கடையையே திறந்திருந்தாள் யாழினி. திருமண ஏற்பாடுகள் பற்றி கொஞ்சம் பேசிவிட்டு மருமகளையும் ஒருமுறை பார்த்துவிட்டு போக சுதாகரும், மனோன்மணியின் அன்று மாலை அங்கு வரவிருப்பதாக சொல்லியிருந்தனர்.

“ பட்டுப்புடவை கட்டனுமா புகழ்? ஆனா எனக்கு அசௌகரியமா இருக்குமே? சாதாரண புடவையை கட்டிக்கவா? ஆக்சுவலி, புடவை கட்டனுமா என்ன? இப்படி சுடிதார்லயே இருக்கவா? இல்ல கொஞ்சம் டாலடிக்கிற சுடிதார் போட்டுக்கவா?

நகை போட்டு இருக்கனுமா? இந்த செயின் போதும்ல? கல்யாண பொண்ணுங்குறதுனால நகை கொஞ்சம் போட்டிருக்கனுமா? பின்னல் போட்டுக்கவா? இல்ல ஃப்ரீயா விடவா? தமிழுக்கு நான் ப்ரீய விட்டா ரொம்ப பிடிக்கும்.. ஆனா அத்தைக்கு பிடிக்குமா?பிடிக்கலன்னா?” இப்படி யாழினி மூச்சே விடாமல் கேட்ட கேள்விகளினால் தலைமீது கைவைத்துக் கொண்டு அமர்ந்துவிட்டான் புகழ். அவள் அறைக்கு எதிர்ச்சையாக வந்த மோகன் அவன் அமர்ந்திருந்த கோலத்தை பார்த்து சிரித்தே விட்டார். அவரை யாழினி ஆச்சர்யமாக பார்க்க, புகழோ அவரிடன் ஓடி வந்தான்.

“பாருங்கப்பா இவளை. படுத்தி எடுக்குறா.. நிமிஷத்துக்கு..ம்ம்ஹ்ம்ம் வினாடிக்கு ஒரு கேள்வி கேட்குறா.. எனக்கு தலையே சுத்துது. நான் இருக்குற வேலைய  கவனிப்பேனா?இல்ல இவளை சமாளிப்பேனா?”என்று அவன் இயல்பாக கேட்க மோகனின் முகத்தில் சோகம் பரவியது.

“யாழினியோட அம்மா இருந்திருந்தா இதையெல்லாம் அவளே பண்ணி இருப்பா..” கமறிய குரலில் அவர் சொல்லவும், தந்தையில் தோளில் சாய்ந்துகொண்டு கண் கலங்கினாள் யாழினி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.