(Reading time: 17 - 33 minutes)

“அப்பா.. இப்படியெல்லாம் பேசாதிங்கப்பா.. எனக்கு ரொம்ப அழுகை வருதுப்பா.. அம்மா இல்லன்னு நான் பீல் பண்ணதே இல்லப்பா..எனக்குத்தான் நீங்க இருக்கீங்களே.. அம்மா கூட என்னை இப்படி வளர்த்திருப்பாங்களானு சந்தேகம் தான் பா. என்னத்தான் வெளில நீங்க கண்டிப்பா இருந்தாலும், அதெல்லாம் என்னோட நல்லதுக்குத்தானேப்பா? எவ்வளவு கண்டிப்பாக இருந்தாலும் எனக்கு வேண்டியதை நீங்க தராமல் இருந்ததே இல்லைப்பா.. என் லைஃப்ல நிறைவேறாத கனவுன்னு ஒன்னு இல்லவே இல்லைப்பா.. உங்கள பிரிஞ்சு நான் எப்படிப்பா இருக்க போறேன்? நீங்க எப்படிப்பா இருப்பீங்க?”என்றாள் யாழினி. எப்போதும் கண்டிப்பாக பேசும் மோகனுக்கே என்ன சொல்வதென்று தெரியாமல் போனது.

“சிலநேரம் தோணுதுப்பா.. இந்த கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு உங்க கூடவே இருக்கனும்னு!” என்று யாழினி சொல்லி முடிந்த நேரம் ஒரே குரலில், மோகனும் புகழும்

“யாழினி!!” என்று அதட்டினார்கள்.

“ நல்ல விஷயம் நடக்கும்போது இப்படி பேசக்கூடாது.. சுதாகரும், மனோன்மணியும் உனக்கு அப்பா அம்மா மாதிரிதான். இதுவரைக்கும் என்னுடைய மகளாக நீ பெருமை சேர்த்து சந்தோஷத்தை மட்டும்தான் தந்து இருக்க! இனி அதேகடமையை புகுந்த வீட்டிலும் செய்யனும்.இன்னொரு தடவை இப்படி சொன்ன, நான் மனுஷனாகவே இருக்க மாட்டேன் புரிஞ்சதா?” என்று மோகன் உருமவும், மிரட்சியாகப் பார்த்தாள் யாழினி.

“வளர்ந்தும் இவள் குழந்தைதான்”என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவர் தன் மகளின் தலையை செல்லமாக வருடித் தந்தார்.

யாழினி-மோகன் இருவரும் பறிமாறிக்கொண்ட அன்பினை கண்களால் புகழ் நிரப்பிக்கொண்ட நேரம் அவன் ஃபோனுக்கு புதிதொரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அவர்கள் இருவரையும் தொந்தரவு செய்யாமல் விலகி வந்து அழைப்பை எடுத்தான் அவன்.

“ஹலோ”

“..”

“சொல்லுங்க..”

“..”

“யாருக்கும் தெரியாமலா… சரி உங்களை எங்க பார்க்கனும்?”

“..”

“ஓகே உடனே வரேன்..”குழப்பத்துடன் ஃபோனை வைத்தான் புகழ். தனக்கு ஃபோன் செய்தவர் யாரென யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் அதற்கான காரணத்தை தேட தயாராகினான் புகழ். மோகனிடம் பொய் காரணம் ஒன்றை சொல்லிவிட்டு அழைப்பு விடுத்த நபரைத் தேடிப் போனான் புகழ். அவன் யாழினியுடன் மனம் விட்டு பேசி சிரித்த கடைசி நாள் அதுவே!

திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நேர்ந்துகொண்டிருக்க, யாழினி முடிந்த அளவிற்கு தன் தந்தையுடனேயே நேரத்தை செலவழித்தாள். அவளின் மனநிலையை புரிந்து கொண்ட தமிழும் அவளை அதிகம் சோதிக்கவில்லை. தனது வீட்டிற்கு வந்தப்பின் அவளை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் அவன் சிந்தனையை செலுத்தினான்.

இதில் புகழ்தான் எந்நேரமும் வேலையாகவே இருந்தான். (இருப்பதாக காட்டிக் கொண்டானோ?). யாழினி ஏதாவது பேசினால் பதிலுக்கு சில வசனங்களை பேசிவிட்டு ஓடிவிடுவான். அவள் அதையே வாய்விட்டு கூறி குறைப்பட,

“ எல்லாம் உனக்காகத்தானே யாழீ..கொஞ்சம் பொறுத்துக்க மாட்டியா? நான் முன்ன பின்ன கல்யாணமும் பண்ணதில்லை,கல்யாணம் பண்ணியும் வெச்ச அனுபவம் இல்லை. சோ எதை எப்படி பண்ணனும்னு கவனமா ப்ளான் போடனும்ல? நான் எல்லாத்தையும் சரியா பார்த்துக்கிட்டா தானே அப்பாவும் கொஞ்சம் ரிலாக்ஸ்ட்டா இருப்பாரு?” என்று பேசி அவளின் வாயை அடைத்தான் புகழ்.

திருமணத்திற்கு மிக சில நாட்களே இருக்க, வரவே கூடாது என்று நினைத்த அந்நாளும் வந்தேவிட்டிருந்தது.

தூரத்து உறவினர் சிலருக்கு பத்திரிக்கை வைக்கும் வேலையாக தனது சொந்த ஊருக்கு போயிருந்தார் மோகன். எப்படியும் புகழ் யாழினியை பார்த்துக் கொள்வான் என்று நினைத்திருந்தார் அவர்.

புகழோ, யாழினியை பத்திரமாக இருக்க சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டான். முன்புபோல அவனிடம் வழக்காடவில்லை யாழினி. எல்லாவற்றிற்கும் பதில் இருக்கும் இவனிடத்தில் என்றெண்ணி விட்டுவிட்டாள்.

தனியாக பொழுதினை எப்படி போக்குவது என்று அவள் கவலைப்படும்போதே அவள் கல்லூரி தோழி ஃபோன் செய்திருந்தாள்.

“ஹேய் கல்யாண பொண்ணு..”

“சம்மு எப்படிடீ இருக்க? பத்திரிக்கை கிடைச்சதா? வருவதானே?”

“அதெல்லாம்கிடைச்சது டீ.. நமக்குள்ள என்ன பார்மாலிட்டிஸ்..கண்டிப்பா வரேன்.. அப்பறம் என்ன சொல்லுறார் உன் மாப்பிள்ளை?”என்று சமீரா வினவவும் முகத்தில் வெட்கம் பூசிக் கொள்ள, தமிழின் புராணத்தை இனிதே தொடக்கி வைத்தாள் யாழினி. அவளை நிறுத்தும் வழியறியாது “ம்ம்”கொட்டிக்கொண்டிருந்தாள் தோழியவள்!

ஒருவழியாக யாழினி அமைதியாகவும், சமீரா தான் ஃபோன் செய்ததற்கான காரணத்தை கூறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.