(Reading time: 16 - 32 minutes)

அவள் போட்டுக்கொண்டிருந்த ஆட்டத்திற்கான அறிகுறி, அவளின் முகத்தில் இல்லாமல் போனேதே அந்த ஈர்ப்பிற்கு காரணம். ஏனோ வேண்டாததை  செய்வதுப்போல் ஒரு தோற்றம். ஆனால் டான்ஸ் என்னவோ மிக நன்றாக ஆடிக்கொண்டிருந்தாள். அவளையே கவனிக்க ஆரம்பித்த ககனுக்கு, இப்பொழுதே அவளுடன் ஆடவேண்டும் என்று உணர்வு முதன் முறையாக தாக்க ஆரம்பித்தது. முழு வேகத்துடன். ஏனோ அவளிடம் மனதிற்கு நெருக்கமான உணர்வு தோன்றியதும்கூட.

சுற்றிய பூமியை ‘போதுமடா சாமி’ என்று விட்டுவிட்டு அவளுக்கு சற்று அருகில் சென்று ஆட ஆரம்பித்தான். உதய்யும் ககனுடன் இணைந்துக்கொண்டான், நடனத்தில்.

பக்கத்தில் இருந்த இன்னொரு பெண்ணின் காதில், ககனைக் கவர்ந்தவள் ஏதோ கூற, அந்த இன்னொரு பெண் மிக வேகமாக மண்டையை ஆட்டிவிட்டு, கூட்டத்திலிருந்து விலகி, இசைத்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி சென்றாள். இவர்களை அவள் கடந்துப் போகும்போது, உதய் அவனின் இயல்பான குணத்தில், “டியூட்.. மண்டையை மெதுவா ஆட்டு டியூட்.. சுலுக்கிக்க போகுது” என்று ஜாடையாக கிண்டல் அடித்தான். அவனின் கிண்டல் புரிந்ததுபோல், அந்தப் பெண் இவனை பயங்கரமாக முறைத்துவிட்டு, அவ்வளவு பெரிய இடத்தில், அவளுக்கு மட்டும் இடமே இல்லாததுபோல், உதய்யை நெருங்கி, அவனின் காலில் தெரியாமல் செய்வது போல், ஷூ காலால் மிதித்துவிட்டு சென்றாள்.

“ஆ.................ஆ........” என்று உதய் அலறிய அலறலில் அனைவரும் அவனை விநோதமாக பார்க்க... ககன் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தான். அப்படியே அலறிக்கொண்டே அப்பெண்ணின் பின்னால் சென்றான், உதய். அந்த முதல் பெண்ணின் அருகிலேயே இவர்கள் நின்றுகொண்டிருந்ததால், இவை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தாள். அவளின் முகத்தில், முறைப்புடன் கூடிய சிரிப்பு.. சிரித்துகொண்டே ககனின் பக்கம் திரும்பிய அந்தப் பெண், அவனின் சத்தம் இல்லாத, ஆனால் முகம் முழுவதும் மலர்ந்து அவன் சிரித்ததில் ஈர்க்கப்பட்டு, தன்னை மறந்து அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள்.

எதேச்சையாக அவளை கவனித்த ககனின் முகத்தில் இருந்த சிரிப்பு, ரசனையான புன்னகையாக மாறியது. அதையும் கண் கொட்டாமல் ரசித்தாள் அந்தப்பெண், தன்னையே அறியாமல். இருவரும் சற்று நேரம் தங்களை மறந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.    

ஒருவழியாக இவர்களின் கவனத்தை திருப்பியவள், அவளுடன் இருந்தப்பெண். கைகளில் ஸ்ட்ராபெர்ரியைப் போல் இருந்த ஒரு சின்ன கேக்குடன், முகமெங்கும் புன்னகையேந்தி நின்றிருந்தாள்.

“ஹாப்பி பர்த்டே தாரா செல்லலாம். லவ் யூ” என்று கூறி, அந்த தாராவின் கன்னத்தில் முத்தமிட்டு, கேக் வெட்ட சொன்னாள். “தங்க்யூ காவீ” என்று பதிலுக்கு முத்தமிட்டு, சுற்றி இருந்தோர் அனைவரும் கைதட்ட, அழகான புன்னகையுடன் நன்றி தெரிவித்தாள், தாரா என்று அழைக்கப்பட்டவள்.

இதை இனிய அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த ககனுக்கு, சொல்லவும் வாழ்த்தவும் வார்தகை வரவில்லை.

‘மை பெஸ்ட் விஷேஸ், தாரா’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதே, உதய் வந்து ககனின் தோளில் தட்டினான். இவன் திரும்பிப்பார்த்தால், உதய்யின் கையிலும் ஒரு சின்ன கேக். சாக்லேட் நிறத்தில் அமைந்த மேடை மீது, சாக்லேடால் செய்யப்பட்ட, ககனின் மிகவும் விருப்பமான ‘Harley-Davidson’ வண்டியின் பொம்மை.

இப்பொழுது மிகுந்த ஆச்சர்யத்துடன் உதய்யை நோக்கிய ககனின் கண்களில், நிஜமான சந்தோஷம். பதிலுக்கு கட்டி அணைத்து, வாழ்த்து தெரிவித்தான், உதய். “ஹாப்பி பர்த்டே, டியூட்” என்றவாறு. ஏனோ ஒரு முறை ககனின் பார்வை, அந்தப் பெண் மீது சென்றுவந்தது. “நம் இருவருக்கும் ஒரே நாளில் தான் பிறந்தநாள்..!” என்ற அர்த்தத்துடன். அதை அவளின் பார்வையும் ஆமோதித்ததோ..?!

பின், அதே சந்தோஷத்துடன் ககனும் கேக் வெட்டி முடித்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு அந்தப் பெண்ணை கண்களால் தேட... பார்வையில் அகப்படுவேனா என்று ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தாள்.

தற்கிடையில், காலில் மிதி வாங்கியதால் ஓரமாக ஒதுங்கிய உதய், மிதித்த அந்தப் பெண் இசைக்குழுவின் பக்கம் செல்வதைப் பார்த்து, அவளின் பின்னாலேயே சென்றான்.

அவர்களிடம் அவள், “can you play some Tamil song?! And As I spoke with you already, please play birthday song, when I’m giving cake to her” என்று கூறிக் கொண்டிருந்தாள்.

பின்னாடியே வந்த உதய்யும், “yes.. Please play the birthday song when I’m giving him cake” என்றான்.

ஏற்கனவே உதய்யின் மீது கடுப்பில் இருந்த காவ்யாவிற்கு, இப்பொழுது இன்னும் கோபம் வந்தது.

“ஹே மிஸ்டர். என்ன வேணும் உனக்கு? எதுக்கு என் பின்னாடியே வந்து, நான் சொன்னதையே சொல்ற? என்ன திமிரா??” என்று ஏகக் கடுப்புடன் தமிழில் கேட்டவுடன், உதய் தன்னை அறியாமல் தனது கால்களை பார்த்துக்கொண்டான்.

“ஓ... நீங்க தமிழா..?!” என்று அசடு வழிந்தவாறு...!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.