(Reading time: 19 - 37 minutes)

“ஆமாம் கண்ணு.. ரெண்டு நாள் வெளியிலே சாப்பிடறது உடம்புக்கு ஒவ்வுமா.. முடிஞ்ச வரைக்கும் நாம ஒரு வேளை எடுதுகிட்டோம்னா மேலுக்கும் நல்லது. செலவும் ஆகாது.. உனக்கு என்ன வேணும்னு சொல்லுமா..”

“அம்மா ..எனக்காக நீ கஷ்டபடாத.. தயிர் சாதம் பிசைஞ்சு கொடுத்தாலும் போதும்..”

“உனக்கு செய்யாம யாருக்கு செய்யபோறேன்... “ என்றபடி சமையல் கட்டு பக்கம் சென்றார்.

மலரும் மற்ற வேலை எல்லாம் முடித்து விட்டு, ஆச்சியிடம் கொஞ்ச நேரம் உட்கார்ந்து வம்பளந்தாள்.. அதில் அவர் முகம் கொஞ்சம் தெளிந்து இருந்தது.

நாலு மணிக்கு மேல் அவள் குளித்து விட்டு, பயணத்திற்கு இலகுவாக சுடிதாரில் வந்தாள்.

அப்போது அவள் அப்பாவும் வந்து விட, மாலை காபி முடித்து விட்டு கிளம்புவதை பற்றி பேசிக் கொண்டு இருந்தாள்.

மேலிருந்து டூர் கொண்டு போகும் பையை எடுத்து வந்து ஹாலில் வைக்க, அவள் அம்மாவும் கிட்டத்தட்ட ஒரு மீடியம் சைஸ் ட்ராவல் பாக் எடுத்து வந்தார்.

“அம்மா.. என்ன இது.. ? நான் என் ஒருத்திக்கு தான் சாப்பாடு கேட்டேன்.. ஊருக்கு போற வழி எல்லாம் கொடுக்க சாப்பாடு ரெடி பண்ணி வச்சு இருக்க..?”

“அவ்ளோ எல்லாம் இல்லை மலரு.. ஒரு ஐஞ்சு பாக்கெட் புளிசாதம், தயிர் சாதம் வச்சுருக்கேன்.. அதோட ஒரு இருபது  இட்லி நாலு நாலா பொடி வச்சு இலையிலே கட்டி வச்சு இருக்கேன்.. “

“அம்மா.. நான் என்ன நாலு இட்லி ஒரு கரண்டி சாதம் சாப்பிடுவேன் .. எதுக்கு இவ்ளோ கட்டி வச்சுருக்க..?”

“நீ ஒண்டியா போறியா என்ன?.. ஒருத்தருக்கு ஒருத்தர் கொடுத்து சாப்பிட்டா வயிறும் நிறையும்.. சந்தோஷமும் வரும்.. அதான் உன்னோட சேர்ந்து ரெண்டு மூணு பேர் சாப்பிடுற மாதிரி செஞ்சேன்..”

“அது சரி.. அத தவிர கவர் கவரா வச்சுருக்கீங்க.. ?”

“அதுவா.. ஆச்சிக்காக வீட்டிலே கொஞ்சம் முறுக்கு, சேவு எல்லாம் செஞ்சுருந்தேன்.. எல்லோரும் வழியிலே பேசிட்டு போவீங்க.. எந்நேரம் பசிக்கும்ன்னு சொல்ல முடியாது.. அப்போ அப்போ கொஞ்சம் இத சாப்பிட்டா பசி தாங்கும்...”

“ஆச்சிக்கு செஞ்சது ஏம்மா வச்சீங்க.. அவுகளுக்கு வச்சுக்கலாமே.. அப்படி வேணும்னா நா போற வழியிலே கடையில் வாங்கிக்க மாட்டேனா?”

“வீட்டிலே இருக்கும்போது ஏண்டா வெளியில் வாங்கணும்.. ஆச்சிக்கு நாளைக்கே செஞ்சிட்டா போச்சு ?”

ஆச்சி இடை புகுந்து “அது எல்லாம் உங்காத்தா எனக்கு வேற செஞ்சு தருவா.. அத விட வேறே என்ன வேலை அவளுக்கு.. ? நீ எடுத்துட்டு போம்மா.. “ என

அவள் அம்மாவோ “ஏன். .நாஞ் செய்யாம , யாரு செய்யுதா இந்த வீட்டிலே.. உங்க மவன் வந்து செய்யுரரோ ?”

“என் மவன் ஏன் செய்யுதான்.. ? அவன் ராசா .. உன்னாலே முடியலேனா நான் செய்யுதேன்.. “

“ஆமாமா.. பெரிய சோழ மகாராஜா... “

“நீ  சொன்னாலும் சொல்லாட்டியும் அவம் ராசாதான்..”

இவர்களின் வழக்கை கேட்டு கொண்டு இருந்த வேலன்..

“ரெண்டு பேரும் சண்டைய நிறுத்தறீங்களா.. புள்ள ஊருக்கு கிளம்பற நேரத்திலே உங்க ராமாயணத்த ஆரம்பிக்கனுமா..?” என

சட்டென்று அடங்கியவர்களாக

“மலரு .. விளக்கு மாடத்துகிட்ட வா தாயி... திருநீறு..பூசி விடுதேன்... “ ஆச்சி அழைத்தார்.

மலர் அருகே வரவும் , “குமரா.. புள்ளைய நீதான் பார்த்துகிடனும்.. “ என்று வேண்டியபடி விபூதி வைத்து விட்டார்.

“ஆச்சி. நீ கவலைபடாதே.. பத்திரமா போயிட்டு வரேன்.. சரியா..” என்றபடி கிளம்பினாள். 

தன் அம்மாவிடமும் விடை பெற்றுக் கொண்டவள், அப்பாவோடு காரில் ஏறி சென்றாள்.

வீட்டில் செழியன் அப்பா, அம்மாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப, அவன் அம்மா

“செழியா.. இதிலே சப்பாத்தியும் தக்காளி தொக்கும் வச்சு இருக்கேன்.. உனக்கும் செந்திலுக்கும் இருக்கு. கூட ரெண்டு பேத்துக்கும் இருக்கும்.. எடுத்துக்கோ..”

“ஏம்மா.. அவனுக்கு கல்யாணம் ஆயிட்டுது ..மறந்து போச்சா.. அவனுக்கு சேர்த்து கொடுக்க.. அவம் பொண்டாட்டி .. என்னை ஏசவா?”

“எலேய்.. அது எங்களுக்கும் தெரியும்.. அவம் பொஞ்ஜாதிகிட்டே பேசிட்டு தான் குடுத்து விடுதேன்.. அதுவும் அவளுக்கும் சேர்த்துதான் புரியுதா.. அவ ஏதோ பிரிஞ்சி சாதமாட்டம் எடுத்துட்டு வாரளாம்.. அதையும் , இதையும் சேர்த்து எல்லாரும் சாப்பிடுங்க..”

“ஏதோ.. என்னை திட்டாம இருந்தா சரி..” என்றபடி கிளம்பியவன், அவன் அப்பாவிடம் வர,

அவர்கள் வீட்டில் எல்லா அறையிலும், ஹாலிலும், ஒரு விபூதி பாத்திரம் இருக்கும். பார்த்தவுடனே தெரியும் படியும் இருக்கும்.

ஹாலில் டெலிபோன் ஸ்டான்ட் அடியில் இருக்கும் கிண்ணத்தில் இருந்து விபூதி எடுத்து, செழியன் நெற்றியில் பூசி விட்டார்.

“நல்ல படியா போயிட்டு வா..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.