(Reading time: 16 - 31 minutes)

‘நான் கிரிக்கெட் விட்டுடலாம்னு இருக்கேன்...’ தட்டை பார்த்துக்கொண்டே மெல்ல சொன்னான் ரகு.

‘அய்யோ... ஏன் அண்ணா?’ அவனது தங்கை பாய்ந்து வர

‘எல்லாரும் சந்தோஷமா இருக்கத்தான். எனக்கு கிரிக்கெட் விட எல்லார் சந்தோஷமும் முக்கியம். அடுத்து ஐ.பி.எல் ஆக்ஷன் வருது. நான் அட்டென்ட் பண்ண போறதில்லை’ உறுதியாக சொன்னான் ரகு. எல்லார் பார்வையும் ஒரே நேரத்தில் ஸ்வேதாவை தொட சற்றே திகைத்துப்போனாள் அவள்.

அறிவிப்பதை அறிவித்து விட்டு எதுவுமே நடவாதது போல் தட்டை பார்த்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான் அவன்.

‘ரகு சொன்னா சரியாத்தான் இருக்கும்...’ இது அவன் அம்மா. ‘நீயும் அவன் பக்கத்திலே உட்கார்ந்து சாப்பிடுமா’ ஸ்வேதாவை பார்த்து சின்னதாய் ஒரு ஆணை போல் சொன்னார் அவர். மெதுவாய் அவனருகில் வந்து அமர்ந்தாள் ஸ்வேதா. மெலிதாய் ஒரு புன்னகை எழுந்தது ரகுவின் முகத்தில்.

பேசாமல் சாப்பிட்டுவிட்டு எப்படியும் தன்னருகில் வருவாள் என்ற நம்பிக்கையுடன் தண்ணீர் மோட்டரை  இயக்கி  விட்டு கையில் பைப்புடன் அங்கே தோட்டத்தில் இருந்த செடிகளுக்கு நீர் பாய்ச்ச ஆரம்பித்தான் ரகு.  நினைத்தபடியே அவனருகில் வந்து நின்றாள் பெண்.

திருமணம் ஆன நாள் முதலாய் அவனருகில் இப்படி எல்லாம் அவள் வந்து நின்றதில்லைதான். அவனை பார்த்த நிமிடம் முதல் ஏதோ ஒரு இறுக்கம் அவள் மனதிற்குள்ளாக. மணமேடையில் அவனருகில்  நின்றபோது கூட அனுபவித்துவிடாத அந்த சந்தோஷத்தை இப்போது உணர்ந்தாள் அவள்.

சுயநலம்தான். சுயநலமாகத்தான் நான் யோசிக்கிறேன்.’ நன்றாக புரிந்தது அவளுக்கு. அவனிடம் பேசிவிட அளவில்லா தயக்கம், உள்ளுக்குள் அழுத்தும் வெளியே சொல்ல முடியாத பாரம், அதனிடையே கீறி விளையாடும் குற்ற உணர்ச்சி  என எல்லாமுமாக சேர்ந்து உருவாக்கிய சிலையாய் நின்றிருந்தாள் ஸ்வேதா.

வாழ்க்கையில் முதல் முறையாக அவனை விழிகளால் அளந்தாள் அவள். பெரிய ஆண் அழகன் இல்லை என்றாலும் அடுத்தவர்களை பிடித்து தனது பக்கம் இழுக்கும் விழிகளும், கூர் நாசியும், திருத்தமான முகமுமாய் ரகு.  அவள் அருகில் வந்ததை கவனிக்காதவன் போல் பூஞ்சாரலாய் இலைகளையும், மலர்களையும் குளிர்வித்துக்கொண்டிருந்தான் ரகு.

உள்ளுக்குள் அடங்கிப்போயிருந்த குரலை கஷ்டப்பட்டு  திரட்டி சொன்னாள் ஸ்வேதா ‘சாரி’

‘ம்?’ திரும்பினான் ரகு.

‘இல்ல... சாரின்னு சொன்னேன். இதை சொல்றதிலே எதுவும் அர்த்தம் இருக்கான்னு தெரியலை. என் மனசிலே இருக்கிறது எல்லாம் எப்படி உங்களுக்கு புரியவைக்கன்னு தெரியலை...’ அவள் வார்த்தைகளை தேடித்தேடி கோர்க்க, அது எதுவும் இப்போது கேட்க விருப்பமில்லாதவன் போல்

‘இப்போ என் பொண்டாட்டியை மறுபடியும் குளிக்க வெச்சிடலாமா?’ கையிலிருந்த பைப்பை அவள் பக்கம் திருப்பி அவளை நனைக்க ஆரம்பித்தான் ரகு. 

‘ஹேய்.... வேண்டாம்..யாரவது பார்க்க போறாங்க .’ அவள் ஓட இவன் துரத்த அங்கே சட்டென இலகுவானது சூழ்நிலை. சில நிமிடங்கள் விளையாடி  ஓய்ந்து அவள் உடை மாற்றி வந்த பிறகு மெல்ல கேட்டான் ரகு

‘நைட் ராஜ்பவன்லே டின்னர் இருக்கு. நாளைக்கு சி.எம் ப்ரோக்ராம் அது ரெண்டுக்கும் நீ என் கூட வருவியா ஸ்வேதா? அதோட கிரிக்கெட் விட்டுடுவேன் கண்டிப்பா’

கிளம்பலாமாபா?’ மாலையில் கோட் சூட் சகிதம் தயாரான மகனை சந்தோஷம் பொங்க பார்த்திருந்தார் சுவாமிநாதன்.

கவர்னர் மாளிகையில் விருந்து.  மகனுடன் நடந்தார் தந்தை. வந்திருந்த வீரர்களுக்கு  பூங்கொத்துடன் கூடிய வரவேற்பு நிகழ்ந்தது.  ஆளுநர் வந்து எல்லா வீரர்களையும் வரவேற்றார். ஹரிஷ் இறுதி ஆட்டத்தில் ஆடிய விதத்தை அவனிடம் கைகுலுக்கி தனிப்பட்ட முறையில் பாராட்டிக்கொண்டிருந்தார் அவர்.

அவருடன் பேசிய படியே அவ்வப்போது  அப்பாவின் முகத்தில் விரியும் பெருமை பூக்களையே ரசித்திருந்தான் இவன். சில வருடங்கள் முன்னால் இவனுக்காக மற்றவர்கள் முன்னால் கண்ணீருடன் கை கூப்பி கெஞ்சியவரை இன்று தலை நிமர்த்தி நிற்க வைத்திருக்கிறான்.

மிகப்பெரிய சாதனையை, இலக்கை தொட்டுவிட்ட நிம்மதி பிறந்தது அவனுக்கு. இனி எந்த நிலையிலும் அவருக்கு தலைகுனிவு மட்டும் வந்து விடக்கூடாது என்ற உறுதி மட்டும் அவனுக்குள் வேரூன்றி இருந்தது.

ஸ்வேதாவுடன் வந்திருந்தான் ரகு. ஆளுநர் மாளிகையும் அந்த பிரம்மாண்டமும்,, மிளிர்வும் அழகும் ஸ்வேதாவை கொஞ்சம் பிரமிப்பில் ஆழ்த்தி இருந்தது. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் நீதிபதிகள், மாவட்ட ஆட்சியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட மிகப்பெரிய விருந்தாகவே இருந்தது அது.

மனம் தாலாட்டும் இசை அங்கே மெலிதாக ஒலித்துக்கொண்டிருக்க எல்லாருக்கும் ஸ்வேதாவை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தான் ரகு.

எல்லாரும் அவனிடம் பேசிய விதத்திலிருந்தே, அவன் எல்லாரிடமும்  சம்பாதித்து வைத்திருக்கும் மரியாதையை அவளால் உணர முடிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.