(Reading time: 17 - 33 minutes)

23. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது

Thudikkum ithayam unathe unathu

செயற்கையாய் இதயத்தை துடிக்கச் செய்யும் பேஸ்மேக்கர் என்னும் கருவியை வில்சன் கிரேட்பேட்ச் என்னும் எஞ்சினீர் கண்டுபிடித்தார்

ன்னும் ஒரே ஒரு வாய் தான். என் செல்லம்ல என் பட்டுல இது மட்டும் சாப்பிடுவியாம்” கணேஷ் ராம் வர்ஷினியை கெஞ்சிக் கொண்டிருந்தான்.

“வேண்டாம் ராம். ப்ளீஸ். எனக்கு உமட்டுது” என்றவள் வாஷ் பேசின் நோக்கி ஓடினாள்.

அவளைத் தாங்கிப் பிடித்து உதவி செய்து சோபாவில் சாய்வாக அமர வைத்தவன் நேராக சென்று அவனது அன்னையை எழுப்பி விட்டான்.

“என்னடா இந்நேரத்தில்..” சுமித்ரா மகனைப் பார்த்துக் கேட்டார்.

“அம்மா மணி பத்து தான் ஆகுது” சலிப்பாக சொன்னான் மைந்தன்.

“அது சரி எங்களுக்கென்ன இளமையா ஊஞ்சலாடுது. இந்த வயசில் நேரத்துக்கு சாப்பிட்டு நேரத்துக்கு படுத்து எழுந்தா தான் ஆரோக்கியமா இருக்க முடியும்” அவர் விளக்கங்கள் கூற நிலைகொள்ளாமல் குறுகிட்டான்.

“சரி சரி...நீங்க மொதல்ல வந்து அர்ஷுக்கு ஏதாச்சும் பண்ணுங்க. ஒரு வாய் கூட அவளால சாப்பிட முடியல. எல்லாமே வெளி வந்திடுது. ரொம்ப டயர்ட் ஆகிட்டா”

“ஈஸ்வரா!!! அவளே தேவலாம் போல. நீ பண்ற அலம்பல் இருக்கே” மகனின் காதைப் பிடித்து திருகியவர் அவனையும் இழுத்துக் கொண்டு சமையல் அறை சென்று பாலைச் சுட வைத்து சிறிது குங்குமப் பூவை கலந்து எடுத்துக் கொண்டு மாடி அறைக்குச் சென்றார்.

“அம்மு. எழுந்திரு இந்தா இந்த பாலைக் குடி” சற்றே அதட்டலாக கூறினார்.

வர்ஷினியோ வேண்டாம் என்பது போல ராமைப் பார்த்தாள்.

“அங்க என்ன பார்வை” என்று மீண்டும் ஓர் அதட்டல் போட்டாலும் அவளை மெல்ல தன் தோளோடு சாய்த்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பாலைப் புகட்டினார்.

“கொஞ்ச நேரம் மெல்ல நடந்துட்டு அப்புறமா தூங்கணும் சரியா” என சுமித்ரா கூற சரி என்பதாய் தலையை ஆட்டினாள்.

வர்ஷினி கணேஷ் ராம் திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஓடி விட்டிருந்தன.

இரண்டு வருடங்கள் முன்பு ராமை தேடி வந்த வர்ஷினி அவனிடன் வேண்டிக் கொண்டது.

“ராம் நாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா. சின்னதா ஒரு ரிஷப்ஷன் மட்டும் வச்சுக்கலாமா. இந்த நிச்சயதார்த்தம் கல்யாணம் சடங்கு சம்ப்ரதாயம் எல்லாம் வேண்டாமே”

“ஏன்டா அர்ஷுமா. வருண் காயத்ரி மேரேஜ் கூட எல்லாத்தையும் நீ தான் பார்த்து பார்த்து செய்தாய்” அவள் ஏன் அவ்வாறு கூறுகிறாள் என்று புரியவில்லை அவனுக்கும்.

“அது வந்து ராம்.... வருண் அண்ணா நிச்சயதார்த்தம் அப்புறம் மேரேஜ்ல அத்தை மாமா பேர் போட்டு பத்திரிக்கை எல்லாம் வாசிச்சாங்களே”

“ஆமா அப்படி தான் செய்வாங்க”

“அப்போ எனக்கு என்னோட அம்மா அப்பா பேர் சொல்வாங்களே ராம். அவங்க பேர் பத்திரிக்கையில் போடுவாங்க. இன்னாருடைய மகள்ன்னு தானே என்னை சொல்வாங்க. என் மாமாவோட மருமகள்ன்னு சொல்ல மாட்டாங்களே”

அவள் இதைக் கூறும் போது அவளது குரல் உடைந்து கண்ணில் நீர் ப்ரவாகம் கிளம்பியது.

அவளை தன்னோடு மெல்ல அணைத்துக் கொண்டான் ராம். அவன் ஏதும் பேசவில்லை. அவள் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டி விட வேண்டும் என்றே அவனும் நினைத்தான்.

“ராம் என் அப்பா ஏன் ராம் என்னை விட்டுட்டு போய்ட்டார். நான் தான் அம்மாவை கொன்னுட்டேன் அப்படின்னு தானே. அவருக்கு என் மேல பாசமே  இல்லையா ராம். நான் எத்தனை நாள் அழுதிருக்கேன் தெரியுமா. அம்மாவோட போட்டோ என் கிட்ட இருக்கு. ஆனா என் அப்பா எப்படி இருப்பாருன்னு கூட எனக்கு தெரியாது ராம்”

விசும்பிக் கொண்டே அவள் அரற்றிக் கொண்டிருந்தாள்.

“இதெல்லாம் மாமா அத்தை வருண் அண்ணா கிட்ட சொன்னா அவங்க என் மேல வச்சிருக்கும் அன்பில் ஏதோ குறை இருக்குன்னு வருத்தப்படுவாங்க. வேற ஒருத்தர் கிட்டேயும் என்னால சொல்ல முடியல. என் அப்பாவை தப்பா பேசுவாங்களே”

தந்தை என்பவரை அவள் அறிந்திருக்கவில்லை. அவரை முழுவதுமாக வெறுத்தாள். இருப்பினும் வேறொருவர் குற்றமோ குறையோ சொல்லிவிட்டால் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது.

 ‘நான் இருக்கிறேன் உனக்கு உன் மனதின் பாரங்களை என் தோள்களில் இறக்கிவிடு’ என்று உணர்த்துவதைப் போல அவளது தலையை மெல்ல வருடி அவனது மார்போடு இறுக அணைத்துக் கொண்டான்.

“ராம் என்னால மாமாகிட்ட இதையெல்லாம் சொல்ல முடியாது ராம். எனக்கு என் அப்பா பேர் நம்ம கல்யாணத்தில் வேண்டாம் ராம். உங்களை நான் பிரிந்து உங்களை கஷ்டபடுத்தியது எல்லாவற்றிற்கும் காரணம் அவர் தான். நீங்க எப்படியாவது சொல்லி ரெஜிஸ்டர் மேரேஜ்க்கு ஓகே சொல்ல வைங்க” அவள் சொல்ல மறுக்கமால் பொறுப்பை தனதாக்கிக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.