(Reading time: 18 - 36 minutes)

“ஹ்ம்ம்.. இப்படி குதர்க்கமாவே பதில் சொன்னா உன் கேள்விக்கும் பதில் கிடைக்காது.. அது மட்டும் இல்ல.. இது சென்சிடிவ் விஷயம்..நீ நம்பினால் சரிதான். நம்பலன்னா எங்களை தானே லூசு மாதிரி பார்ப்பநீ?”

“இப்போ என்ன இந்த வீட்டுல பேய் இருக்குனு சொல்ல போறீங்க..அதுதானே?”

“ச்ச ச்சா..ஆத்மாக்கள் இருக்குனு சொல்லுறோம்”

“ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு?”

“நிறைய இருக்கு..பேய் என்கிறது வாழனும்னு ஆசையை நிறைவாமலோ, இல்ல பழிவாங்குறநோக்கத்துடனோ அழையுறது.. ஆனா ஆத்மாங்குறது சராசரி மனுஷனின் உடலென்ற கூடை விட்டு பிரியும் ஒருவிஷயம்”என்று அழகாய் விளக்கம் தர ஆரம்பித்தான் கதிரவன்.

“இன்னைக்குதான்டா நீ ஒரு ரைட்டர்னு என்னை நம்ப வெச்சுருக்க” என்று தானே சொல்லி தானே சிரித்தவனாக கார்கி இருக்க மற்ற மூவருமே பாரபட்பசமின்றி அவனைப்பார்த்து முறைத்தனர். இடைவெளிவிட்டு பேசினால் தாங்கள் சொல்வதை பொய்யென நினைப்பாளோஎன்ற எண்ணத்தில் கார்முகிலனை அடக்கிவிட்டு கதிரவன் தொடர்ந்து பேசினான்.

“நாங்க இங்க வந்த கொஞ்ச நாளில் நிறைய வித்தியாசமான விஷயங்கள் நடக்கும்..அழுவுற சத்தம் கேட்கும், பாத்திரம் உருண்டு கிடக்கும், நாங்க மூணு பேரும் வீட்டுக்குள்ள ஒன்னா இருக்கும்போதே எங்களில் ஒருத்தன் வெளில நிக்கிற மாதிரி உருவம் தெரியும்..” என்றவன் லீலாவின் முகத்தைப் பார்த்தான். அவள் தன் பேச்சை நம்புகிறாளா இல்லையா? என்பதனை அவனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து பேசினான்.

“முதல்ல இதெல்லாம் பொய்னு விட்டுட்டோம்.. ஏன்னா எல்லா நாளும் இப்படி நடக்காது.. எப்பவாச்சும்தான் நடக்கும்.. நாளாக ஆகத்தான் பின்னாடி கடற்கரை பக்கமா யாராச்சும் அஸ்தியை கரைக்கிற நாளில் இப்படி இங்க உள்ளவங்க வீட்டில் நடக்கும்னு அக்கம் பக்கம் உள்ளவங்க சொல்லி தெரிஞ்சுக்கிட்டோம்.. அவங்க பண்ண மாதிரியே நம்ம வீட்டுலயும் பூஜை எல்லாம் பண்ணினொம்.. அதுக்கு அப்பறம் பிரச்சனைகள் கம்மித்தான். இதுவரைக்கும் எங்களுக்குனு எந்த ஆபத்தும் வந்தது இல்லை” என்றான் கதிரவன்.

“நாங்க ரொம்ப ஆசைப்பட்டு வாழனும்னு வந்த இடம் இது.. பேயே வந்தாலும், அதுக்கும் ஒரு இடம் கொடுத்துட்டு கெத்த இருப்போம்” என்று மீண்டும் கார்கி வசனம் பேச ஏதோ பாத்திரம் விழும் ஓசைக் கேட்டது. நால்வருக்குமே சட்டென தூக்கி வாரிப் போட்டது

“என்ன லீலா, இப்பவும்  நீ எதையுமே நம்பலயா?” என்று கார்கி இப்போது ஆயாசமாக கேட்க,

“கண்ணுக்கு தெரியுற மனுஷங்களை விட, கண்ணுக்கு தெரியாத பேயை நம்பிடலாம்னு உணர்ந்தவ நான்.. சோ எதை நம்புறேன்.. நம்பலனு இப்போதைக்கு சொல்ற மாதிரி இல்லை..”

“நீ சொல்லலனாலும் பரவால.. பத்திரமா உன்னை பார்த்துக்கோ போதும்” என்று பிரபஞ்சன் . அவன் பேச்சில் சமாதானம் கலந்த அக்கறை உறைந்திருப்பது போல உணர்ந்தவள், அவனை ஒரு மாதிரியாக பார்த்து வைத்தாள்.

“சரி, என் விஷயத்துல மூணு பேரும் ஏதோ முடிவு எடுத்திருக்குறதா சொன்னீங்களே என்ன அது?”

கார்முகிலன், கதிரவன் இருவருமே பிரபஞ்சனைப் பார்க்க அவனே வாய்திறந்தான்.

“எங்களை எப்படி நீ நம்பலயோ அந்த மாதிரி எனக்கும் உன் மேல சந்தேகம் இருந்துச்சு..” என்று அவன் ஆரம்பிக்கவும் விழிகளை உருட்டினாள்,லீலா.

அதை கண்டும் காணாதவன்போல பேசினான் பிரபா.

“அதனாலத்தான், உன்னை பத்தி தெரிஞ்ச டீட்டைல் வெச்சு விசாரிச்சேன்..நீ சொன்னது சரிதான் ..உன் தங்கச்சிக்கும் அந்த மாப்பிள்ளைகும் கல்யாணம் நடந்துருச்சு..” என்றதும்

“குட்டி..மா” என்று வாயசைத்தாள் லீலா.அவள் தனது தங்கை பிரியதர்ஷினியை அப்படித்தான் அழைப்பாள். எவ்வளவு வளர்ந்திருந்தாலும், தர்ஷினி லீலாவுக்கு மகள்போலத்தான். அதனாலேயே அவளை குட்டிமா என்று அழைப்பாள்.

“என் குட்டிமா கூடகல்யாணம் பண்ணிட்டா.. பெரிய மனுஷித்தான்” என்று பாசத்தில் அவள் மனம் பொங்கி கூத்தாடியது. தர்ஷினியை அணைத்து வாழ்த்துசொல்ல ஆசை வந்தது.நின்று போனது தனக்கு நடக்கவேண்டிய திருமணம் என்ற கவலையையும்மீறி உதித்த சந்தோஷம் அது.

“வேறேன்ன தெரிய வந்துச்சு..அப்பாஅம்மா நல்லா இருக்காங்களா?” தவிப்புடன் கேட்டாள் லீலா.

“சரியா தெரியல.. ரிசப்ஷனை கேன்சல் பண்ணிட்டாங்களாம்.கல்யாணம் முடிஞ்சதுமே ஊருக்கு கிளம்பிட்ட்தா செய்தி.. உன் பெர்மிஷன் இல்லாமல் அதிகமா விசாரிக்க மனசு வரல” என்றான் பிரபஞ்சன். முதலில் தன்னை சந்தேகப்பட்டதற்காக அவனை முறைத்தவள்,இப்போது ஏன் அறைகுறையான தகவலை சொல்கின்றான் என்ற கடுப்பில் முறைத்தாள்.

“ஹ்ம்ம் என் கதையையே மாத்தி அமைச்சிட்டு இப்போ இப்படி நடந்துக்குறீங்க மூணு பேரும்? இப்படி பண்ணினா மட்டும் என் மனசு ஆறிடுமா? ”என்று பெருமூச்சு விட்டவள்,

“மேல சொல்லுங்க..” என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.