(Reading time: 23 - 45 minutes)

போர்டிங்கான அறிவிப்பு ஒலிப்பரப்பாகி கொண்டிருந்தது. பையில் உள்ள விஷப் பாட்டிலை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டாள் சுடர்.. சிறிது நேரம் கழித்து ரெஸ்ட் ரூம் சென்று, தான் செய்ய நினைத்ததை செயலாக்கும் எண்ணத்தோடு அமர்ந்திருந்தாள். அங்கு மகிழ்வேந்தனோ சாலையில் தன் வாகனத்தை வேகமாக இயக்கியப்படி வந்துக் கொண்டிருந்தான். சுடர் ஃப்ளைட் ஏறிடக் கூடாது.. அவளை நான் லண்டனுக்கு போகவிடமாட்டேன் என்று மனதில் நினைத்தப்படியே பயணித்தான். வழியில் சிக்னலுக்காக வண்டியை நிறுத்தும்போதெல்லாம் என்னவோ சில நிமிடங்கள் கூட மணி நேரமாக நீண்டது அவனுக்கு.. விமானநிலையத்தில் இருந்த சுடரொளிக்கும் அதேபோல் தான் நேரம் மெதுவாக நகர்வது போல் இருந்தது.

 வேகமாக வண்டியை விமான நிலையத்திற்கு கொண்டு வந்தவன், அறிவழகனிடம் பார்க் பண்ண சொல்லிவிட்டு, உள்ளே நுழைவதற்கான அனுமதி சீட்டோடு வேகமாக விமான நிலையத்திற்குள் வந்தான். சுடரொளி தென்படுகிறாளா? என்று பார்வையிலேயே தேடினான். 

சுடரொளியோ சில மணித் துளிகளை கடினப்பட்டு கடந்தவள், தன் கைப்பையை மட்டும் எடுத்துக் கொண்டு தன் அருகில் அமர்ந்திருந்தவரிடம் தன்னுடைய உடைமைகளை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு எழுந்தாள். அந்த நேரம் அவளை தேடிக் கொண்டிருந்தவனின் விழிகளில் அவள் தென்பட்டாள். இன்னும் சுடர் விமானம் ஏறவில்லை என்பதில் மகி நிம்மதியடைந்தான்.

சுடரொளியோ மகியின் வருகையை உணராமல், மனதை சில நொடிகள் திடப்படுத்தியவளாக ரெஸ்ட்ரூம் செல்ல அந்த திசை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்த போது, “சுடர்..” என்ற மகிழ்வேந்தனின் குரலில் அதிர்ந்து நின்றாள்.

ஒருவேளை மகிழின் குரல் கேட்டது பிரம்மையோ என நினைத்து அவன் குரல் கேட்ட திசையை பார்க்க, உண்மையிலேயே அவன் தான் நின்றிருந்தான். கையை ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். “எனக்காக மகிழ் வந்துவிட்டானா? என்னை தேடி வந்தானா? என்னை அழைத்துப் போக வந்தானா?” மனதிற்குள்ளேயே கேள்விகள் கேட்டப்படி, அதே நேரம் முகத்தில் சிறு புன்னகையும், அதன் பிரதிபலிப்பாய் கண்களில் ஆனந்தத்தில் வந்த கண்ணீர் துளிகளுமாய், அவன் பக்கமாக ஒரு அடி எடுத்து வைக்க, அந்த நேரம் அவன் அலைபேசியில் பேசிய வார்த்தைகள் அவளுக்கு ஞாபகம் வந்தது. அடுத்த நொடி அவள் மகிழ்ச்சி முற்றிலும் மாயமாகி, “இப்போது எதற்கு வந்தான்?” என்ற கேள்வியோடு, அவன் புறமிருந்து திரும்பியவள் அப்படியே அமர்ந்துக் கொண்டாள்.

திடிரென அவள் செய்த அந்த செயலில் தன் மீது அவளுக்கு இருக்கும் கோபத்தை உணர்ந்தவன், அவளை நோக்கி வந்தான். கையில் விஷப் பாட்டில் இருக்க, அதை எடுத்துக் கொண்டு விமானம் ஏறவும் செல்ல முடியாது.. இப்போது மகி இங்கு இருக்க, தான் நினைத்ததை செய்யவும் முடியுமா? என்று தெரியாத நிலையில், அவளால் அங்கு அமர தான் முடிந்தது. அதற்குள் அவள் அருகில் அவன் வந்துவிட்டான்.

“சுடர்.. என்ன செஞ்சு வச்சிருக்க நீ.. இப்போ எதுக்கு நீ லண்டன் போக முடிவெடுத்த, வா வீட்டுக்கு போகலாம்..” சாதாரணமாக கூப்பிட்டான். அவன் சுடரை கண்டுபிடித்து அருகே வரும்போதே, அறிவழகனும் அவர்களை கண்டுபிடித்து அவர்கள் அருகில் வந்திருந்தான்.

மகி பேசியதற்கு எந்தவித உணர்வுகளையும் காட்டாமல், அவன் யாரோ போல நினைத்து அமர்ந்திருந்தாள். அவளின் கோபத்தை புரிந்துக் கொண்டவனாக, அவள் நடந்துக் கொள்ளும் விதத்தை நினைத்து கோபப்படாமல், “சுடர்.. முதலில் இங்க இருந்து கிளம்பு.. வீட்டுக்கு போகலாம்” என்று அவள் உடைமைகளை கையில் எடுத்தான். சில தினங்களாக அவள் மீது கோபம் கொண்டிருந்தவனா? அவன்..

“யார் நீ?  எதுக்கு இங்க வந்த? என்னை எதுக்கு வீட்டுக்கு கூப்பிட்ற? நான் லண்டனுக்கு போனா உனக்கென்ன? எனக்கு யாருமில்ல, எனக்கு யாரும் வேண்டாம்.. யாரும் எனக்காக கவலை பட வேண்டாம்.. ஒழுங்கா இதெல்லாம் இங்க வச்சிட்டு போ இங்க இருந்து..” அவனை உதாசீனப்படுத்தியவளாக கோபத்துடன் அவள் பேசிக் கொண்டிருக்க, அதற்குள் அவர்களுக்கு அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் கவனிக்க தொடங்கியிருந்தனர்.

“சுடர் உன்னோட கோபம் எனக்கு புரியுது.. எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம் வா..” என்று அவள் கையை பிடித்தான்.

அவன் பிடியை உதறியவளோ, “நான் யார்க்கிட்டேயும் எதுவும் பேச வேண்டியதில்ல.. நான் பேச வேண்டியதை பேசியாச்சு, அதுக்கான பதிலையும் கேட்டாச்சு.. இனி வேற என்ன இருக்கு கேக்க, நான் லண்டனுக்கு போக முடிவு செஞ்சுட்டேன்.. என்னை தடுக்குற உரிமை உனக்கில்லை..” என்றவள், அவனிடமிருந்து தப்பிக்க, தன் உடமைகளை அவனிடம் இருந்து பிடுங்கினாள். அதை எடுத்துக் கொண்டவள், விமானம் ஏறும் முடிவோடு கிளம்பினாள்.

ஆனால் அவளை போகவிடாமல் அவன் கைகள் அவளது கைகளை இறுக்கமாக பிடித்தது. அவனது பிடியிலிருந்து தன்னை தளர்த்திக் கொள்ள அவள் போராடியதில், அவள் கையில் வைத்திருந்த உடமைகளை கீழே நழுவவிட்டாள்.

“ஹே.. என்ன பண்ற, உனக்கு இன்னைக்கு எங்கேஜ்மென்ட் தானே, அதை விட்டுட்டு இங்க ஏன் வந்த.. உன்னோட வீட்டு பகத்துல தான் இருக்கேன், என்னை வந்து பாரு மகிழ்னு கெஞ்சினேனே, அப்போ எதுக்கு வந்தன்னு கேட்டுட்டு இப்போ நீ எதுக்குடா இங்க வந்த.. என்னோட கையை விடுடா.. ஃப்ளைட்டுக்கு டைம் ஆச்சு.. நான் போகனும்”

“நீ லண்டன்க்கு போகப் போற விஷயம் எனக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது சுடர்..  அதான் ஓடி வந்தேன்.. நீ லண்டனுக்கு போகக் கூடாது சுடர்.. உன்னை நான் போக விடமாட்டேன்” இன்னும் பிடியை விடாமல் பேசிக் கொண்டிருந்தான்.

“என்ன போகக் கூடாதுன்னு சொல்ல உனக்கென்ன உரிமை இருக்கு? நீ எனக்கு யாரு? என்மேல காதல் இல்லைன்னு சொல்லிட்ட, அப்புறம் நமக்குள்ள என்ன சம்பந்தம்? எனக்கு உரிமையான அப்பாவும் சித்தியுமே என்னை லண்டனுக்கே போய்டுன்னு சொல்லிட்டாங்க.. அப்புறம் என்னை தடுக்க நீ யாருடா? நான் லண்டனுக்கு போகத்தான் போறேன், டைம் ஆச்சு என்னை விடு..” என்று திரும்ப அவன் பிடியிலிருந்து அவள் விலக முயற்சித்தாள். அருகிலிருந்தவர்களோ, சாதாரண வாக்குவாதம் என்று அமைதியாக வேடிக்கை பார்த்திருந்தனர். இப்போதோ பிரச்சனை பெரிதாக தெரிந்ததால்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.