(Reading time: 14 - 28 minutes)

அவன் காலை பார்த்தான்.

அங்கே முடி படர்ந்திருந்தது. "அவளோட கால் எவ்வளவு வழு வழுன்னு இருக்கு. எனக்கும் இருக்கே கரடி மாதிரி", என்று நினைத்து "ச்சி எதுக்கு இப்படி எல்லாம் யோசிக்கிறேன்?", என்று நினைத்து நினைவுகளை வேறு பக்கம் திருப்ப முயன்றான். ஆனால் அதுவோ போவேனா என்று அடம் பிடித்தது.

கட கட என்று பேன்ட்டை போட்டவளுக்கு எப்படி அவன் முகத்தை பார்க்க என்று தயக்கமாக இருந்தது.

"சித்தி எவனை மயக்க போறன்னு கேக்குற மாதிரி, நான் வேணும்னே செஞ்சேன்னு தப்பா நினைப்பானோ?", என்று நினைத்து தவித்து போனாள்.

தயக்கத்தை உதறி வெளியே வந்தவள் அவன் முன்பு போய் தலை குனிந்த படியே நின்று "பாத்ரூம்ல ஈரமா இருந்தது அத்தான். அதான் உள்ள வச்சு மாத்தினேன் சாரி", என்று சொல்லி விட்டு கிட்சன் உள்ளே ஓடி விட்டாள்.

சூர்யா இதழ்களில் சிரிப்பு தவழ்ந்தது. "மறக்கணும்னு நினைச்சா இவளே விட மாட்டா போல?", என்று நினைத்து கொண்டு குளிக்க சென்றான்.

அவன் குளித்து முடித்து வெளியே வரும் போது, இவள் தோசையை விழுங்கி கொண்டிருந்தாள்.

அவனை பார்த்ததும் "கிளம்பலாமா அத்தான்?", என்று எழுந்தவளை "இன்னொரு தோசை சாப்பிடு. நேரம் ஆகலை", என்று உக்கார சொன்னான்.

"நீங்க சாப்பிடலையா?"

"உன்னை விட்டுட்டு வந்து சாப்பிட்டுக்குறேன்"

"நான் வேணா தனியா போய்க்கவா?"

"காலேஜ் வரைக்கும் வரலை. ஆனா பஸ் ஸ்டாண்ட்ல விடுறேன். போயிருவன்னா சொல்லு. இல்லைன்னா காலெஜ்லே விடுறேன்"

"இல்லை இல்லை நீங்க பஸ் ஏத்தி விடுங்க போதும்"

"சரி சாப்பிடு", என்று சொல்லி விட்டு தன் பைக்கை வெளியே எடுக்க சென்றான்.

பேகை எடுத்து கொண்டு, வீட்டு சாவியையும் அதன் அருகில் இருந்த அவனுடைய பரிசையும் எடுத்து கொண்டு வீட்டை பூட்டி  விட்டு வெளியே வந்த மதி திகைத்தாள்.

"இவன் என்ன காரை எடுக்காம வண்டியை எடுத்து நிப்பாட்டிருக்கான்?", என்று நினைத்து கொண்டு "என்ன அத்தான் வண்டியை எடுத்துடீங்க? கார் எடுக்கலையா?", என்று கேட்டு உதட்டை கடித்து கொண்டாள்.

"காருக்காக அலையுறேன்னு சொல்லிருவானோ?", என்று பயந்தாள்.

"நான் ஆபிஸ்க்கு வண்டில தான் மதி போவேன். அன்னைக்கு உன்னை கூப்பிட, நேத்து அம்மா அப்பா ஊருக்கு போறேன்னு சொன்னதுனால தான் காரை எடுத்தேன். வா ஏறு"

"கேட் பூட்டவா?"

"உள்ள கதவை பூட்டிட்டேல்ல? அது போதும். நான் இப்ப வந்துருவேன்ல? நான் பாத்துக்குறேன். சும்மா கொண்டி மட்டும் போடு"

"ஹ்ம்ம் சரி. இந்தாங்க சாவி, பர்ஸ்"

"தேங்க்ஸ்", என்று அதை வாங்கி சட்டை பையினுள் போட்டவன் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

"எப்படி உக்கார?", என்று வியர்த்து போனாள் மதி. "முன்ன பின்ன செத்தா தான சுடுகாடு தெரியும்? யார் கூட இது வரைக்கும் பைக்ல போயிருக்கேன். இப்ப இவன் பின்னாடி உக்காந்து விழுந்து வைக்க போறேன். திட்ட போறான்", என்று நினைத்தாள்.

"உக்காரு கலை"

"ஹ்ம்ம்", என்ற படியே ஏறி அமர்ந்தாள்.

அமர்ந்தவுடன் வண்டியை எடுத்த உடனே, அவன் மீது போய் விழுந்தாள். "ஐயோ இப்ப திட்ட போறான்", என்று நினைக்கும் போதே, "தோளை பிடிச்சுக்கோ கலை", என்று சொல்லி விட்டு வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.

சிறு நடுக்கத்துடன் அவன் தோள் மீது கை வைத்தாள் மதி.

அவளை பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டவன், "சாயங்காலம் நானே கூப்பிட வரேன் சரியா? நீ காலெஜ்லே நேத்தே மாதிரி நில்லு. அப்புறம் உன்னோட பிரண்ட் வீட்டுக்கு போயிட்டு ரிசப்ஷனுக்கு சொல்லிட்டு வரலாம்", என்றான்.

"ஹ்ம்ம் சரிங்க அத்தான்"

"கலை பஸ் வந்துட்டு பாரு? உன் காலேஜ் சொல்லியே டிக்கட் எடு"

"சரி அத்தான் வரேன்", என்ற படியே ஏறி கொண்டவள் உள்ளே போய் அமர்ந்ததும் வெளியே அவனை பார்த்தாள்.

தன்னை அறியாமலே அவள் உதடுகள் புன்னகையையும், அவள் கைகள் சின்ன டாட்டாவையும் அவனுக்கு வழங்கின.

அவனும் சிரித்து கொண்டு அவளுக்கு கை ஆட்டினான்.

கிளாசில் போய் அமர்ந்தவுடனே ஆவலுடன் "நேத்து என்ன ஆச்சு?", என்று கதை கேக்க ஆரம்பித்தாள் காவ்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.