(Reading time: 17 - 34 minutes)

றுநாள் பங்குனி உத்திரம் அன்று செழியன் அப்பா சிறு வயதில் அடைக்கலம் தேடி வந்த இலஞ்சி முருகன் கோவிலில் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்து இருக்க, செழியன் வீட்டில் எல்லோரும் கோவிலுக்கு சென்றனர். செந்தில், செல்வி அவன் பெற்றோரும் அங்கே வந்து சேர்ந்தனர்.

காலையில் பூஜை முடிந்து சிறப்பு பூஜைக்காக, பக்தர்கள் பால் குடம் எடுத்து வர, அதில் வடிவு ஆச்சியும் இருந்தார். அன்றைக்கு அந்த ஊரே அவரை பார்த்து வியந்தது.

ஆச்சியோடு அவர் குடும்பமும் இருக்க, அவர்களை பார்த்த செழியன் வீட்டினருக்கும் மகிழ்ச்சி..

எல்லோரும் சாமி கும்பிட்டு வரவும், அன்னதானம் நடக்கும் இடத்திற்கு வந்தனர். வழக்கமாக சிவஞானம் ஆரம்பித்து வைப்பார்.

இந்த முறை ஊர்பெரியவர்களிடம் பேசினார்.

“ஐயா.. என் மவன் செழியனுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்கோம்.. அதனால்.. இந்த வருஷம்  அவனும் அவன் வருங்கால மனைவியும் ஆரம்பிச்சு வைக்கணும்ன்னு ஆசைபடுதேன்..” என்று கேட்க,

“அதுக்கென்ன ஐயா.. உங்க எண்ணம் போலே பண்ணிபுடலாம்.. ஆமா .. அவனுக்கு எங்க பொண்ணு எடுக்கீக?”

“நம்ம நமசிவாயம் ஐயா பேத்திதான் பொண்ணு”

“ரொம்ப சந்தோஷம்... ஆனாக்க அவங்க வீட்டுலேர்ந்து யாரும் கோவிலுக்கு வாறதில்லையே.. வருஷா வருஷம் அவங்க கட்டளைக்கு ஆள் மட்டும் அனுப்பி விடுவாக..”

“இல்லையா.. இந்த வருஷம் அவங்க குடும்பம் மொத்தமும் வந்து இருக்காக” என , எங்கே என பார்க்க, அவர்கள் எல்லோரும் அந்த பந்தலை நோக்கி வந்தனர்.

வடிவு ஆச்சியை பார்த்தவர்கள்,

“அம்மா.. உங்கள நம்ம ஊர்லே பார்த்தது ரொம்ப சந்தோஷம்.. இப்படி ஊருக்குள்ளே வாரமாலே இருந்துடீங்களே.. எங்க மேலே என்ன கோவம் உங்களுக்கு?”

“அப்படி எல்லாம் இல்லை யா.. கடைசியா இங்கன வந்துட்டு போகவும் தான் என் கொழுந்தன், ஓரகத்தி, மாமானார், மாமியா எல்லோரும் ஒண்ணா இழந்தோம்.. அதான் இங்கே வரணும்ன்னு நினைச்சாலே அந்த நியாபகம் வந்து எல்லோருக்கும் கஷ்டமா இருக்குன்னுட்டு வாராம இருந்தோம்.. இந்த வருஷம் என் பேத்திகளுக்கு நிச்சயம் செய்துருக்கோம்.. இனியும் வராம இருக்கிறது தப்புன்னு தோணிட்டு. அதான் அவனுக்கு பாலபிஷேகம் செஞ்சு குளிர வச்சு , கும்பிட்டு போகலாம்ன்னு வந்தோம்,”

“நல்லதுங்கம்மா.. இப்போதான் நம்ம சிவஞானமும் சொன்னாருங்க.. இன்னைக்கு புள்ளைகள விட்டு அன்னதானத்த ஆரம்பிக்க சொல்லுவோம்..”

“சரிங்க... “ என, செழியனும், மலரும் சென்று சாப்பாடு பரிமாற ஆரம்பித்து இருந்தனர்.

செழியன் மலரோடு பரிமாறிக் கொண்டே

“ஹேய்... மலர்.. இந்த சர்ப்ரைஸ் எதிர்பார்க்கவில்லை... நீ சொல்லவே இல்லையே?”

“நானே இங்கு வந்தது இல்லை இளா.. ரொம்ப அழகா இருக்கு.. இந்த ஊர்.. கிராமமும் இல்லாம , நகரமும் இல்லாம , அதிலும் இந்த முருகன் கோவில் ரொம்ப அழகு.. “

“ஆமாம்.. அதனால் தான் நான் வருஷம் ரெண்டு, மூணு தடவையாவது இங்கே வந்துருவேன்.. “ என்றவன் “நைட் ட்ரீம்லே மாமாவ நல்லா கவனிச்சியா ? “ என அவளின் முகம் சிவந்தது..

அந்த முக சிவப்பை ரசித்தவன் “அப்போ நான் போனில் கொடுத்தது எல்லாம் , கனவில் திருப்பி கொடுத்து இருப்ப போல இருக்கே..”

இன்னும் முகம் சிவந்தவளாக “அது எல்லாம் ஒன்னும் இல்லை.. சும்மா கனவு காணாதீங்க”

இவர்களின் சீண்டலை கண்டு கொண்ட செந்தில்

“ஐயா.. ராசா.. வந்த வேலைய பார்க்கறியா.. கிடைச்ச கேப்லே எல்லாம் கிடா வெட்டிட்டு இருக்கியே.. இது நியாயமா?”

“உனக்கு ஏண்டா நோவுது..? நான் கிடா வெட்டி, நான் சாப்பிட்டு போறேன்”

“நீ நடத்து மகாராசா.. இப்போ உன் நேரம்.. “ என்றபடி பந்திய கவனிக்க செல்ல, அதன் பின் சாதாரணமாக பேசி சிரித்தபடி மலர் , செழியன் இருவரும் வேலையை கவனித்தனர்.

வடிவு ஆச்சி ஊர் பெண்களோடு அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க, கணேசன், வேலன், சிவஞானம் அவர்களும் ஊர் பெரியவர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். வடிவு அருகில், வள்ளியும், கணேசன் மனைவி, செழியன் அம்மா பார்வதி எல்லோரும் அமர்ந்து இருந்தனர்.

அப்போது கணேசனின் தாய்மாமா வந்தார். நேராக வடிவு ஆச்சியிடம் சென்று,

“அத்தை... என்னை மன்னிசிகிடுங்க.. அந்த கால கட்டத்துலே அறியாம உங்கள என்னை சேர்ந்தவங்க எல்லாம் தப்பா பேசிட்டோம்.. உங்கலாதான் எங்க கணேசன் நல்ல நிலைமைக்கு ஆளாகி இன்னைக்கு நாலு பேர் மெச்ச நடந்துட்டு இருக்கான்.. “ என்று கை கூப்பி வணங்கினார்..

“தம்பி .. என்ன இது..? உன் கூட பொறந்தவள பறி கொடுத்துட்டு நிக்கப்ப நாலு வார்த்த கூட குறைய தான் வரும்.. அத எல்லாம் பெரிசா எடுத்துகிடுவேனா..? என்ன நம்ம வார்தையால கணேசன் மனசு சங்கடபட்டுடக் கூடாதுன்னு தான் நாங்க ஒதுங்கி போனோம்.. மத்தபடி எந்த வருத்தமும் இல்லையா”

“உங்க நல்ல மனசு அத்தை.. என் பேரனுக்கு நம்ம கணேசன் பொண்ண கேக்கலாம்னு நினைக்கேன்.. உங்க விருப்பம் சொல்லுங்க அத்தை..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.