(Reading time: 54 - 107 minutes)

43. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

ன்று விடியற் காலையிலேயே கங்காவும் நர்மதாவும் இளங்கோ யமுனாவின் வீட்டுக்கு வந்திருந்தனர். மூன்று பெண்களும் அங்கிருந்தே கோவிலுக்கு கிளம்புவதற்காக தயாராக ஆரம்பித்தனர்.

இந்த பத்து நாட்களில் தாலி பிரித்து கோர்க்கும் சடங்கிற்கும், அன்று மாலையே நடக்கவிருக்கும் பார்ட்டிக்காகவும் ஏற்பாடு செய்வதும், ஷாப்பிங் செல்வதும் என்று அதிலேயே அனைவரும் மூழ்கி போயிருந்தனர் என்றே சொல்லலாம்.  ஆண்கள் மூவரும் அங்கே துஷ்யந்த் வீட்டிலேயே தயாராகி கோவிலுக்கு செல்வதென்றும், கங்கா முறைப்படி. வீட்டிற்கு வர வேண்டும் என்பதால், அவள் வீட்டிலிருந்தே கிளம்பி வர முதலில் முடிவெடுத்து பின், யமுனா வீடு கோவிலுக்கு அருகிலிருப்பதால் அங்கிருந்து வரலாம் என்று கங்கா முடிவெடுக்க, நர்மதாவும் அவர்களோடு இணைந்துக் கொள்ள முடிவெடுத்தாள்.

சடங்கிற்காக எடுத்த புது புடவையை கட்டிக் கொண்டு மூன்று பெண்களும் தயாராக ஆரம்பித்தனர். ஒருத்தருக்கொருத்தர் பேசி, சிரித்து, கேளி செய்து என்று கலகலப்போடும் மகிழ்ச்சியோடும் இருந்தனர். இந்த 6 வருடத்தில் கங்கா பேசுவது, சிரிப்பது என்பது இயல்பாக குறைந்து போயிருக்க, இப்போது இந்த பத்து நாட்களாக நர்மதாவும் யமுனாவும் அவளை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருந்தனர். அதனால் கங்காவும் இயல்பாக அவர்களது கேளிப் பேச்சுக்களில் இணைந்துக் கொண்டாள்.

மூன்று பெண்களும் எளிமையை விரும்புவதால் அவர்களை அலங்கரித்துக் கொள்ள அழகு நிலையப் பெண்களை ஏற்பாடு செய்யலாம்? என்று கோமதி சொன்ன யோசனையை வேண்டாமென்று மறுத்துவிட்டனர். அவர்கள் புடவை கட்டி, தலையை பின்னிக் கொண்டிருந்த போதே, கோமதியும் விஜியும் காரில் வந்து இறங்கினர்.

“என்னோட மருமகள்கள் ரெண்டுப்பேரும் ரெடியாகியாச்சா?” என்றப்படியே கையில் ஒரு பையோடு அவர் உள்ளே நுழைந்தார்.. தயாராகி கொண்டிருந்தவர்களை பார்த்து “அழகா இருக்கீங்க..” என்று திருஷ்டி கழித்தவர், பின் பையிலிருந்த இரண்டு நகைப் பெட்டிகளையும் கையில் எடுத்தார்.

“கங்கா இது உனக்கு சேர வேண்டியதும்மா.. என்னோட மாமியார் இதை எனக்கு கொடுத்தாங்க, எவ்வளவோ கஷ்டம் வந்தப்பவும் இதை விக்கல.. இவ்வளவு நாள் என்கிட்ட இருந்ததது..  இப்போ நான் அதை என்னோட மூத்த மருமகளான உனக்கு கொடுக்கிறேன்..” என்று அவளிடம் கொடுத்தார்.

“எனக்கு மட்டுமா.. உங்களோட நகைகளை எனக்கு மட்டும் கொடுத்தா எப்படி அத்தை.. உங்களுக்கு ரெண்டு மருமகள்கள் இருக்கோம்.. எங்க ரெண்டுப்பேருக்கும் சேர்த்து கொடுங்க..”

“அக்கா அத்தை எனக்குன்னு தனியா வாங்கி வச்சிருக்காங்க.. முன்னமே என்கிட்ட கொடுத்தாங்க.. நான் தான் மூத்த மருமக வந்ததும் வாங்கிக்கிறேன்னு சொல்லிட்டேன்..”

“உனக்குன்னு வாங்கி வச்சிருந்தாலும், இது பரம்பரையா வச்சிருக்க நகை, இதை நான் மட்டும் எடுத்துக்கிறதுக்கு ஒரு மாதிரி இருக்கு..” என்றவள்,

“அத்தை இதை நாங்க ரெண்டுப்பேருமே பிரிச்சு எடுத்துக்கிறோம்.. இதுல உங்களுக்கு ஒன்னும் ஆட்சயபனை இல்லையே..” என்றுக் கேட்டாள்.

“நான் உங்களுக்கு சேர வேண்டியதை கொடுத்திட்றேன். அப்புறம் அதை நீங்க எப்படி எடுத்துக்கிறதும் உங்கள் விருப்பம்மா.. நீ வந்ததும் வாங்கிக்கிறதா தான் நர்மதா சொன்னா.. அவ வாய் முகூர்த்தம் சீக்கிரம் பலிக்கணும்னு வேண்டிக்கிட்டேன்.. கடவுள் என்னோட வேண்டுதலுக்கு செவி சாச்சிட்டாரும்மா..” என்று கோமதி உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

“அதுவும் ரெண்டு தங்கமான மருமகள்களை கொடுத்திருக்கார் அண்ணி..” என்று விஜியும் கோமதியோடு சேர்ந்துக் கொண்டார்.

யமுனா இதையெல்லாம் மகிழ்ச்சியோடு  பார்த்தப்படி நின்றிருக்க, கோமதி அவளிடமும் ஒரு சிறு நகைப் பெட்டியை கொடுத்தார்.

“எதுக்கு அத்தை இதெல்லாம்.. இப்போ தான் அக்கா கல்யாணத்துக்கு நகையெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க.. இளன் விட்டிலிருந்தும் நகை கொடுத்திருக்காங்க.. பத்தாததுக்கு மாமா வேற கல்யாணத்துக்கு நகை கிஃப்ட் பண்ணாங்க.. அதுவே எனக்கு போதும் அத்தை..” என்று மறுத்தாள்.

“அதெல்லாம் இருக்கட்டும்.. இந்த அத்தை  கொடுத்தா வாங்கிக்க மாட்டியா? இளங்கோ என்னை அம்மான்னு கூப்பிட்றான்.. அதுவுமில்லாம நீ கங்காவோட தங்கச்சின்னா எங்க வீட்டு பொண்ணும் கூட, அதனால இதை வாங்கிக்கணும்..” என்று அவள் கையை பிடித்து அதில் நகைப் பெட்டியை வைத்தார். யமுனாவோ பாவமாக கங்காவை பார்க்க, வாங்கிக் கொள்ள சொல்லி அவள் கூறியதும் தான் யமுனா அதை வாங்கிக் கொண்டாள். பின் நேரமாகவும் தேவையான நகைகளை பூட்டிக் கொண்டு மூன்று பேரும் தயாரானதும், ஐவரும் கோவிலுக்கு கிளம்பினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.