(Reading time: 54 - 107 minutes)

றைக்குள் நுழைந்த மனைவியை துஷ்யந்த் இமைக்காமல் பார்த்தான். காரணம் அவள் அழகோவியமாக நின்றிருந்தாள். எப்போதும் அவள் அழகு தான், ஆனால் இன்று அவளது  அதிகப்படி அலங்காரம் அவளுக்கு இன்னும் அழகு சேர்த்தது. கோவிலிலும் சரி, பார்ட்டியிலும் சரி, அவள் மீது இருந்து கண்களை நகர்த்த முடியாமல் தவித்தான். ஆனால் செல்வா, இளங்கோ இருவரின் கேளிப் பேச்சுக்களால் அப்போது அவன் உணர்வுகளை கட்டுக்குள் வைக்க வேண்டியதாக போயிற்று, ஆனால் இப்போது அவனது அறையில், இல்லையில்லை இனி இது அவர்களது அறை, அதை நினைத்தாலே உள்ளம் இனித்தது. அவர்களது அறையில் அவர்களுக்கான தனிமையில் அவனது உணர்வுகள் தூண்டப்பட்டு இருந்தது.

ஆனால் அவனுக்கு நேர்மாறாக கங்காவோ பதட்டத்தில் இருந்தாள். அன்று பண்ணை வீட்டில் கூட, அவனோடு அவளால் சுலபமாக நெருங்க முடிந்தது. ஆனால் இன்று இந்த பதட்டத்தை அவளால் தள்ளி வைக்க முடியவில்லை. அவனுக்கு அருகில் வந்தவள், முயன்று அவனை பார்த்து புன்னகைத்தாள். எப்போதும் அவளது உணர்வுகளை புரிந்துக் கொண்டு விலகி நிற்பவனோ, இன்று அவன் இருந்த மகிழ்ச்சி மனநிலையில் அவளது நிலையை புரிந்துக் கொள்ளாமல், அவளை இறுக்கி அணைத்திருந்தான்.

அவனது முரட்டுத்தனமான அணைப்பில் திடிரென அவளது உடலில் நடுக்கம் ஏற்பட்டது. அதை நொடி பொழுதில் உணர்ந்தவன், பதறி அவளை விடுவித்தான். “என்னாச்சு கங்கா.. ஏன் இப்படி உடம்பு நடுங்குது.. நான் இப்படி நடந்துக்கிட்டது உனக்கு பிடிக்கலையா?”

“சேச்சே அப்படி இல்ல.. என்னன்னு தெரியல.. கொஞ்ச நேரமாகவே உடம்பு படபடன்னு இருக்கு.. இந்த சூழ்நிலை எனக்கு நம்மளோட கல்யாணத்தை ஞாபகப்படுத்துது. உங்களோட இருந்த  அந்த முதல் முதல் நாள், இரவு, உங்களோட அந்த முதல் அணைப்பு எல்லாம் ஞாபகத்துக்கு வருது. இப்போ இருக்க திடமான மனசு அப்போ எனக்கு இல்ல.. அப்போ ரொம்பவே உங்களோட இருக்க தனிமையை நினைச்சு பயந்தேன். அந்த நேரம் வாணிம்மா இல்லன்னா நான் இவ்வளவு தூரம்  இந்த வாழ்க்கையை கடந்து வந்திருப்பேனான்னு தெரியல.. அதெல்லாம் மறக்கணும்னு தான் நினைக்கிறேன்.. ஆனால் இந்த சூழ்நிலை எனக்கு தேவையில்லாம இதையெல்லாம் ஞாபகப்படுத்திடுச்சு..” என்று இதுவரை வேறு திசையை பார்த்து பேசிக் கொண்டிருந்தவள், அப்போது தான் அவன் முகத்தை பார்க்க, அதில் இருந்த வேதனையை கண்ட போது தான், அவள் என்னவெல்லாம் பேசியிருக்கிறாள் என்பதை உணர்ந்தாள்.

“இந்த நேரம் நாம எப்படி இருக்க வேண்டிய நேரம், ஆனா இப்பவும் உங்களை கஷ்டப்படுத்துறேன் இல்ல?”

“நீ இப்படி மனசுவிட்டு பேசணும்.. அதுதான் எனக்கு வேணும்.. முன்ன நடந்ததை என்னால மாத்த முடியாது.. ஆனா இனி உன்னை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தி பார்க்க மாட்டேன்..”

“அப்பவும் நீங்க சுயநினைவோட அப்படி நடந்துக்கலையே.. உங்கக் கூட சந்தோஷமா ஒரு வாழ்க்கை அமையாதான்னு காத்துக்கிட்டு இருந்தேன்.. இப்போ எல்லாம் சரியாகி வந்திருக்கிற நேரத்துல இதெல்லாம் தானா மறந்து போகணும்.. ஆனா மறக்காம என்னை கஷ்டபடுத்திக்கிட்டு உங்களையும் வேதனை படுத்திக்கிட்டு இருக்கேன்..”

“நடந்தது ஒன்னும் சாதாரண சம்பவம் கிடையாது.. உடனே எல்லாம் மறந்து போக, இப்போ அது ஞாபகம் வந்ததுலேயும் தப்பும் இல்ல.. நாம இதைப்பத்தியே பேசிட்டு இருக்க வேண்டாம்.. இப்போ தான் நீ இங்க வந்ததா வச்சிக்குவோம்.. நம்ம அறைக்கு உன்னை வரவேற்கிறேன்.. உனக்கு இங்க சில சர்ப்ரைஸ்ல்லாம் இருக்கு..” என்று அவளை வரவேற்றான்.

“சர்ப்ரைஸா? என்ன சர்ப்ரைஸ்?”

“இங்க என் பின்னாடியே வா..” என்று அவளை வார்ட்ரோப் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

“இது 5 வருஷமா உனக்காக நான் வாங்கி வச்சிருந்த கிஃப்ட்.. உனக்கு நல்லா இருக்கும், அழகா இருக்கும்னு நினைச்சு ஒன்னொன்னா வாங்கி வச்சேன்.. ஆனா அதெல்லாம்  உன்கிட்ட கொடுக்கிற தைரியம் இல்ல.. கொடுத்தாலும் வாங்கிக்க மாட்டேன்னு தெரியும்.. ஆனா இப்போ இதை கொடுக்கிறதுக்கு எனக்கு உரிமை இருக்கு.. இதெல்லாம் நீ யூஸ் பண்ணனும்.. அது தான் எனக்கு சந்தோஷமே..” என்றதும் அவன் அவளுக்காக வாங்கி வைத்ததையெல்லாம் எடுத்து ஆசை தீர பார்த்தாள்.

“இதுல சுடிதாரெல்லாம் இருக்கே.. நான் புடவையை தவிர வேற எதுவும் போட்றதில்லையே!!”

“உனக்கு ஒன்னும் வயசாகிடல.. நம்ம கல்யாணத்துக்கு முன்ன சுடிதார்ல்லாம் போட்டுட்டு தானே இருந்த.. அதனால இப்போ போட்டா என்ன தப்பு.. ஒருவேளை இங்க பெரியவங்க முன்னாடி சுடிதார் போட்றதுக்கு சங்கடமா இருந்தா, நாம குன்னூர்க்கு போவோமில்ல, அங்க போட்டுக்கோ.. ஆனா இங்க அம்மாவும் அத்தையும் நீ சுடிதார் போட்டாலும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க..”

“அவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க தான்.. ஆனா திடிர்னு மாற முடியாது.. எனக்கு கொஞ்சம் நேரம் எடுக்கும்.. ஆமாம் நாம குன்னூர் போகப் போறோமா?

“ஆமாம் எப்போ உன்னை அங்க கடத்திட்டு போவோமோன்னு இருக்கு.. அதனால் சீக்கிரமா போக ஏற்பாடு செய்றேன்..”

“ம்ம் கண்டிப்பா.. எனக்கும் உங்க மனைவியா குன்னூர்க்கு போக ஆசையா தான் இருக்கு.. யார்க்கிட்டவும் சொல்லாம மறைமுகமா தான் அங்க என்னோட வாழ்க்கை ஆரம்பிச்சுது.. இப்போ நீங்க தான் என்னோட கணவன் என்று எல்லோர்க்கிட்டேயும் சொல்லணும்.. ஆமாம் இவ்வளவு தான் உங்க சர்ப்ரைஸா? நீங்க சொன்னதை பார்த்தா நான் பெருசா எதிர்பார்த்தேன்..”

“இருக்கு அதுக்கு முதலில் நீ கண்ணை மூடணும்..” என்றவன், அவள் கண்களை ஒரு துணியால் கட்டினான்.

“அய்யோ எதுக்கு கண்ணை கட்றீங்க..?” என்று அவள் கேட்பதை கூட கேட்காமல் அவளை மிக மெதுவாக தான் தொட்டான். முதலில் அணைத்த போது அவளது உடலில் ஏற்பட்ட நடுக்கம் இன்னும் அவனது மனதிற்கு வேதனையாக தான் இருந்தது. ஆனால் அதை அவளிடம் காட்ட அவன் விரும்பவில்லை. ஏற்கனவே சொன்னது போல், இதற்கு முன் நடந்ததை மாற்ற முடியாது.. ஆனால் இனி அவன் நடந்துக் கொள்வதில் தான், அவளுக்கு வேதனையாக இருந்த பழைய விஷயங்களை அவள் மறக்க முடியும்..

இந்த முறை தொட்டதில் அவள் சாதாரணமாக தான் இருந்தாள். அப்படியே அவளை அறையின் இன்னொரு மூலைக்கு அழைத்துச் சென்றான். மெதுவாக அவளது கண்கட்டை அவிழ்த்தவன், சுவற்றில் மாட்டியிருந்த திரையை விலக்கினான். அந்த திரைக்கு பின்னால் இருந்ததை பார்த்து அவள் அதிசயித்து போனாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.