(Reading time: 54 - 107 minutes)

“கங்கா.. நமக்கு தெரிஞ்ச ஒரு கிளையண்ட்  ஸ்கூல் நடத்துறாரு..  கொஞ்ச மாசமாவே அவர்  அந்த ஸ்கூல் நடத்துற பொறுப்பை யார்க்கிட்டயாவது ஒப்படைச்சிட்டு பிள்ளைங்களோட செட்டில் ஆகற ஐடியா இருக்குன்னு சொல்லிட்டு இருந்தாரு.. அப்போ எனக்கு உன்னோட ஞாபகம் தான்.. அந்த ஸ்கூலை நீ நடத்தணும்னு நான் எதிர்பார்த்தேன்.. அப்போ அதுக்கு நீ ஒத்துக்க மாட்டேன்னு அமைதியா இருந்தேன்.. இப்போ ரெண்டு நாள் முன்னக் கூட அந்த கிளையண்ட் ஸ்கூல் பத்தி பேசினாரு.. நர்மதாவும் செல்வாக்கிட்ட திரும்ப வேலைக்கு போலாம்னு இருக்கறதா சொல்லியிருக்கா.. நீயும் ஆஃபிஸ்க்கு கூப்பிட்டாலும் வரமாட்டேங்குற.. இன்ஸ்டியூட்டையும் ரம்யா பொறுப்பிலேயே விட்டுட்ட..  அதனால நாங்க என்ன முடிவு செஞ்சிருக்கோம்னா, இந்த ஸ்கூலை நாம தான் இனி எடுத்து நடத்தப்போறோம்.. அதாவது நீ, நர்மதா, யமுனா 3 பேர் தான் இந்த ஸ்கூலை எடுத்து நடத்தப் போறீங்க..”

“நர்மதாவும் யமுனாவும் மட்டும் இந்த பொறுப்பை ஏத்துக்கிட்டும்ங்க.. எனக்கு ஸ்கூலை பத்தி என்ன தெரியும்..”

“அக்கா நாங்க வெறும் B.end படிச்ச டீச்சர்ஸ் தான்.. நீங்க தான் நிர்வாகம் படிச்சிருக்கீங்க.. உங்களை விடவா நாங்க நல்லா நிர்வாகம் செய்வோம்.. அக்கா இப்போ நம்ம நாட்டுல கல்வி எப்படி இருக்குன்னு பார்க்கிறீங்கள்ள.. அதனால நம்ம விருப்பப்படி இந்த ஸ்கூலை கொண்டு வரலாம்க்கா” என்றவள், “என்ன சொல்ற யமுனா” என்று அவளது விருப்பத்தையும் கேட்டாள்.

“ஆமாம்க்கா நர்மதா சொல்றது சரி தான்.. நீ தான் முக்கியமா இந்த பொறுப்பை ஏத்துக்கணும்.. நீயும் நர்மதாவும் ஸ்கூல் மேனேஜ்மெண்ட்டை ஏத்துக்கோங்க.. நான் இங்க டீச்சரா வேலை செய்கிறேன்..” என்றாள். அதைக் கேட்டு துஷ்யந்தன் கோபப்பட்டான்.

“எதுக்கு யமுனா நீ விலகியிருக்க நினைக்கிற.. இதுவே உங்க அப்பா இப்படி ஒரு பொறுப்பை உன்கிட்ட கொடுத்தா இப்படித்தான் பேசுவியா? உனக்கு கல்யாணம் ஆகியிருக்கலாம்.. இருந்தாலும் உனக்கு அம்மா, அப்பா ஸ்தானத்துல இருந்து எல்லாம் செய்ய வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கு..” என்றவன்,

“என்ன இளங்கோ.. நீ தான் யமுனாக்கிட்ட இப்படியெல்லாம் சொல்லிக் கொடுக்கிறியா? இங்கேயே வந்து இருங்கன்னு கேட்டதுக்கு தனியா இருக்கோம்னு நீ சொன்னதும் ஒத்துக்கிட்டோமே, அதான் இப்படியெல்லாம் செய்றியா?” என்று இளங்கோவிடம் கோபப்பட்டான்.

“அய்யோ துஷ்யந்த்.. இந்த ஸ்கூல் மேட்டரே எனக்கு இப்போ தானே தெரியும்.. நான் வேண்டாம்னு சொல்லுவேன்னு நினைச்சுக்கிட்டு யமுனா அப்படி பேசியிருப்பா..” என்று சமாதானம் பேசியவன், பின் யமுனாவிடம்,

“இங்கப்பாரு யம்ஸ்.. நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன் இல்ல.. நம்ம பதிப்பகம் ஆரம்பிக்க முழுக்க காசு கொடுத்தது துஷ்யந்த் தான்.. நானும் அதை கடனா ஏத்துக்கிட்டு மாசம் மாசம் ஒரு தொகையை திருப்பி கொடுப்பேன்.. கொஞ்ச நாள் வரை அப்படி வாங்கிட்டு இருந்த துஷ்யந்த் அப்புறம் உன்னோட அண்ணன் கிட்ட இப்படி தான் கொடுப்பியான்னு கேட்டாரு.. அதிலிருந்து நான் அந்த காசை திருப்பி கொடுக்க நினைக்கல.. அதனால நீ எனக்காக பார்த்து இந்த வாய்ப்பை மறுக்காத.. உண்மையிலேயே ஒரு ஸ்கூல் நடத்தறது நல்ல விஷயம்.. 3 பேரும் செய்ங்க..” என்று கூறினான். பின் யமுனாவும் ஒத்துக் கொண்டாள்.

“அப்புறம் கங்கா..நானும் ஒரு நல்ல நியூஸோட தான் வந்திருக்கேன்.. உன்னோட கதையை பப்ளிஷ் செஞ்சாச்சு.. அதுல நீ சொன்னது போல, சகுந்தலா துஷ்யந்தன்னு உன்னோட பேரை போட்டு, கூட உன்னோட ஈமெயிலும் சேர்த்திருக்கேன்..” என்று பதிப்பிட்ட புத்தகத்தை அவளிடம் கொடுத்தான்.

“எனக்கு இப்போக் கூட என்னை வெளிப்படையா காமிச்சிக்க விருப்பமே இல்லை.. இதுங்க ரெண்டும்  சொல்லி தான், இதுக்கு நான் சம்மதிச்சேனே..”

“அக்கா இந்த முறை உங்க சொந்த கதையே நாவலா எழுதப் போறதா சொல்லியிருந்தீங்களே.. அது இந்த புக் தானே, ஆமாம் உன் நேசமதே என் சுவாசமாய்!! என்று காதல் தலைப்பா இருக்கு..”

“ஆமாம் இந்த கதை உங்க மாமாவோட காதலை மையமா வச்சு எழுதினது. என்னோட தனிப்பட்ட கதையை கேட்கிறவங்க ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொல்வாங்க.. சில பேருக்கு அது தியாகமா தெரியலாம்..சில பேர் நான் கஷ்டப்பட்டதா நினைக்கலாம். சில பேர் நான் வாழ தெரியாதவன்னு சொல்வாங்க.. சில பேருக்கு என்னோட முடிவு பைத்தியக்காரத்தனமா தெரியும்.. இத்தனை வருஷத்துக்கு பிறகு திரும்ப நான் மாமாவோட சேர்ந்ததுக்கு காரணம் அவரோட நேசம் தான்.. அவர் மட்டும் என்னை அப்பவே விட்டுடணும்னு நினைச்சிருந்தா, இப்போ எனக்கு இந்த வாழ்க்கை கிடைச்சிருக்காது..”

“உண்மை தான் கங்கா.. அப்போ நீ சகுந்தலான்னு பேர் வச்சப்போ துஷ்யந்துக்காகன்னு நினைச்சேன்.. ஆனா நீ அந்த சகுந்தலா போல தான் வாழ்ந்திருக்க.. இப்போ உன்னோட வாழ்க்கை சரியானதுல நான் ரொம்பவே சந்தோஷப்பட்றேன்..” என்று இளங்கோ நெகிழ்ச்சியோடு கூறினான்.

அதற்கு நர்மதாவும் யமுனாவும் சேர்ந்து, “ஆமாம் அந்த துஷ்யந்த மகாராஜா காதல் மனைவியை மறந்து போனாரு.. இந்த துஷ்யந்த மகாராஜாவோ மனைவின்னு தெரியாமலேயே உருகி உருகி காதலுச்சிருக்காரு..” என்று சொல்லி சிரித்தனர். கூடவே இளங்கோ, செல்வாவும் சிரிக்க, அதில் கங்கா வெட்கப்பட்டாள். அதுவரை அவர்கள் பேசியதை பொறுமையாக கேட்டிருந்த துஷ்யந்த்.. தன் மனைவியின் வெட்கத்தை ரசித்துப் பார்த்தான். இயல்பாக வரும் வெட்கத்தை கூட அவனுக்காக ஒத்தி வைத்திருந்தவள், இப்போதெல்லாம் அடிக்கடி வெட்கப்படும் அழகில் சொக்கித்தான் போனான்.  இயல்பாக செல்வது போல் தங்களது அறைக்குச் சென்றவன், எதையோ கேட்பது போல் கங்காவை அழைக்க, அவளை கேளி செய்து தான் நால்வரும் அனுப்பி வைத்தனர். கங்கா அறைக்குள் வந்ததும் துஷ்யந்த் அவளை இழுத்து அணைத்தான்.

“என்ன நீங்க.. எல்லோரும் என்னை கிண்டல் பண்றாங்க தெரியுமா?”

“அதுக்காக என்னோடபொண்டாட்டி வெட்கபடும் போது நான் அமைதியா இருக்கிறதா? என்றவன் அவளது வெட்கத்தை அள்ளி பருகினான்.

மாதங்கள் கடக்க மசக்கையில் தவித்த கங்காவை அனைவரும் கண்ணும் கருத்தாக பார்த்துக் கொண்டனர். இதற்கு நடுவில் யமுனா, நர்மதாவும் கூட தாயாகிய நற்செய்தியை கூறினர். கங்காவிற்கு ஒன்பதாம் மாதம் நெருங்கியதும் அமர்க்களமாக வளைகாப்பு நடத்தினர். பத்தாம் மாதம் ஆரம்பத்தில் அவள் ஆன்மகவை ஈன்றெடுத்தாள். அந்த துஷ்யந்தன் சகுந்தலாவின் மகனான பரதன் பெயரையே அவர்களும் தங்கள் மகனுக்கு சூட்டினார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.